அயலான் சினிமா விமர்சனம் : அயலான் குழந்தைகளுடன் பார்த்து மகிழ ஒரு சிறந்த பொங்கல் கொண்டாட்டம் | ரேட்டிங்: 4/5

0
597

அயலான் சினிமா விமர்சனம் : அயலான் குழந்தைகளுடன் பார்த்து மகிழ ஒரு சிறந்த பொங்கல் கொண்டாட்டம் | ரேட்டிங்: 4/5

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன், கோதண்டம், வெங்கட் செங்குட்டுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு கவனித்துள்ளார். மக்கள் தொடர்பு டிஒன் சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர்.
உலகளவில் ஒரு பகுதியில் இரக்கமற்ற தொழிலதிபர் ஆர்யன் (ஷரத் கெல்கரின்) ஒரே நோக்கம் வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த கல்லை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஞ்ஞானிகளிடம் இருந்து திருடிய ஸ்பார்க் எனப்படும் மர்மமான கல்லை பயன்படுத்தி மேற்பரப்பிற்கு அடியில் இருந்து துளையிட்டு கொடிய நோவா வாயுவைப் பிரித்தெடுத்து உலகை தன் கையில் ஆட்டிப்படைக்க நினைக்கிறார். கொடிய நோவா வாயு மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும், தாய் பூமிக்கு தீங்கு விளைவித்தாலும் கவலைப்படாமல் அதை  அடைவதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். மறுபுறம், இயற்கை விவசாயம் செய்து கொண்டும் இயற்கையை பாதுகாப்பாக வைக்க போராட்டமான வாழ்க்கையை தமிழ் (சிவகார்த்திகேயன்) தனது தாய் பானுப்ரியாவுடன் பூம்பாறையில் சந்தோஷமாக வாழ்கிறார். அவர் அவரது தோட்டத்தில் பூச்சிக்கொல்லிகளைக் கூட பயன்படுத்துவதில்லை, ஏனெனில் அவை மண்ணுக்கும் அதை உண்ணும் பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நன்கு அறிந்தவர்.ஆனால் எதிர்பார்த்த வருமானம் இல்லாததும், கடன் தொல்லையும் தாய்க்கு மன வேதனையை தருகிறது.  தன் மகன் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி மகனை சென்னைக்கு அனுப்புகிறார். இந்நிலையில் வேற்று கிரகத்தில் உள்ள வேற்று கிரகவாசிகள் பூமியில் ஸ்பார்க் கல்லால் உயிரினங்களுக்கு ஏற்படப்போகும் அழிவைப் பற்றி கவலைப்படுகின்றன. பூமியில் ஏற்படும் அழிவால் தங்களது கிரகத்துக்கும் ஆபத்து  ஏற்படும் என்பதை அறிகிறார்கள். அதனால் பிரபஞ்சத்தின் சமநிலையை பராமரிக்க பூமியைக் காப்பாற்ற முடிவு செய்கின்றன. பூமியில் இருந்து எப்படியாவது ஸ்பார்க் கல்லை திரும்ப எடுத்து வர இந்த பணிக்காக, அவர்கள் தங்களுடைய கிரகத்தில் இருந்து ஒரு கிரகவாசி ஏலியன் டாட்டூவை (வெங்கட் செங்குட்டுவன்) பூமிக்கு அனுப்புகிறார்கள். சென்னைக்கு வரும் தமிழ் ஒரு சம்பவத்தின் போது யோகி பாபு, கருணாகரன் மற்றும் கோதண்டம்  ஆகியோருடன் ஒரு விபத்தில் சந்தித்து அவர்களுடன் இணைந்து கொள்கிறார். பூமிக்கு வந்தடைந்த ஏலியன் டாட்டூ அப்போது எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தில் மயங்கிய நிலையில் தமிழிடம் மாட்டிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஏலியன் டாட்டூவின் பிரச்சனையை தெரிந்து கொண்ட தமிழ் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார். பூமியில் தரையிறங்கிய ஏலியன் டாட்டூ ஸ்பார்க் எனப்படும் மர்மமான கல்லை கைபடுத்த முயற்சிக்கும் போது என்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறது? தமிழின் வாழ்க்கையில் ஏலியன் டாட்டூ எப்படி கொண்டு செல்கிறது? இந்த போராட்டத்தில் தமிழ் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இறுதியில் ஏலியன் டாட்டூவும், தமிழும் சேர்ந்து எப்படி எதிரி ஆர்யனை அழித்தார்கள் என்று தெரிய வேண்டுமானால் இந்த படத்தை தியேட்டரில் அகன்ற திரையில் தான் பார்க்க வேண்டும்.
எப்போதும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் சிவகார்த்திகேயன் இம்முறை குழந்தைகளை கவரும் கதையில் தனித்துவமான நடிப்பை வழங்கி தனித்து நிற்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். குறிப்பாக நடன காட்சிகள் மற்றும் ஏலியன் டாட்டூவுடன் இணைந்து ஒன்று சேர்ந்து சண்டை போடும் காட்சிகள் மிரட்டியிருக்கிறார்.
ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக அழகாக வந்து கதையோடு பயணித்து கவர்ந்துள்ளார்.
இம்முறை யோகி பாபு, கருணாகரன், மற்றும் கோதண்டம் காம்போ சீரான இடைவெளியில் காமெடிக்கு கைகொடுத்து பெரிய பலம் சேர்த்துள்ளது.
இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், இருவரும் அவர்களது வில்லன் கதாபாத்திரங்களுக்கு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்றும் பானுப்ரியா, பால சரவணன் உட்பட அனைத்து துணை நடிகர்கள் முக்கிய வேடங்களில் தங்கள் பாத்திரங்களில் கண்ணியமான நடிப்பை தந்துள்ளனர்.
டாட்டூவாக வெங்கட் செங்குட்டுவன் தனது நடிப்பிற்காக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மோஷன் கேப்சர் மற்றும் சிஜிஐ மூலம் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் உருவாக கடின உழைப்பை போட்டு டாட்டூ கதாபாத்திரத்தின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் குழந்தைகளை கவரும் விதமாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறது ஏலியனுக்கு குரல் கொடுத்த சித்தார்த்தின் குரல்.
படத்தில் வரும் வேற்றுக்கிரக வாசியின் தோற்ற வடிவமைப்பு, கிராஃபிக்ஸ் வி.எஃப்.எக்ஸ் பங்களிப்பு படத்தின் முதுகெலும்பாக இருந்து தமிழ் சினிமாவின் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தி தூக்கி பிடித்து வெற்றி பாதையில் நிறுத்தியுள்ளது.
ரூபன் எடிட்டிங் விறுவிறுப்பாகவும் சிறப்பாக உள்ளது, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மிகவும் கதைக்கு ஆழம் சேர்த்துள்ளது.
கிராஃபிக்ஸ் வி.எஃப்.எக்ஸ் க்கு பிறகு படத்தின் மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த இசை மற்றும்; பின்னணி இசை.
சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் ஏலியன் உடன் குழந்தைகள் உட்பட அனைத்து ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதை அமைத்து சமூக செய்தியுடன் படத்தை ஒரு விஷுவல் ட்ரீட்டாக படைத்துள்ளார் ரவிக்குமார்.
மொத்தத்தில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள அயலான் குழந்தைகளுடன் பார்த்து மகிழ ஒரு சிறந்த பொங்கல் கொண்டாட்டம்.