சியான்கள் விமர்சனம்

0
68

சியான்கள் விமர்சனம்

தேனி அருகே கிராமத்தில் ஒய்வூதியம் வாங்கும் ஏழு முதியவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களை ஒரு டிவி சேனல் சமையல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த பிரபலமாகிறார்கள். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் கரிகாலன் இவர்களிடம் அன்பாக பழகுகிறார்.இதனிடையே மருமகள் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு முதியவர், மற்றோருவர் குடும்ப சொத்திற்காக விஷ ஊசி போட்டு கொள்ளப்படுகிறார். இருவர் இறக்க மற்ற ஐந்து பேரும் குடும்பத்திற்காக உழைத்தது போதும் தங்களது ஆசையை நிறைவேற்றி வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் ஒரு முதியவரான நளினிகாந்த் விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட, சென்னைக்கு வருகின்றனர். அங்கே நளினிகாந்த் விபத்தில் சிக்க, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு பணஉதவி செய்ய டாக்டரும், சேனல் நிருபரும் முயற்சி செய்கின்றனர். இவர்கள் முயற்சியால் நளினிகாந்த் காப்பாற்றப்பட்டாரா? இந்த முதியவர்களின் ஆசைகள் நிறைவேறியதா? என்பதே க்ளைமேக்ஸ்.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம்ஆகியோர்  கிராமத்து முதியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

முத்தமிழ் இசை பாபுகுமாரின் ஒளிப்பதிவு படம் முழுவதும் கிராமத்து மண் வாசனையோடு கொடுத்து கை தட்டல் பெறுகின்றனர்.

எடிட்டிங்-மப்பு ஜோதி பிரகாஷ், கலை-ரவீஸ், பாடல்கள்-முத்தமிழ், உடை-கதிரவன், ஒப்பனை-வெங்கடேஷ்வர ராவ், நடனம்-அப்சர், சண்டை-பிசி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பு.

சில படங்களில் ஒரு முதியவரின் வாழ்க்கையை மட்டுமே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் ஏழு பேரின் வாழ்க்கையை கலகலப்பாகவும், சோகமாகவும் கொடுத்து, பிறருக்காக வாழ்ந்த வாழ்க்கை போதும் தனக்காக வாழும் வாழ்க்கை வாழ்ந்து இறக்க வேண்டும் என்பதை நாசூக்காகவும், முதியவர்களை உதாசீனப்படுத்தாமல் மரியாதையோடு நடத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்து, ஆதரவற்ற முதியோர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ வழி நடத்திட வேண்டும் என்ற புது யோசனையோடு இடைச்சறுகலாக காதலை இணைத்து முத்திரை பதித்து இயக்கியிருக்கிறார் வைகறைபாலன்.வெல்டன்.
சியான்கள் சீட்டி அடிக்க வைக்கும் சீமான்கள்.