அகோரி சினிமா விமர்சனம் : அகோரி கண்டிப்பாக அனைவரையும் மிரள வைக்கும் | ரேட்டிங்: 3/5

0
318

அகோரி சினிமா விமர்சனம் : அகோரி கண்டிப்பாக அனைவரையும் மிரள வைக்கும் | ரேட்டிங்: 3/5

மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கும் படம் அகோரி. படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்.
சித்து சித், சோனு கவுடா, சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, வெற்றி விஜய், மதன் கோபால், ரியாமிகா, மாதவி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு அமல்ராஜ் விஜயலக்ஷ்மி வசந்தகுமார்.
இசை ஃபோர் மியூசிக்.
CG அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார்.
படத்தொகுப்பு ராஜ்குமார்.
கலை இயக்குநர் சந்திரகாந்த்.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி.
மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.

அமானுஷ்யத்தின் மர்மம் எப்போதும் பார்வையாளர்களை வசீகரிக்கும். அதை புதுவிதமாக இதுவரை யாரும் திரையில் சொல்லாத கதையை சொல்ல வேண்டும் என்று என்னும் ஒரு இயக்குனர் அதற்காக தீவிரமாக கதை எழுதுகிறார். ஆனால் அவர் எண்ணியவாறு கதை அமையாததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் ஆசையில் இருக்கும் இளைஞர் நாயகன் சித்து சித், கதை எழுதுவதற்கு தனது ஆண் நண்பர்கள் வெற்றி விஜய், மதன் கோபால், மற்றும் தோழி ரியாமிகா ஆகியோருடன் காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்த பங்களாவுக்குள் நுழைந்ததுமே அபசகுணமான சில சம்பவங்கள் நடக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்ட இயக்குநர் கதை சுருக்கம் தலைப்பில் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பக்கம் முதலில் நாயகன் சித்து சித் விடம் கிடைக்கிறது. அதில் எழுதப்பட்டதை போல அங்கு சம்பவங்கள் நடைபெறுகிறது. அதிர்ந்து போன நாயகன் அது குறித்து தன் நண்பர்களிடம் கூறாமல் ஒரு வித பயத்தில் இருக்கிறான். விரைவில் இதை மற்ற அனைவரும் உணர்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு பக்கம் அங்கிருப்பவர்களை தேடி வர, அதில் குறிப்பிட்ட படி சம்பவங்கள் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட சூழலில் முதலில் ‘கலக்கப்போவது யாரு’ சரத் வந்து சிக்குகிறார். அதன் பின் வரும் ஒவ்வொரு பக்கத்தில் குறிப்பிட்டபடி அவர்கள் நடக்க வேண்டும் அதில் குறிப்பிட்ட படி நடந்தால், வீட்டில் இருப்பவர்கள் உயிருடன் இருக்கலாம், மாறாக அங்கிருந்து தப்பிக்க நினைத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள், என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படியாக காதலனை தேடி வரும் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணன், மற்றும் அவர்களை காப்பாற்ற வரும் சாமியார் மைம் கோபி சிக்குகிறார்கள். சாமியார் மைம் கோபி அமானுஷத்தை கட்டுக்குள் கொண்டு வரும் போது அமானுஷத்தின்  ஆக்ரோஷத்தால் கொல்லப்படுகிறார். அதே போல வரும் மற்றொரு பக்கத்தில் குறிப்பிட்ட படி நண்பர்களில் ஒருவர் வெற்றி விஜய் கொல்லப்படுகிறார். காட்டுப் பகுதியில் இருக்கும் அந்த பங்களாவிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அவர்கள் ஈடுபடும் முயற்சிகள் அனைத்திலும் தோல்வியில் சந்திக்கிறார்கள். இந்நிலையில் கதை சுருக்கம் தலைப்பில் எழுதிய புத்தகத்தில் இருந்து வரும் மற்றொரு பக்கத்தில் சித்துவின் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனை அவரது நண்பர்கள் காதலன் முன் கற்பழித்து கொலை செய்து அதன் பின் காதலனையும் கொலை செய்தால் மட்டுமே மற்றவர்கள் அங்கிருந்து தப்பிக்க முடியும், என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சித்து சித் ஒரு அமானுஷ்யம் ஏற்படுத்தும் சிக்கலில் தள்ளப்பட்டு, அனுபவங்களை சந்தித்து அதிலிருந்து எப்படியாவது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வெற்றி விஜய், மதன் கோபால், ரியாமிகா, ‘கலக்கப்போவது யாரு’ சரத், மற்றும் காதலியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அமானுஷ்யத்தால் தெறிக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சிறப்பான நடிப்பின் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி திகில்கதைக்கு வலு சேர்த்துள்ளனர். ஒரே ஒரு குறை என்னவென்றால் ‘கலக்கப்போவது யாரு’ சரத் நடிப்பில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.

சாமியாராக நடித்திருக்கும் மைம் கோபி மற்றும் அகோரியாக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டே, மாதவி, கார்த்தி, டிசைனர் பவன் உட்பட அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் விஜயலக்ஷ்மி வசந்தகுமார் பேய் பங்களாவின் அமானுஷ்யமான சூழலை சிறப்பான காட்சிக் கோணத்தால் திறம்பட படம்பிடித்து திகில் படத்துக்கான த்ரில்லிங்கை உயர்த்தியுள்ளார்.

இசை ஃபோர் மியூசிக், அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார் சிஜி,  ராஜ்குமாரின் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநர் சந்திரகாந்த் ஆகியோரின் பங்களிப்பு அமானுஷ்ய த்ரில்லரில் ஏற்படும் அதிவேக அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது.

அமானுஷ்யத்தை மையமாகக் கொண்ட கதையை இடைவிடாத சஸ்பென்ஸுடன் அதை முன்னோக்கி நகர்த்தி, ஒரே பங்களாவிற்குள் கதை நகரும் உணர்வு தெரியாத வகையில் திரைக்கதை அமைத்து வழக்கமான திகில் எதிர்பார்ப்புகளை தாண்டி பேயை காட்டாமல் கதை சுருக்கம் புத்தகத்திலிருந்து வெளிவரும் ஒவ்வாரு பக்கத்தை வைத்து பேயாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார். இயக்குனர் திரைக்கதையில் உள்ள ஒரு குறிப்பிட்ட வக்கிர புத்தியை தவிர்த்திருக்கலாம். அதாவது நண்பர்கள் நண்பனின் காதலியை கற்பழிக்க வேண்டும் என்கிற வக்கிரமான பதிவு தேவையற்றது.
மொத்தத்தில் மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கும் அகோரி கண்டிப்பாக அனைவரையும் மிரள வைக்கும்.