காந்தாரா திரை விமர்சனம் : காந்தாரா – அசத்தலான கரடுமுரடான கிராமிய கதை – அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று | ரேட்டிங்: 4/5

0
348

காந்தாரா திரை விமர்சனம் : காந்தாரா – அசத்தலான கரடுமுரடான கிராமிய கதை – அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் – கதாபாத்திரங்கள்:
ரிஷப் ஷெட்டி – காடுபெட்டு சிவா
கவுடா – லீலா
கிஷோர் – முரளிதர்
அச்சுயுத் குமார் – தேவேந்திர சுட்டூரு
ப்ரமோத் ஷெட்டி – சுதாகரா
ஷனில் குரு – புல்லா
பிரகாஷ் துமிநாட் – ராம்பா.
தொழில் நுட்பகலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் – ரிஷப்ஷெட்டி
இசை – டீ.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு – கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக்
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
நிறுவனம் – ஹோம்பாலே பிலிம்ஸ்
வெளியீடு – எஸ் ஆர் பிரபு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னர் அந்த நிலத்தை கிராம மக்களுக்கு வழங்கிய தென் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது.1847ஆம் ஆண்டு கர்நாடகாவின் குந்தாப்பூர் கிராமத்தில் நடக்கும் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியின் அரசன் அமைதி இல்லாத வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறார்,  அவர் ஒரு காட்டின் அருகே ஒரு தெய்வத்தைக் காணும்போது,  இறுதியாக அமைதியை அடைகிறார். அங்குள்ள கிராம மக்களுடன் ஒப்பந்தம் செய்து, வன நிலங்களை தெய்வத்திற்காக மாற்றிக் கொள்கிறார். கதை 1970களில் நுழைகிறது. ராஜாவின் வாரிசுகள் நிலங்களைத் திரும்பக் கோரும்போது சிக்கல் தொடங்குகிறது. ஒரு நாள் அரசனின் வாரிசு அங்கு நடக்கும் பாரம்பரிய கோலத்தில் கடவுள் வேடமிட்டவரை அவமதிக்கிறார். வன நிலம் ஒரு காலத்தில் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என அவர் கூறுகிறார். அவர் உண்மையில் கடவுள் என்றால் காட்டு என்று கேலி செய்கிறார். பிறகு கடவுள் என்று அழைக்கப்பட்டவர் காட்டுக்குள் சென்று மறைந்து விடுகிறார். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அரசனின் வாரிசு நீதிமன்றப் படிகளில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். பின்னர் கதை 90களில் நுழைகிறது. அரசரின்  பரம்பரையைச் சேர்ந்த கிராமத்தின் சாஹிப் (அச்யுத் குமார்) காட்டில் உள்ள மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த சிவன் (ரிஷப் ஷெட்டி) ஒரு குறும்புக்காரன் மற்றும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார். இந்நிலையில் ஒரு நேர்மையான வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) அந்த நிலத்தில் மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார், அது இப்போது காப்புக்காடாக உள்ளது. வன நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, வன நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து காலி செய்யும் முயற்சியில் வன வரம்பு அலுவலர் கிஷோர் குமார் ஈடுபட்டுகிறார்.விஷயங்களை சிக்கலாக்கும் வகையில், அந்த நிலம் தங்களுக்கு ஒரு வரமாக – காடுகளின் தேவதையான பாதுகாவலரின் வரமாக கொடுக்கப்பட்டதாக கிராம மக்கள் நம்புகிறார்கள், எனவே இந்த வெளியாரின் பேச்சைக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. கிராம மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சிவன் அவர்களை எதிர்க்கிறார். இந்த பின்னணியில் சிவன் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் கோலத் திருவிழாவில் கடவுள் வேடம் அணிந்த சிவனின் தம்பி குருவா ஒரு நாள் கொல்லப்படுகிறார். சிவனின் தம்பி குருவை கொன்றது யார்? வன அலுவலர் கிஷோர் குமார், சிவனுக்கு இடையே நடந்த சண்டை என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? கிராமத்தின் சாஹிப் மக்களுடன் இணக்கமாக இருக்கும் காரணம் என்ன? விஷ்ணுவின் வராஹ அவதாரம் ஏன் அடிக்கடி சிவனை தொந்தரவு செய்கிறது? துன்மார்க்கர்களின் பிடியிலிருந்து சிவன் எப்படி கிராம மக்களை காப்பாற்றினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் மீதிக்கதை.

