யாத்திசை திரைவிமர்சனம்: யாத்திசை மக்கள் மனதை வெல்லும் சிறந்த சரித்திர படைப்பு ரேட்டிங்: 3.5/5

0
496

யாத்திசை திரைவிமர்சனம்: யாத்திசை மக்கள் மனதை வெல்லும் சிறந்த சரித்திர படைப்பு ரேட்டிங்: 3.5/5

7ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டிய இளவரசன் ரணதீரன் ஆட்சியை எதிர்க்கும் சிறு இனக்குழுவான எயினர் குடியின் முயற்சி, போராட்டம் மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் யாத்திசை.
போர் எவ்வாறு தேவரடியார்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது, பாண்டியர்களுக்கு எதிராக எயினர், சோழர்களின் கிளர்ச்சி, இவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், சிக்ஸ்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஜே.ஜெ.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க, தரணி ராசேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சேயோன், சக்தி மித்ரன், ராஜலட்சுமி, சமர், ஜமீல், சுபத்ரா என பல புதுமுக நடிகர்கள், குரு சோமசுந்தரம், செம்மலர் அன்னம், வைதேகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  பிஆர்ஒ-நிகில்.
அக்காலத்தில் புழங்கிய சொற்கள், தமிழ், போர்முறை, ஆடை ஆபரணங்கள் என பல மெனக்கடல்களுடன் புதுமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், முன்னதாக படத்தின் ட்ரெய்லர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்ட  படம் அதை விட கவனத்தை ஈர்த்து வெற்றி வாகை சூடியுள்ளது.
சோழ சாம்ராஜ்யம் அதன் அதிகாரத்தை இழந்து அதன் மக்கள் காடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த காலத்தில் ஆட்சி செய்த 7 ஆம் நூற்றாண்டின் பாண்டிய இளவரசன் ரணதீரனை அடிப்படையாகக் கொண்ட ஒரு காலகட்ட புனைகதை.
திரைப்படத்தின் ஏழாம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. அவரது மகன் மிகவும் சக்தி வாய்ந்த ரணதீர பாண்டியன் (சக்தி மித்திரன்) பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுகுழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றி பெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். இதில் பாண்டியன் வம்சத்தின் கீழ் நாடோடி வாழ்க்கை வாழும் எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன்) தனது குடும்பம் மற்றும் குலத் தோழர்களை அவர்களின் நாடோடி வாழ்க்கையிலிருந்து விடுவித்து, பாண்டியர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கான ஒரு பணியில் அவர்களை வழிநடத்த விரும்புகிறான். அவரின் உறுதியை நம்பும் அவரது இனமும் ஒரு கட்டத்தில் அவருக்கு துணையாக நிற்க, தன் படையுடன் நேரடியாக மன்னனுடன் மோதுகிறான் கொதி. இரு பக்கமும் உயிர் பலிகள் ஏற்பட, எயினர் எண்ணிக்கை கண்டு ஓட்டம் பிடிக்கிறான் பாண்டிய மன்னன். கொதி ஓரளவு வெற்றியடைந்து ரணதீர பாண்டியனின் அரண்மனையைக் கைப்பற்றும் போது, கதையின் இரண்டாம் பாதி, அதிகாரம், இன்பம் மற்றும் பிற பொருள்களின் மீதான கொதியின் மோகம் அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. மறுபுறம் கோட்டை கொதியின் கைக்குச் சென்றதால் தன் படையுடன் கோட்டையை கைப்பற்ற பாண்டிய மன்னன் முனைகிறான். இறுதியில் ரணதீரனை கொதி வென்றானா? பாண்டிய பேரரசு கைக்கு மீண்டும் கோட்டை வந்து சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
சக்தி மித்ரன் மற்றும் சேயோன் ஆகிய இருவரும் வலுவான கதாபாத்திரங்களை சித்தரிக்கும் பணியை ஏற்று ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
 ராஜலட்சுமி, வைதேகி அமர்நாத், குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், உள்ளிட்டோரின் கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு கலைஞரும் தேவையான யதார்த்த நடிப்பு  வழங்கி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளார்கள்.
சக்கரவர்த்தியின் பின்னணி இசை படங்களை மிகவும் நன்றாக நிறைவு செய்கிறது.
அகிலேஷ் காத்தமுத்துவின் ஒவ்வொரு பிரேமும் ஆரம்பத்திலிருந்தே கலைநயத்துடன் படமாக்கப்பட்டு, காலத்தின் உணர்வைப் படம்பிடித்து, கதையை உயிர்ப்பிக்கிறது.
யாத்திசை திரைப்படம் பல ஆய்வுகளை செய்து, பழங்கால தமிழ்ப் பேச்சு முறையைப் பயன்படுத்தி இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் பேச்சு வழக்கு, கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவை விரிவான ஆய்வுக்கு உட்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் ஆடைகளை விட ரத்தினங்களால் தங்கள் உடலை மறைந்திருப்பதை நாம் காணலாம், ஏனெனில் அவர்களின் ஆடைகள் கூட மிகவும் யதார்த்தமாக உள்ளது. கூடுதலாக, அந்தக் குழு, அப்போது பிரபலமாக இருந்த பரதநாட்டியத்தின் பண்டைய பாணியான தாசியாட்டம் மீண்டும் உருவாக்கியுள்ளது.  இது போன்ற வரலாற்றுப் படங்களை பார்ப்பது, ஹீரோயிசத்தை மட்டுமே கொண்ட ஹீரோக்களை விட சிறந்தது. பல குலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மத்தியில் தேவரடியார்கள் மற்றும் அவர்களின் அவல நிலையை பற்றியும் கதை சொல்கிறது. கொற்றவை பூஜை, 7ஆம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம், போர் உத்திகள், கணிப்புகள், திட்டமிடல் ஆகியவை மிகவும் நேர்த்தியாக கொடுக்கப்பட்ட மினிமம் பட்ஜெட்டில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்து கையாண்டுள்ளார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.
மொத்தத்தில் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஜே.ஜெ.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் யாத்திசை மக்கள் மனதை வெல்லும் சிறந்த சரித்திர படைப்பு.