Ukraine-Russia War: பொருளாதரத்தில் பூமரங்காக எதிரொலிக்கும் ரஷ்யாவின் தாக்குதல்

0
54

Ukraine-Russia War: பொருளாதரத்தில் பூமரங்காக எதிரொலிக்கும் ரஷ்யாவின் தாக்குதல்

ரஷ்யாவின் தாக்குதலால், அந்நாட்டில் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரை தாண்டியது

உக்ரைனின் மீதான தாக்குதல் நேரடியாக ரஷ்யாவின் பொருளாதரத்தில் எதிரொலிக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை, ராணுவ நடவடிக்கையை அறிவித்த உடனே, மாஸ்கோ எக்ஸ்சேஞ்சில் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

உக்ரைனுடனான மோதலின் உச்சகட்டமாக ரூபிள் மதிப்பு மிகவும் சரிந்தது. அது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்புகளுக்கு கீழே சரிந்ததால் ரஷ்ய பங்குச் சந்தை மூடப்பட்டது.

“அனைத்து சந்தைகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் தொடங்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என்று தகவல்கள் வெளியிடப்பட்டது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், (பிப்ரவரி 23, 2022 புதன்கிழமை), அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபிள் மதிப்பு சரிந்தது.

இது, மார்ச் 2020 இல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது ஏற்பட்ட பேரிழப்பைவிட குறைந்த அளவை எட்டியது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய கரன்சி ரூபிளின் மதிப்பு 81 என்ற அளவில் இருக்கிறது.

மேலும், ரூபிள் அடுத்த இரண்டு மாதங்களில் டாலருக்கு எதிராக, இதுவரை இல்லாத அளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தபோது 2016 இல் காணப்பட்ட அளவை விட கீழே வீழ்ச்சியடையும் என்றும் நம்பப்படுகிறது.

ரஷ்யாவின் தாக்குதலால், அந்நாட்டில் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரை தாண்டியது.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேற்கத்திய தடைகள் உலக சந்தைகளை சீர்குலைக்கும்: ரஷ்ய தூதர்
இதற்கிடையில், அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை சீர்குலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்பது, அமெரிக்கர்களின் இயல்பான வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் அவை ரஷ்யாவையோ, அதன் வெளியுறவுக் கொள்கையையோ மாற்றும்படி கட்டாயப்படுத்தாது என்று கூறினார்.

அமெரிக்காவைப் பின்பற்றி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஐந்து ரஷ்ய வங்கிகள் மீது தடை விதித்து, ரஷ்யா மீதான இங்கிலாந்தின் தடைகளைத் தொடங்கிவிட்டார்.

ரஷ்யா உக்ரைன் இடையில் இருக்கும் பதட்டம் ஏற்கனவே உலக மக்களை மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், தற்போது ரஷ்யா உக்ரைன் மீது முறையான தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில், அது உலக நாடுகளில் பல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யா தாக்குதலின் தாக்கம் இன்று காலையிலேயே இந்திய பங்குச்சந்தையில் தெரியத் தொடங்கிவிட்டது. இந்திய முதலீட்டாளர்களின் அச்சம் அதிகரித்ததால், இந்திய சந்தைகள் இன்று தொடக்கத்திலேயே சரிவை சநதித்தன.

இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் 2.70 சதவீதம் அதாவது 1546.47 புள்ளிகள் சரிந்து 55,685.59 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 2.70 சதவீதம் அதாவது 460.40 புள்ளிகள் சரிந்து 16,602.85 ஆகவும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில், தொடர்ந்து ஆறாவது அமர்வாக, புதன்கிழமையும் இழப்பே நீடித்தது. சென்செக்ஸ் 0.12 சதவீதம் அதாவது 68.62 புள்ளிகள் சரிந்து 57,232.06 ஆகவும், நிஃப்டி 0.12 சதவீதம் அதாவது 28.95 புள்ளிகள் சரிந்து 17,063.25 ஆகவும் முடிந்தன.