ரிஷப் ஷெட்டி இயக்குனராக நான்காவது படம். எழுத்தாளரும் ஹீரோவான ரிஷப் ஷெட்டி ஒரு சக்திவாய்ந்த கதையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் தனது பாத்திரத்திற்கு நியாயமான முறையில் அதைத் திரையில் அறிமுகப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் படத்தை இயக்கியிருக்கும் விதம், விஷயத்தின் மீதான அவரது பிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் மேக்கிங்கிலும் சரி, படப்பிடிப்பிலும் சரி, ஆற்றல் குறையாமல் சுவாரஸ்யமாக திரைக்கதையை அமைத்த விதம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒருமுறை கொடுத்ததைத் திரும்பப் பெறக்கூடாது என்ற தத்துவப் புள்ளிதான் இந்தக் கதையின் ஹைலைட். மேலும் சிவனாகவும், சிவனின் தந்தையாகவும் ரிஷப் ஷெட்டி இருகதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். நல்ல எமோஷனல் காட்சிகளால் கவர்ந்த ரிஷப் ஷெட்டி.. இரண்டாம் பாதியின் தொடக்கமும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. பிரமாண்டமான கதையின் அமைப்பு, கனமான உணர்ச்சிகள், பிராந்திய தெய்வ நம்பிக்கைகள், நல்ல ஆக்ஷனுடன் கூடிய உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் அற்புதமான கிளைமாக்ஸ் அமைந்ததால் ரிஷப் ஷெட்டி தனது சிறப்பான நடிப்பாலும் இயக்கத்தாலும் இந்தப் படத்தைத் தன் தோளில் ஏற்றி வழிநடத்தி படத்தின் லெவலை உயர்த்தியிருக்கிறார்.
வன அதிகாரி வேடத்தில் கிஷோர் தனக்கே உரிய பாணியில் நடித்து கவர்ந்துள்ளார். அவர் தனது காட்சிகளில் மிகவும் தீவிரத்தை கொண்டு வந்து படத்தின் கதையை திருப்புமுனை கொடுத்துள்ளார்.
நில அதிபதி தேவேந்திர சுத்தூராக அச்யுத் குமார், சிவனின் அம்மா கமலாவாக மானசி சுதிர், கதாநாயகியாக சஸ்தாமி கவுடா, சுதாகராவாக பிரமோத் ஷெட்டி, புல்லாவாக ஷனில் குரு, ராமப்பாவாக பிரகாஷ் துமிநாத், வழக்கறிஞராக நவீன் டி பாடில், குருவாவாக ஸ்வராஜ் ஷெட்டி, சிவனின் உறவினர் சகோதரர் சுந்தராவாக தீபக் ராய் பனாஜே, மோகனாவாக பிரதீப் ஷெட்டி, ரக்ஷித் ராமச்சந்திர ஷெட்டி, தேவேந்திரனின் உதவியாளராக, புஷ்பராஜ் பொல்லாரா, வன அதிகாரி ரகுவாக ரகு பாண்டேஷ்வர், புஷ்பராஜ் பொள்ளூர், ராம்தாஸ், குருவாவின் தந்தையாக பாசுமா கொடகு, லச்சுவாக ரஞ்சன் சஜு, ராஜீவ் பண்டாரியாக ராஜீவ் ஷெட்டி, அதிஷ் ஷெட்டி, தேவேந்திரனின் சிறப்புத் திறன் கொண்ட மகனாக ராதாகிருஷ்ண கும்பலே, தேவேந்திரனின் தந்தையாக ஷைன் ஷெட்டி, ராஜாவாக வினய் பித்தப்பா, ராஜாவின் மனைவியாக பிரகதி ரிஷப் ஷெட்டி ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்துக் கவர்ந்துள்ளனர்.
அரவிந்த் காஷ்யப்பின் மூச்சடைக்கக்கூடிய அழகான ஒளிப்பதிவு. பி. அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்தின் முக்கிய பலம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கோலத்தின் பின்னணியில் உள்ள பாடல்கள் ஒரு நல்ல பாரம்பரிய உணர்வோடு ஈர்க்கின்றன.
கே.எம். பிரகாஷ் பிரதிக் ஷெட்டியின் எடிட்டிங் கச்சிதம். இவர்கள் மூவரின் காம்போ படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.
ஹோம்பலே படத்தின் தயாரிப்பு மதிப்புகள் எந்த பெரிய பட்ஜெட் படத்தையும் விட குறைவாக இல்லை, இது படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும். உள்ளூர் விழாக்கள் மற்றும் சடங்குகளை படம் எவ்வளவு வண்ணமயமாகவும் அழகாகவும் சித்தரிக்கிறது என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வண்ணங்கள் தெளிவானவை, மெல்லிசை ஒலிகள் மற்றும் தெய்வம் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் அழுத்தமானவை, தெய்வமிடமிருந்து வரும் அந்த கூச்சல் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு சில சிலிர்ப்பை ஏற்படுத்தி படத்தை வேறு லெவலுக்கு உயர்த்துகிறது என்றுதான் சொல்ல முடியும்.
மொத்தத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள காந்தாரா – அசத்தலான கரடுமுரடான கிராமிய கதை – அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.