பொருளாதார தடை உலகளாவிய மார்க்கெட்டை பாதிக்கும்- ரஷியா சொல்கிறது

0
61

பொருளாதார தடை உலகளாவிய மார்க்கெட்டை பாதிக்கும்- ரஷியா சொல்கிறது

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்தன. ஆனால், அமெரிக்கா குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள கிழக்கு பகுதியில் இரண்டு நகரங்களை தனிப்பகுதியாக ரஷியா அங்கீகரித்தது.

மேலும், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள ரஷியாவுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வெளிநாட்டிற்கு ரஷியாவின் ராணுவத்தை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில் தங்கள் மீதான பொருளாதாரத்தடை உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் கூறுகையில் ‘‘எங்களுக்கு எதிரான தடை, உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனர்ஜி மார்க்கெட்டிலும் பாதிப்பு ஏற்படுத்தும். விலைவாசி உயர்வை மக்கள் உணர்வதை அமெரிக்கா எளிதாக புறந்தள்ளி விடாது’’ என்றார்.

மேலும், மேற்கத்திய நாடுகளின் எந்த தடையும் இல்லாமல் ரஷியா வாழ்ந்த ஒரு நாள் கூட எனக்கு நினைவில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். வாழ்வதற்கு மட்டுமல்ல. எங்கள் நாட்டை முன்னேற்றுவதற்கும்தான் எனத் தெரிவித்துள்ளார்.