பிஸ்கோத் விமர்சனம்

0
5

பிஸ்கோத் விமர்சனம்

மசாலா பிக்ஸ் தயாரிப்பில் ஆர். கண்ணன் இயக்கிய பிஸ்கோத் படத்தில் சந்தானம்,சௌகார் ஜானகி, தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பல்லா, நரேன், ஆனந்தராஜ், பரத்ரெட்டி, மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சிவசங்கர் மாஸ்டர், பூஜ்ஜி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-என்.சண்முக சுந்தரம், இசை-ரதன், பாடல்கள்-கிருதியா,எடிட்டிங்-செல்வா.கே, கலை- ராஜ்குமார், சண்டை-ஹரி தினேஷ், நடனம்-சதீஷ் மற்றும் சாண்டி, உடை-பிரியங்கா, நிர்வாக தயாரிப்பு-ஒம்சரண், பிஆர்ஒ-ஜான்சன்.

நண்பர்களான நரேன், ஆனந்தராஜ் ஒண்றிணைந்து சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்துகின்றனர். இந்த பிஸ்கட் கம்பெனியை விரிவுபடுத்தி, நவீனபடத்தி அதில் தன் மகன் சந்தானத்தை தலைமை பொறுப்பில் உட்கார வைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நரேனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட இறந்து விடுகிறார்.அதனால் ஆனந்தராஜ் பிஸ்கட் கம்பெனியை தன் வசம் ஆக்கிக்கொண்டு, சந்தானத்தை சூப்பர்வைசராக வைத்துக் கொள்கிறார். இதற்கிடையில் உதவும் குணம் கொண்ட சந்தானம் அங்கிருக்கும் முதியோர் இல்லத்திற்கு தினந்தோறும் சென்று அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுக்கும் வழக்கத்தை கடைபிடிக்கிறார். அப்பொழுது முதியோர் இல்லத்திற்கு அனாதையாக பாட்டி சௌகார் ஜானகி வந்து சேருகிறார். அங்கே சௌகார் ஜானகி தூங்கும் நேரத்தில் சொல்லும் கதைகள் எல்லாம் சந்தானம் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிக்கிறது. இதனிடையே பிஸ்கட் கம்பெனியின் ஜி.எம் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்க பாட்டியின் உதவியை நாடினாரா? இறுதியில் ஜெயித்து பதவியை தக்க வைத்துக்கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

ராஜாவாக சந்தானம் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து. கவுண்டர் வசனங்களால் திணறடிக்கிறார். இதில் மூன்று வித கெட்டப்பில் தோன்றி மூன்று வித கதையில் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை காட்டி வித்தியாசப்படுத்த முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் தன் தோளில் சுமந்து நடித்து கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பல்லா இரண்டு கதாநாயகிகள் இருந்தும் முக்கியத்துவம் இல்லை.

நரேன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஆனந்தராஜ் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.

பாட்டியாக வரும் சௌகார் ஜானகி ஏற்ற இரக்கங்களோடு கதை சொல்லும் விதம், சின்ன சின்ன வெகுளி பார்வை என்று கடவுளின் தூதராக ரசிக்க வைக்கிறார்.

மற்றும் பரத்ரெட்டி, மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சிவசங்கர் மாஸ்டர், பூஜ்ஜி பாபு ஆகியோர் உற்ற துணையாக படத்தில் வலம் வருகிறார்கள்.

இசை-ரதன்,ஒளிப்பதிவு-என்.சண்முக சுந்தரம், எடிட்டிங்-செல்வா.கே இவர்களின் உழைப்பு வீண் போகவில்லை.

தயாரிப்பு, இயக்கம்-ஆர்.கண்ணன்.2008ல் ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர் நடித்து வெளிவந்த படம் ‘பெட்டைம் ஸ்டோரீஸ்”. அந்தப் படத்தைத் தமிழ் சினிமாவிற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து எடுக்கப்பட்ட படம்தான் ‘பிஸ்கோத்”. பிஸ்கட் கம்பெனி என்று வித்தியாசப்படுத்தி முதல் பாதியில் கதை செல்ல, இரண்டாம் பாதியில் ஏற்கனவே வந்த படங்களின் கலவையாக பிஸ்கட் உருமாறி விடுகிறது.

மொத்தத்தில் பிஸ்கோத் ரசிக்க வைக்கவும், சிரிக்க வைக்கவும் முயற்சித்திருக்கிறது.