கட்டில் சினிமா விமர்சனம் : கட்டில் – பாரம்பரியத்தின் பொக்கிஷம்  | ரேட்டிங்: 3/5

0
513

கட்டில் சினிமா விமர்சனம் : கட்டில் – பாரம்பரியத்தின் பொக்கிஷம்  | ரேட்டிங்: 3/5

மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஈ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கட்டில்’.
நடிகர்கள் : சிருஷ்டி டாங்கே, விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், அன்னம் அரசு, இந்திரா சௌந்தர்ராஜன், மாஸ்டர் நிதிஷ், சம்பத்ராம், செம்மலர் அன்னம், கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி, காதல் கந்தாஸ்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் : ஈ.வி. கணேஷ் பாபு
ஒளிப்பதிவு : வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் : சித் ஸ்ரீராம்
ஸ்கிரிப்ட் மற்றும் எடிட்டிங் : பி.லெனின்
பாடல் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து
கலை : பி.கிருஷ்ணமூர்த்தி, மனோ
நடன இயக்குனர் : மெட்டி ஒலி சாந்தி
தயாரிப்பு நிர்வாகி : ராஜன், இல.வாசுதேவன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
“ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் நமது பாரம்பரியம், குடும்ப மதிப்பு மற்றும் பொக்கிஷங்களை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 250 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு கட்டில் – அத்தகைய புதையலைச் சுற்றியே கதை சுழல்கிறது’’. மூன்று தலைமுறையாக காரைக்குடி பக்கம் பிரம்மாண்டமான ஒரு வீட்டில் அம்மா (கீதா கைலாசம்), கர்ப்பிணி மனைவி தனலட்சுமி (சிருஷ்டி டாங்கே), ஒரே மகன் (மாஸ்டர் நிதிஷ்) என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்க்கும் கணேசன் (ஈ.வி.கணேஷ் பாபு). இவருடன் பிறந்த 2 சகோதரர், மற்றும் மூத்த சகோதரி நல்ல வசதி படைத்தவர்கள். உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமான வீட்டை விற்க முடிவு செய்து இளைய சகோதரன் கணேசன் மற்றும் தாயாரை சம்மதிக்க வைக்கிறார்கள். அத்துடன் பாரம்பரியமான வீட்டை விற்று விடுகிறார்கள். இந்த வீட்டில் 250 வருட வயதுடைய பழமை வாய்ந்த கட்டில் இருக்கிறது. இந்த கட்டிலை தன் உயிருக்கு நிகராக  கருதி வைத்து இருக்கிறார் கணேசன். பாரம்பரியமான வீட்டை வாங்கிய நபர் பழமை வாய்ந்த இந்த கட்டிலை வாங்கிக் கொள்வதாக கூற ஆனால், கணேசன் கட்டிலை விற்க மறுக்கிறார். உடன்பிறப்புகளிடம் அந்த கட்டிலுக்கான விலையை கொடுத்து கணேசனே அதை வாங்குகிறார். வீட்டை விற்று கிடைத்த பணத்தை வைத்து அந்தப் பெரிய கட்டில் வைக்கும் அளவிற்கு வீடு வாங்க நினைக்கிறார், ஆனால் அவர் நினைத்தது போல வீடு கிடைக்கவில்லை. தன் நண்பனின் உதவியுடன் அரிய பொக்கிஷமாக கருதப்படும் பழம்பொருள் விற்பனை கடை நடத்துவதுடன், தன்னிடம் உள்ள பழம் பொருட்களை வைத்து ஒரு கலைக் கூடம் வைத்திருக்கும் ராமையா (இந்திரா சௌந்தர்ராஜன்) இடத்தில் இந்த கட்டிலை தற்காலிகமாக வைத்து விட்டு, குடும்பத்துடன் வசிப்பதற்காக வாடகை வீட்டுக்கு செல்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஈ.வி.கணேஷ்பாபு தாத்தா அய்யாறு, தந்தை இளங்கோவன், மகன் கணேசன் என மூன்று தோற்றங்களில், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் கடினமாக உழைத்து உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் பெண் செய்யும் தியாகம், வலிகள் ஏராளம். அதை தனலெட்சுமியாக மனதை தொடும் கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே வாழ்ந்துள்ளார்.
கீதா கைலாசம் மற்றும் இந்திரா சௌந்தர்ராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்கள்.
கன்னிகா சினேகன், அன்னம் அரசு, மாஸ்டர் நிதிஷ், சம்பத்ராம், செம்மலர் அன்னம், கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி, காதல் கந்தாஸ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கணேசனின் வாரிசாக கதை சொல்லும் விதார்த் ஆகியோர் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் முத்தான வரிகள் மனதில் தாலாட்டு பாடுகிறது.
உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளது வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு.
தெளிவான பி.லெனின் படத்தொகுப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு கட்டில் கண்டிப்பாக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எப்படி இழந்தார்கள் என்பதை உணர்த்தும் எளிமையான கதை களத்தில் ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதை திரைக்கதை அமைத்து யதார்த்தமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் பி.லெனின் மற்றும் இயக்குனர் ஈ.வி. கணேஷ் பாபு.
மொத்தத்தில் மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஈ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி தயாரித்துள்ள கட்டில் – பாரம்பரியத்தின் பொக்கிஷம்.