டக்கர் சினிமா விமர்சனம் : டக்கர் இளவட்டங்களை டக்கரா கவரும் | ரேட்டிங்: 3/5

0
549

டக்கர் சினிமா விமர்சனம் : டக்கர் இளவட்டங்களை டக்கரா கவரும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அருண் வைத்தியநாதன், விஸ்வா.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்கம் : கார்த்திக் ஜி கிரிஷ்
தயாரிப்பு : பேஷன் ஸ்டுடியோஸ் சுந்தர் சுந்தரம், ஜி.ஜெயராம்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன்
எடிட்டிங் : ஜி.ஏ.கௌதம்
கலை : உதய குமார் கே
ஸ்டண்ட் : தினேஷ் காசி
கதை : ஸ்ரீனிவாஸ் கவிநயம்
நடனம் : சதீஷ், ஸ்ரீதர்
மக்கள் தொடர்பு : டி ஒன்.அம்மா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வறுமையில் வாழும் குணசேகரன் (சித்தார்த்), எப்போதும் பணக்காரனாக வேண்டும் என்று கனவு காணும் ஆற்றல் மிக்க இளைஞன். போதிய பணம் இல்லாததால் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.  பணக்காரன் ஆகியே தீருவேன் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து, பணம் சம்பாதிக்க பல்வேறு விஷயங்கள் செய்கிறார், ஆனால் அவரது கோபம் அவருக்கு எப்போதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. கடைசியாக பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்து டாக்சி ஓட்டுகிறார். ஒரு விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்து, உரிமையாளர் அவரைத் தாக்கி சம்பளமில்லாமல் டிரைவராக  வேலை செய்ய சொல்கிறார். நிறைய பணப் பிரச்சனைகளால், அவர் தனது வாழ்க்கையை முடிக்க முடிவு செய்கிறார், ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை. இறப்பதற்கான வழிகளைத் தேடும் போது, குணா தன்னை முன்பு ஏமாற்றிய ஒரு ரவுடியைச் சந்திக்கிறான். குணா அவனை அடித்து விட்டு அவனது காரை எடுத்துச் செல்கிறான். இச்சூழலில், வில்லன் கும்பலால் காரின் டிக்கியில் கடத்தப்பட்ட பெரிய தொழிலதிபரின் மகள் மகாலெட்சுமியை (தியான்ஷா கௌஷிக்) சந்திக்கிறார். மகாலெட்சுமியின் சந்திப்பு குணாவின் வாழ்க்கை ஒரு பெரிய திருப்பத்தை எற்படுத்துக்கிறது. மகாலட்சுமி கடத்தப்பட்டது ஏன்? இருவரையும் துரத்தும் வில்லன் கும்பலிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எப்போதும் அழகான காதல் கதைகளை தேர்ந்தெடுக்கும் சித்தார்த், அதே கதைக்களத்தில் அலுத்துப்போய், வழக்கமான இமேஜிலிருந்து ‘டக்கர்’ போன்ற வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். அவரது தோற்றம் மற்றும் நடிப்பைப் போலவே அவரது திரை இருப்பு வசீகரமாக உள்ளன. காதல் காட்சிகளில் அதே அதிகப்படியான நெருக்கம் தான். அந்த காதல் விஷயத்தில் எந்த மாற்றமே இல்லை.
திவ்யன்ஷா கௌசிக் மிகவும் அழகாகவும், வசீகரமாகவும் இருக்கிறார். அவருக்கும் நாயகனுக்கு இணையான கதாபாத்திரம். பணக்கார பெண்களுக்கான அனைத்து குணா திசைகளுடன் தனக்கு பிடித்த வாழ்க்கை வாழ ஆசைப்படும் நாயகியாக கவர்ச்சியை ஓவரா வெளிப்படுத்தி, கடைசியில் வழக்கமான கதாநாயகி வலம் வருகிறார்.வில்லனாக அபிமன்யு சிங் பெரிதாக ஒன்றும் இல்லை, பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயலும் யோகி பாபுவின் கதாபாத்திரத்தில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. இதில் இரட்டை வேடம் வேறு. ஆனால் முனீஸ்காந்த் திரைப் பிரவேசம் குறைவாக இருந்தாலும் சிறப்பு செய்துள்ளார். நண்பனாக ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் கவனம் பெறுகிறார்.

நிவாஸ் பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசையில் உறுதியான மதிப்பை சேர்க்கிறது. நேர்த்தியான வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவும், ஜி.ஏ.கௌதமின் படத்தொகுப்பும், தினேஷ் காசியின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், இவர்களின் கண்ணியமான கூட்டணி கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் தனது கதையில் பல வகைகளை இணைக்க முயற்சிக்கிறார். டக்கர் ஒரு சுவாரஸ்யமான குறிப்பில் தொடங்கி அதில் இளவட்டங்களை கவர உடலுறவு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்வது, கஞ்சா அடிப்பது எனக் கதாநாயகிக்கு மட்டும் சில ‘அதிரடிகளை’ கொடுத்துக் காதல் பகுதிகளில், ஆடை தேர்வில் கூடுதலாக கவர்ச்சியை புகுத்தி, ரொமான்ஸ், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என அனைத்தையும்   கலவையாக கலந்து பார்வையாளர்களை கவனிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் சுந்தர் சுந்தரம், ஜி.ஜெயராம் இணைந்து தயாரித்திருக்கும் டக்கர் இளவட்டங்களை டக்கரா கவரும்.