மட்டி விமர்சனம்: பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் மட்டி

0
69

மட்டி விமர்சனம்: பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் மட்டி

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மட்டி . இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. ஜி. எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ராட்சசன் புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் , மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்குத் தமிழில் ஆர். பி. பாலா வசனம் எழுதியிருக்கிறார்.

முத்து (யுவன் கிருஷ்ணா) கடின உழைப்பாளி,  துணிச்சலானவர், கேரளா மலைப்பகுதியில் வெட்டப்படும் மரங்களை தனது ஜீப்பில் ஏற்றி பாறைகள் நிறைந்த பாதை வழியாக மலையடிவாரத்திற்கு கொண்டு வரும் வேலை செய்து வருகிறார். இவரது சித்தி மகன் கார்த்தி (ரிதான் கிருஷ்ணா).  குடும்ப பிரச்சனை காரணமாக தனது தம்பி கார்த்தியுடன் பல வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறார். கல்லூரி மற்றும் மண் பந்தயங்களில் டோனி (அமித் சிவதாஸ் நாயர்) ஒரு பரம போட்டியாளர். கல்லூரியில் படிக்கும் போது  மட்டி ரேஸில் டோனியை தோற்கடிக்கிறார் கார்த்திக். மட்டி ரேசில் தோற்ற அந்த வில்லன் உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார் என சபதம் எடுக்கிறார். இந்த சபதத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. தம்பி கார்த்தியை காக்க அண்ணன் முத்து களமிறங்குகிறார். இறுதியில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து மட்டி ரேசில் வில்லனை தோற்கடித்தார்களா? இல்லையா? என்பதே ‘மட்டி” படத்தின் மீதிக்கதை.

இந்தியாவின் முதன்முதலாக மண்சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மட்டி படத்தில் நடிகர் யுவன் கிருஷ்ணா மற்றும்  ரிதன் கிருஷ்ணா இருவரும் அண்ணன் தம்பியாகக் கலக்கியிருக்கிறார்கள். வேகமான துரத்தல்கள் மற்றும் அதிரடி காட்சிகளுடன். யுவன் கிருஷ்ணா மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் தூள் படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் இருவருக்கும் கதாபாத்திரம் குறைவே.

ஆக்சன் காட்சிகள் தான் படத்தில் மேலோங்கி  இருக்கிறது. அனைத்து ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்படி உள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ஆச்சரியப்படுத்தி மிரள வைத்து இருக்கிறது கே.ஜி.ரதீஷின் ஒளிப்பதிவு. சான் லோகேஷின் படத்தொகுப்பும் பந்தயத்தின் சுவாரஸ்யத்தை சிறப்பாகப் படம்பிடித்துள்ளது.ஆர். பி. பாலா வசனம் கூடுதல் பலம்.

ரவி பஸ்ரூரின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரீரெக்காடிங்  சத்தம் மிகவும் அதிகமாகவும் உணரத் தொடங்குகிறது.

மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, மண் பந்தயம் நடக்கும் விதமும் அது இளைஞர்களை எப்படி பாதிக்கிறது என்பதை சரியாக திரைக்கதையில் கோர்த்து, அண்ணன் சென்டிமென்ட் கலந்து ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரகபல்.

மொத்தத்தில் பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் மட்டி.