அழகிய கண்ணே சினிமா விமர்சனம்: அழகிய கண்ணே ஒரு உதவி இயக்குனரின்  வலியை சொல்லும் காதல் கதை | ரேட்டிங்: 2/5

0
266

அழகிய கண்ணே சினிமா விமர்சனம்: அழகிய கண்ணே ஒரு உதவி இயக்குனரின்  வலியை சொல்லும் காதல் கதை | ரேட்டிங்: 2/5

எஸ்தெல் எண்டர்டெயினர் சார்பில் டாக்டர். எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், சீனு ராமசாமியிடம் உதவியாளராக இருந்த விஜயகுமார் இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’.
 இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி, சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி என பலரும் நடித்துள்ளனர்.
 ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, இ.சங்கத்தமிழன் படத்தொகுப்பை கவனிக்க, வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி பாடல் எழுத, என்.ஆர்.ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடனம் – ஐ. ராதிகா, ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, கலை – விஜய் தென்னரசு, தயாரிப்பு மேலாளர்: இளையராஜா செல்வம். மக்கள் தொடர்பு AIM.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பாவுக்கு (லியோ சிவகுமார்)   சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் நாடகம் எழுதுவதும், ஊரில் புரட்சி நாடகங்கள்  நடத்துவதுமாக இருக்கிறார். அவர் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் கஸ்தூரிக்கு (சஞ்சிதா ஷெட்டி), கல்லூரி விழாவில் நாடகம் நடத்த இன்பா உதவி செய்ய அவர் மீது கஸ்தூரிக்கு காதல் வருகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு இன்பா வீட்டில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் கஸ்தூரியின் தந்தையும் மகளின் காதலுக்கு ஓகே சொல்கிறார். ஆனால் கஸ்தூரியின் சித்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சித்தியின் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இயக்குநர் பிரபு சாலமனிடம் பணிபுரிய இன்பாவுக்கு வாய்ப்பு கிடைத்ததால், கஸ்தூரி ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், தம்பதியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சென்னையில் வாழ முடிவு செய்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. ஆனால் லியோ இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் குடும்ப சூழல் காரணமாக குழந்தையை அருகில் இருந்து கஸ்தூரியால் கவனிக்க முடியாமல் போகிறது. இந்நிலையில், கஸ்தூரியின் மாமன் (சித்தியின் தம்பி) இன்பாவை பழி வாங்க முடிவு செய்கிறார். இன்பா இயக்குநர் ஆனாரா? கஸ்தூரி மாமன் ஏன் பழிவாங்க துடிக்கிறார்? விஜய் சேதுபதி பங்களிப்பு என்ன? என்பதை படம் பார்த்து அறிந்து கொள்ளலாம்.பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி இருவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர். சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் கதைக்கு ஏற்றவாறு பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி வந்து போகிறார்கள்.

வலு இல்லாத திரைக்கதையால், ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவு, இ.சங்கத்தமிழன் படத்தொகுப்பு, வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி பாடல் வரிகள், என்.ஆர்.ரகுநந்தன் இசை மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வீணடிக்கப் பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதை தான் இந்த கதை களமும். ஆனால் வலுவில்லா கதையில் ஒரு ஃபீல் குட் தருணம் மட்டுமே இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அந்த காட்சி விளக்குகிறது. தமிழ் சினிமாவில் கையாளப்படும் வழக்கமான கதை என்றாலும் அது அழுத்தமான திரைக்கதை சொல்லால் நிறைய படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அதே போல் அழகிய கண்ணே திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால், சீனு ராமசாமியின் தம்பியும், அவரிடம் உதவி இயக்குனராக இருந்த விஜயகுமார் நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு இருப்பார்.
மொத்தத்தில் எஸ்தெல் எண்டர்டெயினர் சார்பில் டாக்டர். எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள அழகிய கண்ணே ஒரு உதவி இயக்குனரின்  வலியை சொல்லும் காதல் கதை.