துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

0
95

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

துபாய், துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன.

தமிழ்நாடு அரங்கு

ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் மாநில அரசுகளும் தங்கள் அரங்குகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, துபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றார். அவரை இந்திய துணைத்தூதர் டாக்டர் அமன்புரி மற்றும் துபாய் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

துபாயில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் துபாய் சர்வதேச நிதி மையத்துக்கு நேற்று காலை 11.30 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் இந்திய துணைத்தூதர் டாக்டர் அமன்புரி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, லூலூ குழுமத்தின் தலைவரும், அபுதாபி வர்த்தக பேரவையின் துணைத்தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி ஆகியோர் உடன் சென்றனர்.

பேச்சுவார்த்தை

துபாய் சர்வதேச நிதி மையத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி வரவேற்றார். அவருடன் அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறையின் துணை மந்திரி டாக்டர் தானி பின் அகமது ஜையூதி உடன் இருந்தார்.

அதன் பிறகு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அமீரக மந்திரிகளுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார்.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் சாதகமான சூழ்நிலை

அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்து கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு மந்திரிகளையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர், துணைத்தூதர் டாக்டர் அமன் பூரி மற்றும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அல் பன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி நினைவு பரிசினை வழங்கி கவுரவித்தார். அதேபோல் அமீரக மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

அரங்கு திறப்பு

பின்னர் மாலையில் துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்

முன்னதாக தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த விழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் தமிழக-ஐக்கிர அரபு அமீரக அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சி புரியும்

உலகத்தரத்திலான இந்த கண்காட்சியை நடத்தி வரும் துபாய் அரசுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இந்நாட்டின் தரத்துக்கும், திறத்துக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே சான்று. இந்த கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு வாரத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகை பொருட்களும் இந்த அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, மருத்துவம், கலை-பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழிற்பூங்காக்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்.

தமிழ் கலாசாரம், பண்பாட்டை…

இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலா, மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரம், தொழில் பூங்காக்கள் மற்றும் முக்கிய துறைகள் பற்றிய தகவல்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட உள்ளன. இந்த அரங்கை பார்வையிடும் அனைவரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்த துபாய்க்கு வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்படி உலகத்தில் இருக்கக்கூடிய எந்த பகுதிகளாக இருந்தாலும், எந்த நாடுகளாக இருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நம்முடைய தமிழக அரசு குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறதோ, பாதுகாப்பாக இருக்கிறதோ, அது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒன்றிணைந்து வேற்றுமையிலே ஒற்றுமை காணவேண்டிய நிலையில் இந்த சிறப்பான கண்காட்சி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய தமிழ் கலாசாரத்தை, தமிழ் பண்பாட்டை உணர்த்தக்கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் கலைஞர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.