சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

0
75

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

சாய்னா நேவால் குறித்து சித்தார்த்தின் ட்வீட் சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும், தங்களது கருத்துகளை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவ்-ஆக இயங்கி வருவர். இவர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். எனினும் நடிகர் சித்தார்த் தனது ட்வீட் பதிவுகளின் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்தவகையில் தற்போது புதிய சர்ச்சையில் நடிகர் சித்தார்த் சிக்கியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, அங்கு சென்றபோது வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, மீண்டும் டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

“எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என்று தனது ட்வீட்டில் சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்த நடிகர் சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள்கொள்ளும்படி குறிப்பிட்டிருந்தார் என்று அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வர ஆரம்பித்தன. இது பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக சர்ச்சை உருவானது. இதையடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா உள்ளிட்ட பலரும் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைக்கு கடிதம் எழுதியது. மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்சொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும்.

இருப்பினும், எனது ட்வீட் வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.