மெரி கிறிஸ்துமஸ் சினிமா விமர்சனம் : மெரி கிறிஸ்துமஸ் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
297

மெரி கிறிஸ்துமஸ் சினிமா விமர்சனம் : மெரி கிறிஸ்துமஸ் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5

டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் மெரி கிறிஸ்துமஸ்.
நடிகர்கள் :
விஜய் சேதுபதி – ஆல்பர்ட்
கத்ரீனா கைஃப் – மரியா
கவின் பாபு – ரோனி
ராதிகா – லக்ஷ்மி
சண்முகராஜா – தேவராஜ்
ராதிகா ஆப்தே – ரோசி
ராஜேஷ் – யாதும் தாத்தா
பரி மகேஷ்வரி ஷர்மா – ஆனி
அஸ்வினி கல்சேகர் – ஸ்கார்லெட்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குநர் – ஸ்ரீராம் ராகவன்
எழுத்தாளர்கள் – பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா
பாலா நடராஜன், லதா கார்த்திகேயன்
ஒளிப்பதிவு – மது நீலகண்டன்
இசை – ப்ரீத்தம்
பின்னணி இசை – டேனியல் பி ஜார்ஜ்
படத்தொகுப்பு – பூஜா லதா சுர்தி
தயாரிப்பு – டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (TIPS FILMS PVT.LTD & MATCHBOX PICTURES PVT.LTD)
தயாரிப்பாளர்கள் – ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜயா தௌராணி, கேவல் கர்க்
வெளியீடு  –  ஏபி இன்டர்நேஷனல் ( AP INTERNATIONAL)
மக்கள் தொடர்பு – யுவராஜ்

இரண்டு அந்நியர்கள் ஒரு அதிர்ஷ்டமான கிறிஸ்துமஸ் ஈவ் அன்று சந்திக்கிறார்கள். மயக்கமான காதல் இரவு ஒரு கனவாக மாறும் நேரத்தில் இரண்டு மிக்ஸி ஜார்களில்  ஒன்று மிளகாய் பொடியும், மற்றொன்று மாத்திரையிலிருந்து தூள் தயாரிக்கும் இருகாட்சிகளுடன் படம் தொடங்குகிறது. மும்பை மாநகரம் பம்பாய் என அழைக்கப்பட்ட காலத்தில், ஒரு கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள் மாலை துபாயிலிருந்து கட்டட வடிவமைப்பாளர் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி) ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயார் காலமானதால் அவரது வீட்டிற்கு வருகிறார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் யாதும் தாத்தா (ராஜேஷ்) ஆல்பர்ட்டின் தாயார் இறந்த சில நாட்களை விவரிக்க, ஆல்பர்ட் வெளியே வந்து கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் ஈடுபட முடிவு செய்து அன்று இரவு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பி செல்கிறார். ஆல்பர்ட், ஒரு உணவகத்தில் கவர்ச்சியான பெண் மரியாவை (கத்ரீனா கைஃப்) அவரது மகள் ஆனியையும் (பரி மகேஸ்வரி) சந்திக்கிறார். சில நிகழ்வுகளுக்குப் பிறகு இருவரும் நட்பாகிறார்கள். மரியா அவரது மகள் ஆனியுடன் (பரி மகேஷ்வரி) வீட்டிற்கு செல்லும் போது, அவள் தன்னுடன் ஆல்பர்ட்டையும் வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். வீட்டில் ஆல்பர்ட்க்கு குடிக்க மது கொடுக்கிறாள். அதன் பின் மரியா மகள் ஆனியை தூங்க வைத்துவிட்டு ஆல்பர்ட் உடன்  வெளியே செல்கிறாள். சிறிது நேரம் கழித்து இருவரும் வீடு திரும்புகிறார்கள். அங்கு மரியாவின்; கணவர் சோபாவில் சடலமாக கிடக்கிறார். அதை கண்டு இருவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். போலீசுக்கு போன் செய்யலாம் என்று யோசித்த ஆல்பர்ட், மரியாவிடம் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். சிறிது நேரம் கழித்து, மரியா மீண்டும் தனது மகளுடன் சாலையில் சுற்றித் திரிகிறார். அதை கவனித்த ஆல்பர்ட் அவரைப் பின் தொடர்கிறார். இந்த நேரத்தில் மரியா தேவாலயத்திற்கு செல்கிறார். அங்கு அவள் ஒரு கட்டத்தில் மயக்கம் அடைகிறாள். அப்போது ஒரு கேட்டரிங் தொழிலதிபர் ரோனி (கவின் பாபு) மற்றும் ஆல்பர்ட் இருவரும் மரியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் மரியா மயக்கம் தெளிந்து இப்போது நலமாக இருப்பதாக கூறி தன்னை வீட்டில் விடும் படி கூறுகிறார். வீட்டுக்கு வந்த பின் அங்கு மரியாவின் கணவர் சடலம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார் ஆல்பர்ட். ஆனால் வழக்கம் போல் மரியா கேட்டரிங் தொழிலதிபர் ரோனியை மது அருந்த சொல்கிறார். வழக்கம் போல் குழந்தையை தூங்க வைக்கிறாள். பிறகு ரோனியுடன் வெளியே செல்கிறாள். அவர்களுடன் ஆல்பர்ட்டும் செல்கிறார். போகும் வழியில் ஆல்பர்ட் இறங்கிக்கொள்கிறார். மரியாவின் மீது சந்தேகம் அடையும் ஆல்பர்ட் மரியாவின் வீட்டிற்கு சென்று பார்க்கிறார். அங்கு அவர் ஒரு பெரும் அதிர்ச்சியடையும் ரகசியத்தை காண்கிறார். இந்நிலையில், கேட்டரிங் தொழிலதிபர் ரோனியுடன் வீட்டுக்குத் திரும்பிய மரியா, எதிரில் சோபாவில் தனது கணவரின் சடலம் கிடப்பதைக் காண்கிறார். இந்தப் புதிய நபர் ரோனி அங்கிருந்து கிளம்பாமல், அங்கு மரியாவுக்கு உதவி செய்ய போலீஸ் வரும் வரை தங்கியிருக்கிறார். மரியாவும் இதைத்தான் விரும்புகிறார். அப்போது வீட்டில் ஆல்பர்ட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடையும் மரியா ஆல்பர்ட்டை உடனே வீட்டை விட்டு வெளியேற கூறுகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் போது காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதை கண்ட ஆல்பர்ட் மீண்டும் வீட்டுக்குள் சென்று மறைந்து விடுகிறார். ஆல்பர்ட்டுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? அவரது கடந்த கால கதை என்ன? மரியாவின் கணவர் எப்படி, யார் கொலை செய்தார்கள் போன்ற கேள்விகளுக்கு அந்த ஓர் இரவுக்குள் நடக்கும் மீதி சம்பவங்கள் விடை சொல்லும்.


