போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்: போத்தனூர் தபால் நிலையம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான அழகான நிலையம் | ரேட்டிங் – 3.5/5

0
150

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்: போத்தனூர் தபால் நிலையம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான அழகான நிலையம் | ரேட்டிங் – 3.5/5

பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரித்துள்ள போத்தனூர் தபால் நிலையம் படத்தில் பிரவீன்,அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஹா தமிழில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் பிரவீன்.இசை-தென்மா, ஒலி வடிவமைப்பு-அருண்காந்த், ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர், கலை இயக்குனர்- பிரவீன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

போத்தனூர் தபால் நிலையத்தில் நேர்மையான போஸ்ட் மாஸ்டர் ஜெகன் கிரிஷ். இவரின் பட்டதாரி மகன் பிரவீன் சொந்தமாக தொழில் தொடங்க வங்கியில் கடன் பெற மும்முரமாக இருக்க, மகள் ப்ளஸ்டூ படிக்கிறார். தபால் நிலையத்தில்  தினமும் டெபாசிட் செய்யும் பணத்தை வங்கியில் கட்டிவிடும் பழக்கம் கடைப்பிடித்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக சனிக்கிழமை அன்று ஏழு லட்சம் ரூபாய் பணம் தபால் நிலையத்திலேயே காசாளரால் வங்கியில் கட்ட முடியாமல் இருந்து விடுகிறது. அன்று பாதுகாப்பு கருதி அந்தப் பணத்தை ஜெகன் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வழியில் பண மூட்டை காணாமல் போகிறது. எங்கு தேடியும் பணம் கிடைக்காமல் பரிதவிக்கும் ஜெகன் வீட்டிற்கு வந்து பிரவீனிடம் கொள்ளை போன விவரத்தை சொல்கிறார். ஏற்கனவே வங்கிக் கடன் கிடைக்காமல் மன உளைச்சலில் இருக்கும் பிரவீன், தந்தையின் நிலைமையை கண்டு உதவ முன் வருகிறார். தன் நண்பர்களுடன் சென்று பணத்தை தேட தொடங்குகிறார். இறுதியில் பிரவீன் கொள்ளை போன பணத்தை மீட்டு தந்தையை பழிச்சொல்லில் இருந்து காப்பாற்றினாரா? பணம் யார் கையில் சிக்கியது? அதன் பின் நடந்தது என்ன? என்பதே மீதிக்கதை.

புதுமுகம் பிரவீன் தேர்ந்த நடிகர் போல் சிறப்பாக செய்துள்ளார் இவருடன் அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் அனைவருமே படத்தின் தூண்கள்.

தென்மாவின் இசை கால கட்டங்களை கடந்து இன்னிசை விருந்து படைத்துள்ளார்.
சுகுமாரன் சுந்தர் காட்சிக்கோணங்களில் படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக்கொள்கின்றார்.

மூன்று வித காலகட்டங்கள், தபால் நிலைய நடைமுறைகள், வித்தியாசமான பாத்திரப்படைப்பு, புதுவிதமான அனுபவம், குற்ற பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸ் கலந்த நாடகத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பல திருப்பங்களுடன் புதிய கோணத்தில் கொடுத்து அசர வைத்துள்ளார் பிரவீன். கலை இயக்குனருக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதையும் திறம்பட கையாண்டுள்ளார். 90களின் காலகட்டங்களின் வர்ண ஜாலத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கும் அசாத்திய திறமை பிரமிக்க வைக்கிறது. ஹாட்ஸ் ஆப்ஃ

மொத்தத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரித்து ஆஹா தமிழ் செயலியில் வெளியாகும் போத்தனூர் தபால் நிலையம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான அழகான நிலையம்.