நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

0
64

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி லாக்கரில் முடக்கி வைக்கப்பட நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ணி 4 வாரத்திற்குள் முடிவுகளை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வுசெய்ய, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். இதன்படி, 2015-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், பதவிக்காலம் முடிந்து ஒரு ஆண்டு தாமதமாக 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

2015ம் அண்டு தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுருந்த நிலையில், 2019ம் ஆண்டில், நடிகர் சங்க கட்டடிட பணிகளை உரிய விதத்தில் முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் விஷால் அணிக்கு எதிராக மாற்று அணியை திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியை கடந்த முறை விஷால் அணியில் இருந்த நடிகர் உதயா, குட்டி பத்மினி ஆகியோர் முன்னெடுத்தனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட போட்டி அணியில் தலைவர் பதவிக்கு நாசருக்கு எதிராக பாக்யராஜூம், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலுக்கு எதிராக ஐசரி கணேசும் போட்டியிட்டனர். இதேபோல், விஷால் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சி முருகன் மற்றும் கருணாசுக்கு எதிராக குட்டி பத்மினியும், உதயாவும் களமிறங்கினர். 2015ம் ஆண்டு விஷால் அணியில் போட்டியிட்டு துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிய பொன்வண்ணன் இந்த முறை அதிர்ப்தி காரணமாக போட்டியிடவில்லை.

விஷால் தலைமையிலான அணியில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு, கோவை சரளா உள்ளிட்டோர் போட்டியிட்டனர், பாக்யராஜ் தலைமையிலான அணியில் செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்கு பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரகுராம், பாண்டியராஜன், சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் களம் கண்டனர்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் நட்சத்திரங்கள் அணிவகுக்க கோலாகலமாக தேர்தல் நடைபெற்றது. ஆனால் 2018ம் ஆண்டே பதவிக்காலம் முடிந்த விஷால் தலைமையிலான செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்தது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோல், வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்கவும் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன்படி வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டன.

இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24-ம் தேதி தீர்ப்பளித்தார். இதனை விஷால் தரப்பு எதிர்த்து மேல் முறையீடு செய்த நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என்றும் கடந்த 2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவு அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. ,மேலும் வாக்குப் பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து 3 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டு இருந்த தேர்தல் முடிவுகள் விரைவில் அறிவிக்கபட உள்ளன.