கத்ரீனா கைஃப், மிகவும்  சிறப்பான முறையில் சிறந்த கதாபாத்திரத்தில், மரியாவாக உடல் மொழி மூலம் குழப்பம் மற்றும் ஆல்பர்ட்டுடன் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாடும் காட்சியில் நேர்த்தியான நடிப்பு வெளிப்பாட்டை உறுதியுடன் வெளிப்படுத்துகிறார்.

விஜய் சேதுபதியின் ஆல்பர்ட் கதாபாத்திரத்தை கதைக்குள் ஒரு கதையாக ரோஸியிலிருந்து மரியா வரை நேர்த்தியாக விவரிக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸில், மரியாவிடம் மோதிரம் கொடுத்துவிட்டு சரணடைந்து போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பெஞ்சில் ஆல்பர்ட் அமர்ந்திருக்கும் போது, அந்த காட்சியின் தீவிரத்தை தனது மென்மையான தவிர்க்கமுடியாத வசீகரத்தால் ஒவ்வொரு பிரேமையும் பார்வையாளர்களை கவரும் வகையில் நிரப்புகிறார்.

கவின் பாபு  ரோனி கதாபாத்திரத்தில் கதையின் முக்கிய தாக்கமான கேமியோவில், அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். 
கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து படத்தின் மிகப்பெரிய துணை தூணாக மூவரும் சேர்ந்து  திரைக்கதைக்கு மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.

ஏட்டு லக்ஷ்மியாக ராதிகா, காவல்துறை அதிகாரி தேவராஜாக சண்முகராஜா, ஆல்பர்ட்டின் காதலி ரோசியாக ராதிகா ஆப்தே, பக்கத்து வீட்டுக்கார் யாதும் தாத்தாவாக ராஜேஷ், மரியாவின் மகள் ஆனியாக பரி மகேஷ்வரி ஷர்மா, ஸ்கார்லேடாக அஸ்வினி கால்சேகர் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக நடித்து கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், இசையமைப்பாளர் ப்ரீத்தம், பின்னணி இசையமைப்பாளர் டேனியல் பி ஜார்ஜ் மற்றும் ப்ரீதமின் ஒலிப்பதிவு ஆகியோர் மர்மம் மற்றும் சூழ்ச்சி நிறைந்த இந்த உலகத்தை உருவாக்க இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்தின் மனநிலையை மேம்படுத்துகிறது.

ஓர் இரவுக்குள் இருவருக்கும் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் படத்தொகுப்பாளர் பூஜா லதா சுர்தி.

நம்மை ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது எழுத்தாளர்கள் பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோரின் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை.

மெர்ரி கிறிஸ்துமஸ் ‘காதல்’ பற்றிய மர்மத்தை கணிசமாக மேம்படுத்தி அதன் அமைதியற்ற  திருப்பங்களில் காதல், விசுவாசம் மற்றும் துரோகம் என ஓர் இரவுக்குள் இருவருக்கும் நடக்கும் சம்பவங்களை ஸ்டைலிஸ்டிக், காட்சிகளின் மூலம் இரண்டு மணி நேரம் 14 நிமிடம் பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்கும் என யோசிக்க வைத்து படத்தோடு ஒன்ற வைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

மொத்தத்தில் டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர்.