சினம் கொள் விமர்சனம்: அனைவரும் பார்த்து கரவொலி எழுப்பலாம்

0
129

சினம் கொள் விமர்சனம்: அனைவரும் பார்த்து கரவொலி எழுப்பலாம்

ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சினம் கொள்” ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம், தீப செல்வன், தனஞ்செயன், பாலா, மதுமிதா, பேபி டென்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிக்குமார் இசை – என்.ஆர்.ரகுநந்தன் வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன். எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம். கலை – நிஸங்கா ராஜகரா. சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் – சு.வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.பிஆர்ஒ-புவன்.

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனது, என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், எட்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சொந்த வீட்டைத் தேடி முல்லைத்தீவு வருகிறார் போராளி அமுதன் (அரவிந்தன் சிவஞானம்) . ஆனால் அவரது வீடு அமையப்பெற்ற வட்டப்பிலை பகுதிகளில் எல்லாம் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க அங்கே நுழைய முடியாத நிலையில் சிறைக்குப் போனபோது ஆதரவின்றி விடப்பட்ட தன் மனைவியைத் தேடி அலைகிறார். அதன் விளைவாக அவருடன் போராளிகளாக செயல்பட்ட தோழரையும் தோழியையும் சந்தித்து ஆறுதல் பெறுகிறார். தொடர்ந்த தேடலின் முயற்சியில் மனைவியையும் மகளையும் சந்திக்கிறார். இனி ஆயுதத்தைக் கையால் தொடுவதில்லை, அமைதி வழியே தன் வழி என்று இருக்கும் அமுதன் மீது பெண் கடத்தல் பழிவிழுகிறது. தன் மேல் பழி விழக் காரணமான நாசகாரக் கும்பல் எது என்பதைக் கண்டுபிடித்தாரா? கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு அவரை சுற்றி நடந்த சதியிலிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அமுதனாக வரும் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பத்தில் தமிழர்களின் அவலங்களையும், அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். கண்களில் தேடல் இருந்தாலும் அதை தாண்டிய ஒரு போராளியின் தீர்க்கம் உறைந்திருக்கிறது. தனது குடும்பத்தை தேடி அலைவது, மனைவி, மகள் கிடைத்தவுடன் அவர்களுடனான மகிழ்ச்சியான வாழ்க்கை என்று சாமானியனின் வாழ்க்கையை யதார்த்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.

ரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனஞ்செயன், பாலா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்குப்புதியவர்கள் என்பதால் யாரும் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருக்கிறார்கள்.

தீபச்செல்வனின் வசனம் மற்றும் பாடல் வரிகள் அனைத்தும் ஈழ மக்களின் வலிகளை மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது.

கதைக்கு ஏற்றவாறு கேமரா பயணித்து, எளிமையான காட்சிகளை கூட பிரமாண்டமாக காட்டி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு.

என்.ஆர்.ரகுநந்தன் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஈழத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே டாக்குமெண்டரி பாணியில் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டி, இலங்கைப் போராளிகள் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் வெளிநாடு போய் சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் வசதியான தமிழர்கள் சொந்த மண்ணின் தமிழ் மைந்தர்களை மதிக்காமல் ஏமாற்றுவதும், அத்தகைய வசதியான தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் பற்றி பேசும் கதையாகவும், மற்றும் இலங்கைவாழ் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் ஒரு பரபரப்பான கமர்ஷியல் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

மொத்தத்தில் ஸ்கை மேஜிக் பட நிறுவனம் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம்; இணைந்து தயாரித்துள்ள படம் “சினம் கொள்” அனைவரும் பார்த்து கரவொலி எழுப்பலாம்.

ஈழம் பிளை (Eelamplay) பார்க்கலாம்.

https://eelamplay.com/ta