அடியே விமர்சனம் : அடியே ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி | ரேட்டிங்: 3/5

0
434

அடியே விமர்சனம் : அடியே ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி | ரேட்டிங்: 3/5

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இப்படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடிக்க, வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசையமைத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன். தயாரிப்பு பிரபா பிரேம்குமார். மக்கள் தொடர்பு யுவராஜ்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டின் டைம் ட்ராவல் படமாக ‘அடியே’ உருவாகியுள்ளது. பொதுவாக நாம் வாழும் உலகத்திற்கு இணையான பிரபஞ்சம் உள்ளது. உண்மையில் நிகழும் காட்சிகள் மாற்று எதார்த்தம் எனப்படும் இணைய உலகில் நாம் விரும்பும் காட்சிகள் மாறும். இதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இளம் பருவத்தில் ஜீவாவின் (ஜி.வி. பிரகாஷ்) வாழ்க்கை முழுக்க முழுக்க அவரது பள்ளிக் காதலியான செந்தாழினியை (கௌரி கிஷன்) கவருவதைச் சுற்றியே இருக்கிறது. ஆனால் அவரது பெற்றோர் இறக்கும் போது விதி சோகமாக தலையிடுகிறது, ஜீவா அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது வளர்ந்து வரும் ஜீவா, வாழ்க்கையில் மனமுடைந்து   விரக்தியின் விளிம்பில் தத்தளித்து, தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயலும் போது, அவர் தனது முன்னாள் பள்ளிக் காதல், இப்போது புகழ்பெற்ற பாடகியான செந்தாழினி (கௌரி கே கிஷன்) உடனான நேர்காணலை டிவியில் காணும் போது அவருக்கு ஒரு நம்பிக்கை வெளிப்படுகிறது. செந்தாழினி மீது ஜீவாவுக்கு ஏற்பட்ட மோகம், மீண்டும் மீண்டும் தனது பாசத்தை வெளிப்படுத்த முயன்று ஏமாற்றத்தையே சந்திக்க வைக்கிறது. எதிர்பாராதவிதமாக ஒரு சோகமான விபத்து  ஏற்பட,  அது   அவனுக்கு ஒரு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர் மாற்றுப் பிரபஞ்சத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன், செந்தாழினியை அவரது மனைவியாக கொண்டு குடும்பம் நடத்துகிறார். இந்த இணையான உலகில், விதிமுறைகள் மற்றும் அடையாளங்கள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளன – சச்சின் டெண்டுல்கர் ஒரு கால்பந்து நட்சத்திரம், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் மேனன் (வெங்கட் பிரபு) அறிவியல் புனைகதை தலைசிறந்த படைப்புகள் உருவாக்குகிறார். இந்த குழப்பமான சூழ்நிலையில் ஜீவா பயணிக்கும் போது, அவர் மாற்று யதார்த்தங்களின் கருத்தையும், இந்த புதிரில் அவர் எப்படி சிக்கினார் என்பதையும் அறிகிறார். நிஜ உலகத்துக்கும் கற்பனை உலகத்துக்கும் இடையே மாறி மாறி பயணிக்கும் ஜீவா ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்கிறார். ஆனால் அதற்குள் ஜீவாவின் நண்பன் செந்தாழினியை நிஜ உலகில் திருமணம் செய்ய முயற்சிக்கிறான். ஜீவா எந்த உலகத்தில் செந்தாழினியிடம் தன் காதலைச் சொல்லி தன் நண்பனுடன் அவளது திருமணத்தை நிறுத்தினான்? என்பதை படத்துடன் ஒன்றி டிராவல் செய்து அறியலாம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி ஜி கிஷன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி உறுதியான நடிப்பை வழங்கி உள்ளார்கள். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஹீரோவின் நண்பராக ஆர்.ஜே.விஜய்யும், விஞ்ஞானியாக வெங்கட் பிரபுவும்  நடித்துள்ளனர். இவர்களது திரைப் பிரசன்ஸ் கச்சிதமாகப் பொருந்துகிறது.

கதையின் இரண்டாவது நாயகன் ஜஸ்டின் பிரபாகரன். அவரது இசை மற்றும் பின்னணி இசை கதையுடன் கைகோர்த்து படத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் படத்தின் காட்சிகளை கதைக் களத்துக்கு பொருத்தமாக அழகாகவும் அற்புதமாகவும் படம் பிடித்துள்ளார்.

காலப் பயணம் மற்றும் நேரச் சுழல்களை மையமாகக் கொண்டு ஆல்டர்நேட் ரியாலிட்டி என்று வித்தியாசமான கதைக்களத்தில், காதலை மையக்கருவாக கொண்டு அதில் ஹூண்டாய் பிரஷ், பகார்டி பேஸ்ட், கோல்டு ஃபிளேக் மற்றும் காகா பிக் பாத்ரூம் கிளீனர் போன்ற தயாரிப்புகளுக்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுத்து, மேலும் ஃபார்முலா 1 ரேசர் அஜித் குமார், கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரொனால்டோ, கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஷங்கர் இயக்கும் திரைப்பட அறிவிப்பு, தமிழ் இம்போசிஷனுக்கு மத்திய அரசு எதிர்ப்பு, விஜய்யின் யோகன் காட்சிகள், விஷால் மற்றும் ராதாரவி இணைந்து, தனுஷ் ரசிகராக கூல் சுரேஷ், இசையமைப்பாளராக பயில்வான் ரங்கநாதன் என கற்பனையான முன்மாதிரி மற்றும் சிந்தனையைத் தூண்டும் திருப்பங்களுடன் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து நேரச் சுழல்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

மொத்தத்தில் 
மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ள அடியே ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி.