ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு இல்லை- அமைச்சர் பேட்டி

0
40

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு இல்லை- அமைச்சர் பேட்டி

சென்னை:

கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஒமைக்ரான் அனைத்து மாநிலங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று உறுதியாகுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது.

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 250-க்கு மேற்பட்டவர்களும், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 200-க்கு மேற்பட்டவர்களும் ஒமைக்ரான் வார்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து வந்தேன்.

யாருக்கும் 2-வது அலையில் டெல்டா வைரஸ் ஏற்படுத்தியது போல் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக யாருக்கும், மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அனைவருக்கும் சாதாரண சிகிச்சை முறையே தேவைப்படுகிறது.

இதுவரை சிகிச்சை பெற்று 150-க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். எனவே டெல்டா வைரஸ் போல் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

தொற்று ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலே போதும். மக்கள் ஒத்துழைத்தால் ஒமைக்ரான் விரைவில் கட்டுக்குள் வரும்.

100 வயதான கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா ஒமைக்ரான் தொற்றால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரை நேரில் பார்த்தேன். நலமுடன் இருக்கிறார்.

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது இன்று தொடங்கி இருக்கிறது. ஏப்ரல் 14-க்கு முன்பு 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இப்போது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அந்த வகையில் 4 லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.