J பேபி சினிமா விமர்சனம் : J பேபி குடும்பத்துடன் பார்க்கும் அனைவருடைய கண்களில் கண்ணீர் வருவதுடன் கண்டிப்பாக இனி அனைவரும் தாயை அரவணைத்து கொண்டாடுவார்கள் | ரேட்டிங்: 4.5/5

0
685

J பேபி சினிமா விமர்சனம் : J பேபி குடும்பத்துடன் பார்க்கும் அனைவருடைய கண்களில் கண்ணீர் வருவதுடன் கண்டிப்பாக இனி அனைவரும் தாயை அரவணைத்து கொண்டாடுவார்கள் | ரேட்டிங்: 4.5/5

நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா சார்பில் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் J பேபி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் மாரி.

நடிகர்கள் : ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி, கலை – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன், உமாதேவி, விவேக், மக்கள் தொடர்பு – குணா.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிய கதைகளத்தில், கணவனை இழந்து தனது 5 பிள்ளைகளை கஷ்டப்பட்டு அதீத பாசத்துடன் வளர்த்த அம்மா J பேபியின் இரண்டு பிள்ளைகள் மூத்த சகோதரர் செந்தில் (மாறன்), இளைய சகோதரர் சங்கர் (அட்டகத்தி தினேஷ்) அவர்களுக்கு இடையேயான அடிப்படைக் கொள்கைகள் மற்றும் குடும்ப பிரச்சனையுடன் ஒருவரோடொருவர் பேசாமல் இருப்பதிலிருந்து j பேபி தொடங்குகிறது. செந்தில் (மாறன்) பெயிண்டராகவும், சங்கர் (அட்டகத்தி தினேஷ்) ஷேர் ஆட்டோ டிரைவர். ஒரு நாள் காலையில் இரண்டு சகோதரர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்க படுகிறார்கள். காவல் நிலையத்தில் சகோதரர்கள் இருவரும் தங்களை எதற்காக இங்கு அழைத்தார்கள் என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் அம்மா பேபி எங்கே என்று கேட்கிறார். இரண்டு சகோதரர்களுக்கும் அம்மா எங்கே சென்றார்கள் என்ற தெரியாத நிலையில், அம்மா அக்கா, தங்கை, தம்பி இவர்களில் யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள் என்று நினைக்கும் இடத்தில் கூறுகிறார்கள். கோபம் அடையும் இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவரையும் தாயை சரியாக கவனிக்காமல் விட்டது கண்டித்து அவர்கள் தாயார் கொல்கத்தாவில் உள்ள காவல்நிலையத்தில், ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தா வாழ் தமிழர் ஒருவர் அம்மாவை ஒரு ஹோட்டலில் சாப்பாடுக்காக சண்டை போட்டுக் கொண்டு  இருந்த போது மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இருப்பது பற்றி தெரிவிக்கிறார். இன்ஸ்பெக்டர் சகோதரர்களை எச்சரித்து, அவர்கள் இருவரும் கொல்கத்தா சென்று தங்கள் தாயை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று கூறுகிறார். தன் பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்தில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்த அம்மா J பேபி எந்த அறிவிப்பும் இல்லாமல் குடும்பத்தை விட்டு வெளியேறி, வழி தவறி கொல்கத்தாவிற்கு சென்ற தாயை வீட்டிற்கு அழைத்து வர சகோதரர்கள் இருவரும் கொல்கத்தா பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணத்தின் போது குடும்ப நாடகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இருவரும் கொல்கத்தா வந்தடைந்ததும் குடும்பப் பிரச்சனையால் பேசிக் கொள்ளாமல் இருக்கும் சகோதரர்கள் இருவரும் எப்படி இணைந்து தாய் பேபியை மீட்டார்கள் என்பதே J பேபியின் மீதிக்கதை.

ஒரு தாய் தன் பிள்ளைகள் மீது பாசத்தை கொட்டி வளர்க்கும் போது ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டாலும் பிள்ளைகள் மீதான அன்பும், பாசமும் குறையாத மனநல பாதிப்புக்குள்ளான அம்மாவாக ஊர்வசி முக பாவனைகள், நடை, உடை, குரல் என எல்லா வகையிலும் மிரட்டலான நடிப்பின் மூலம் J பேபியின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார். வழக்கமான நகைச்சுவையை எளிதாக கையாள்வது ஊர்வசிக்கு கைவந்த கலை. J பேபியில் நகைச்சுவையை மட்டும் இல்லாமல் உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து அவர்களின் இதயத்தில் ஆழமாக நிற்கிறார்கள். இந்த வருடம் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பல விருதுகள் ஊர்வசிக்கு காத்திருக்கின்றது. படத்தின் முதல் பாதி மாறன் மற்றும் தினேஷ் சுற்றியே நகரும் கதைகளத்தில் முதல்பாதியில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையின் ஓட்டத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறார் ஊர்வசி.

மூத்த சகோதரர் செந்தில் கதாபாத்திரத்தில் மாறன் குடிகாரனாக இருந்தாலும், தனது திருமணம் நின்ற சம்பவத்தை விவரிக்கும் காட்சிகளில் அவரது எதார்த்தமான நடிப்பு அற்புதம்.  

இளைய சகோதரர் சங்கர் கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் ஒரு சராசரி குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள், பெருமை, கோபம் என அனைத்தும் தத்ரூபமாக வெளிப்படுத்தி நேர்த்தியான நடிப்பு வழங்கி உள்ளார்.


உண்மை சம்பவத்தில் கொல்கத்தாவில் தாயை மீட்க உதவிய ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தா வாழ் தமிழர் படத்திலும் மூர்த்தி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். படத்தில் அவரது தத்ரூபமாக நடிப்பின் மூலம் நிஜத்தில் அவர் எப்படி உதவி புரிந்து இருப்பார் என்பதை அனைவரும் அறிவார்கள். படத்தில் அவருடைய குடும்பத்தை காட்டும் போதும் அந்த தாயை பிரியும் போது அவரது கண்கள் கலங்கும் காட்சியில் நம்மை அறியாமல் நம் கண்கள் கலங்குகின்றன.

சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ உட்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பு உணர்ச்சிகரமான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி, கலை – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன், உமாதேவி, விவேக் ஆகியோர் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதயத்தைத் தொடும் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இயக்குனர் சுரேஷ் மாரி நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மை சம்பவத்தில் கொல்கத்தாவில் தாயை மீட்க உதவிய அதே நபரை படத்தில்; நடிக்க வைத்தது பாராட்டத்தக்கது. தனது கதையை நான்-லீனியர் முறையில் சொல்லியதோடு, கதாபாத்திரங்களை ஹிந்தியில் அல்லது தமிழில் பேச வைப்பதற்குப் பதிலாக, தமிழர்கள் தமிழில் பேசுவது போல, வங்காளிகள் பெங்காலியில் பேசுவது படத்தின் யதார்த்ததை உணர்த்தும் வகையில் குடும்பம், பாசம், அன்பு, பிரச்சனை, மன அழுத்தம், என அனைத்தையும் உணர்ச்சிகரமான திரைக்கதை அமைத்து பார்வையாளர்களை ஒரு கணம் கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர் சுரேஷ் மாரி.

மொத்தத்தில் நீலம் புரொடக்சன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா சார்பில் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் J பேபி குடும்பத்துடன் பார்க்கும் அனைவருடைய கண்களில் கண்ணீர் வருவதுடன் கண்டிப்பாக இனி அனைவரும் தாயை அரவணைத்து கொண்டாடுவார்கள்.