‘திரையரங்குகளில் வார நாட்களில் 5 காட்சிகள் திரையிட அனுமதி தர வேண்டும்!’ – தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

0
197

‘திரையரங்குகளில் வார நாட்களில் 5 காட்சிகள் திரையிட அனுமதி தர வேண்டும்!’ – தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

திரையரங்குகளில் வார நாட்களில் 5 காட்சிகள் திரையிட அனுமதி தர வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1. தற்போது தமிழகத்தில் வார நாட்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்றப்பெற்ற ஒரு விதி (Rule) என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். இத்தனை காலமாற்றம் நிகழ்ந்த பின்பும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை ஒரு தனித்திரையரங்கில் நான்கு காட்சி மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்கிற விதி காலாவதியான ஒன்றாக இருப்பதனால், குறைந்தபட்சம் ஐந்து காட்சிகளை இயக்கிக்கொள்ளத் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம், மேலும் ஒரு காட்சி பல திரைப்படங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கிடைக்கும். திரையரங்குகளும் அதன் மூலம் பயனடையும். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு திரைப்பட நகர் (Film City) உருவாக்கவும், தரமணியில் ஏற்கனவே இயங்கி வரும் திரைப்பட நகரில் கூடுதல் தளங்களை ஏற்படுத்தித் தருகிறோம் என்கிற அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவிக்கும் நேரத்தில் அத்தகைய புதிய திரைப்பட நகர் (Film City) மற்றும் தரமணியில் கூடுதல் தளங்கள் அமைக்கும் பணி கூடிய விரைவில் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த பொதுக்குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

3. சென்னையில் ஐம்பதாயிரம் பேர் அமரும் வகையில் விளையாட்டரங்கம் உள்ளது. ஆனால், ஒரு பெரிய கலை நிகழ்வு நடக்கும் வகையில் கலையரங்கம் (Auditorium) சென்னையில் இல்லாதது சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு சிக்கல்களைத் தருகிறது. குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் நபர்கள் அமரும் வகையில் ஒரு கலையரங்கம் தமிழக அரசால் அமைக்கப்பெற்றால் இசைவெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் மற்றும் இதர சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிகழ்வுகள் நடத்தவும் எளிதாக அமையும். அதற்கான வழிவகுப்பு செய்து, விரைவில் அத்தகைய ஒரு கலையரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

4. தமிழ்நாட்டில் ஆயிரத்து நூற்றைம்பது திரையரங்கம் உள்ளது. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மைக் கொண்டு வர ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு ஒரு செண்ட்ரலைஸ்ட் பாக்ஸ்-ஆஃபிஸ் கலெக்‌ஷன் டிராக்கிங் சிஸ்டம் (Centralized Box Office Tracking Software System) வரவேண்டுமென்று முதலிலிருந்தே நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு வரத் தமிழக அரசு ஆயத்தம் செய்து தரக் கேட்டுக்கொள்கிறோம்.

5. 2009 முதல் 2014 வரை தமிழக அரசிடம் இருந்து திரைத்துறைக்கான விருதும், சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியமும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் 2015 முதல் 2022 வரையில் ஏழு வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகளும், மானியங்களும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதை இந்த பொதுக்குழு பாராட்டுகிறது. அதற்கான தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் திரைப்படங்களை பார்த்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம். அந்த தேர்வுகள் வெகு விரைவில் முடிவு செய்யப்பட்டு ஏழு வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகளும், சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான மானியங்களும் வெகு விரைவில் வழங்க வேண்டுமென தமிழக அரசை இந்த பொதுக்குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

6. தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் (Single Window Clearance) மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. தற்போது திறைத்துறைக்கு உள்ள தணிக்கைக்குழுவின் செயல்முறை மிகவும் கடினமாக உள்ளது. இங்கே ஒரு படம் திரையிடப்பட்டபின், நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியல் மும்பை அலுவலகத்திற்குச் சென்று ஒப்புதல் அளிக்கப்பட்டு மீண்டும் சென்னையில் அதன் ஒப்புதல் சரிபார்க்கப்பட்டு அதற்கான தணிக்கைச் சான்றிதழ் மறுமுறை மும்பை அலுவலகத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கான காலநேரம் குறைந்தது ஐந்து பணி நாட்கள் ஆகிறது. இதன் வழிமுறையைச் சுருக்கி, மத்திய அரசு சென்னையில் தணிக்கைக்காகத் திரையிடப்படும் படங்களுக்கான நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்புதல், சரிபார்ப்பு போன்ற வழிமுறைகளை இங்கே உள்ள குழுவே செய்து முடித்து அதற்கான தணிக்கைச் சான்றிதழ்களை சென்னையிலேயே வழங்கினால் இரண்டு நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியும். தற்போது உள்ள விதிமுறையை மத்திய அரசு மாற்றி சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கை அலுவலகமே அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை உண்டாக்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

8. அடுத்தபடியாக சாடிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்களின் அறிவிப்பு வெளியான உடனே அவற்றை வாங்குவதற்குக் காட்டும் ஆர்வத்தினை சிறிய பட்ஜெட் படங்களுக்கும் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதன் மூலம் பல சிறிய பட்ஜெட் திரைபடங்கள் பலன் அடைய முடியும். சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்களை வாங்க உங்களிடம் நிதி இல்லையென்றாலும், குறைந்தபட்சம் PAY PER VIEW முறையில் வெளியிட்டு வருமானத்தை ஈட்டி தந்தால் கூட அது தயாரிப்பாளர்களுக்கும் சிறிய பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்களுக்கு காட்டும் ஆதரவாக அது இருக்கும். இதை அனைத்து சாடிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்களும் செயல்படுத்துமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட இந்த கோரிக்கைகளை மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் மனுவாக அனுப்ப உள்ளோம் என்பதனை இந்த பொதுக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.