‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0
67

‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பீப்’ பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு எதிராக, சென்னை காவல்துறையில் பதிவான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சிம்பு, பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாகக் கூறி, இணையத்தில் ‘பீப்’ பாடல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலைப் பாடிய சிம்பு மற்றும் அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக, பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில், நடிகர் சிம்பு மீது, தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதால், புகார் முடித்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி, சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் பதியபட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.