முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

0
0

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தியேட்டர்களில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் அதை உயர்த்தித் தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகள்ல் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதால் நடிகர் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் உடனான இந்தச் சந்திப்பில் அமைச்சர் வேலுமணி, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் உடனிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தரப்பில் இதுவரை இச்சந்திப்பு நடந்ததை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், பணியாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே ஓடிடி தளங்களில் சூர்யா நடித்த சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய நட்சத்திரங்களின் படங்களும் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

நவம்பர் 10-ம் தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் வெளிவராததால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை. இதனால் ஏராளமான திரையரங்குகள் மூடப்பட்டன. மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி வரும் என்று கணக்குப் போட்டு காத்திருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். அரசின் அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.