பாம்பாட்டம் சினிமா விமர்சனம் : மிகைப்படுத்தப் பட்ட மந்தமான வரலாற்று அதிர்வு தரும் சோர்வு | ரேட்டிங்: 2/5

0
188

பாம்பாட்டம் சினிமா விமர்சனம் : மிகைப்படுத்தப் பட்ட மந்தமான வரலாற்று அதிர்வு தரும் சோர்வு | ரேட்டிங்: 2/5

இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’.

படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழனிவேல். மக்கள் தொடர்பு – மணவை புவன்.

மர்மமான மங்கம்மா தேவி அரண்மனைக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்றும் முப்படைகளையும் கொண்டு தனது ராஜ்யத்தை உலகறியச் செய்த ராணி மங்கம்மா தேவி (மல்லிகா ஷெராவத்) தனது சமஸ்தானத்தை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் மகாராஜாவின் ஆஸ்தான  ஜோதிடர் ராணி மங்கம்மா தேவியிடம் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் கோபம் அடைந்து ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ராணி மங்கம்மா தேவி ஜோதிடரை சிறை வைத்து, அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார். அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து ராணி மங்கம்மா தேவியை கொன்று விடுகிறது, மேலும் ராணி மங்கம்மா தேவியின் மகள் இளவரசி நாகமணிக்கும் (சாய் ப்ரியா) இதே போல ஒரு ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள்  நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பல வருடங்கள் கழித்து இளவரசி நாகமணி (சாய் ப்ரியா) நாடு திரும்பிய பிறகு மக்களுக்கு நல்ஆட்சி செய்ய முற்படும் போது இளவரசி நாகமணியும் அவரது தந்தையும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறார்கள். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. அந்த அரண்மனைக்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை. எனவே தற்போது அரண்மனை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுகிறது. முன்னாள் ராணியின் ஆவியால் வேட்டையாடப்பட்டதாக நம்பப்படும் அரண்மனையைச் சுற்றி உள்ள மர்மங்களை விசாரிக்க நேர்மையான திறமையான போலீஸ் அதிகாரி மாணிக்கவேல் (ஜீவன்) நியமிக்கப்படுகிறார். போலீஸ் அதிகாரி மாணிக்கவேல் மகன் சரவணன் (ஜீவன்) கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். தன் மகன் ஒரு நிரபராதி என்று  அறிந்தவுடன் மகனை ஜாமினில் எடுக்கிறார் தந்தை. தந்தை அந்த ஆபத்தான வேலைக்கு போகக்கூடாது என்று அவரை கடத்தி வைத்து விட்டு அவருக்கு பதில் சரவணன் அந்த அரண்மனைக்கு செல்கிறார். பல தடைகளைத் தாண்டி அரண்மனைக்குச் சென்று அரண்மனையின் வரலாற்றை தோண்டி எடுக்கிறார் சரவணன். ஆனால் சரவணனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. உலகத்தால் இறந்துவிட்டதாக நம்பப்படும் இளவரசி நாகமணி, அரண்மனையின் ஏழாவது பாதாள அறையில் இரும்புச் சங்கிலியால் உயிருடன் பூட்டப்பட்டுள்ளதை பார்க்கிறார்.  இளவரசி நாகமணி சரவணனிடம், வம்சத்தின் பல உண்மை பின்னணி சம்பவங்களைச் சொல்கிறார். இறுதியாக, அரண்மனைக்குள் வாழும் 60 அடி நீளமுள்ள பாம்பிலிருந்து இளவரசியும் சரவணனும் எப்படித் தப்பினர் என்பதுதான் மீதிக்கதை.

அப்பா போலீஸ் அதிகாரி மாணிக்கவேல் மற்றும் மகன் சரவணன் என இரண்டு கதாபாத்திரத்தில் ஜீவன் நடித்துள்ளார். மகனை விட போலீஸ் அப்பாவாக ஜீவன் கச்சிதமாக பொருந்தி உள்ளார்.

மல்லிகா ஷெராவத் ராணி மங்கம்மா தேவி கதாபாத்திரத்தில் குறைந்த காட்சிகளே தோன்றுகிறார். தனித்து குறிப்பிட்டு பேசும்படி அவரது நடிப்பு அமைய வில்லை.

ரித்திகா சென் சரவணன் காதலி ராதிகாவாக காதலுனுக்காக உறுதுணையாக இருந்து மடிந்து போகும் பாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு தந்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன், யாஷிகா ஆனந்த், வடிவுடையான், பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உட்பட அனைத்து துணைக் கதாபாத்திரங்கள் முழுமையான பங்களிப்பு தந்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை  – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஊர்ந்து நகரும் பலவீனமாக திரைக்கதையை முடிந்த அளவுக்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளனர்.

மோசமான சிஜி காட்சிகளுடன் பலவீனமான திரைக்கதை அமைத்து நாடகத்தன்மையாக படைத்துள்ளார் இயக்குனர் வடிவுடையான்.

மொத்தத்தில் வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ள பாம்பாட்டம் மிகைப்படுத்தப் பட்ட மந்தமான வரலாற்று அதிர்வு தரும் சோர்வு.