தீதும் நன்றும் விமர்சனம்

0
91

தீதும் நன்றும் விமர்சனம்

என் எச் ஹரி சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் எச். சார்லஸ் இம்மானுவேல் தயாரித்திருக்கும் தீதும் நன்றும் படத்தை இயக்கியிருக்கிறார் ராசு ரஞ்சித்.
வட சென்னையில் பெற்றோர்களை இழந்த ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு இரவில், முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபடுபவர்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் அவரின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் ராசு ரஞ்சித்க்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள். ஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. மூவரில் சந்தீப் ராஜன் தப்பிச் சென்றுவிட ராசு ரஞ்சித்தும், ஈசனும் போலீசிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஒருவருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கின்றனர். விடுதலையாகி வரும்போது ஈசனை மனைவி ஏற்க மறுக்க இனி தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லி மனைவியுடன் இணைகிறார், திடீரென்று இவர்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட பணம் இல்லாமல் ஈசன்; திண்டாட அந்த நேரத்தில் வரும் சந்தீப் ராஜன் அவர்களுக்கு பண ஆசை காட்டி மீண்டும் தப்பு செய்ய தூண்டுகிறார். இதில் ஈசன் கதை முடிய நண்பனை கொன்றவனை ராசு ரஞ்சித் பழிவாங்குவதே கிளைமாக்ஸ்.

ராசு ரஞ்சித் நண்பராக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார்.  லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாகவும், கச்சிதமாகவும் செய்து இருக்கிறார்.
இவரின் நண்பராக ஈசன் உருக்கத்தோடு நடித்து அசர வைக்கிறார். அவரின் மனைவியாக அபர்ணா நடை, உடை, பாவனைகளில் வசீகரிக்கிறார்.

வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு. மற்றும் இன்பா, காலயன் சத்யா, கருணாகரன் பலரும் உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கெவின்ராஜ் தாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளை, இரவு நேர காட்சிகள் என்பதால் காட்சிக் கோணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படத்திற்கு வலு சேர்;த்திருக்கிறார். இசையமைப்பாளர் சத்யா, பின்னணி இசை மூலம் கடுமையாக உழைத்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

படத்தொகுப்பு,  ஹீரோ, இயக்கம் என்று ராசு ரஞ்சித் ரசனையுடன் பங்களிப்பு செய்து நட்பு, காதல், துரோகம் என எல்லாவற்றையும் உள்ளாடக்கிய படமாக திரைக்கதையில் குழப்பம் இல்லாமல் எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை அமைத்து ஷாக் தந்திருக்கிறார். தன்னுடைய முதல் படத்தில் பொறுப்புடன் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். ரவுடியிஸம், கொள்ளை என வடசென்னை நண்பர்களின் பாசம், அவர்கள் செய்யும் தவறு, அதில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனை வட சென்னை பகுதி கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளுக்கும் வித்தியாசமான சம்பவங்களுக்கும் பஞ்சம் இல்லை.

மொத்தத்தில் தீதும் நன்றும் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் சரிசமமே.