க/பெ ரணசிங்கம் விமர்சனம்

0
88

க/பெ ரணசிங்கம் விமர்சனம்

சமூக பிரச்சனைக்காக போராடும் விஜய்சேதுபதி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியின் எண்ணத்தை மாற்றி துபாயில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி எதிர்பாராத விதமாக இறந்து விட, அவரின் உடலை துபாயிலிருந்து பல தடங்கல்களை கடந்து இந்தியாவிற்கு கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி போராடுகிறார்? என்பதே க்ளைமேக்ஸ்.
இதில் ரணசிங்கமாக விஜய் சேதுபதி கச்சிதமான தேர்வு. படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அரியநாச்சியாக வலுவான கிராமத்து பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அரசு அதிகாரிகளை தன் கேள்விகளால் துளைத்து எடுத்து, தன் ஆதங்கத்தையும், இயலாமையையும் கொட்டித் தீர்த்து கை தட்டல் பெறுகிறார்.
‘பூ” ராம், மாவட்ட கலெக்டராக ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ,அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், நமோ நாராயணா ஆகியோர் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்து படத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
ஜிப்ரான் இசை, சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு,சண்முகம் முத்துசாமியின் வசனம் ஆகிய மூவரும் சேர்ந்து கிராமத்து மண் வாசனையோடு கொடுத்து மனம் கவர்கிறார்கள்.
சமூக அக்கறையோடு செயல்படுவர்கள் வாழ்க்கை எப்பொழுதுமே போராட்ட களமாகத் தான் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் எந்த இடத்தில் வேலை செய்தாலும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது என்பது கேள்விக்குறிதான் என்பதை குடும்ப செண்டிமெண்ட் கலந்து அனைவரும் விழிப்புணர்வு பெறும் வகையில் வெளிநாட்டில் கணவரின் இறப்பு மனைவிக்கு எவ்வளவு மனத்துயரங்களும், சிக்கல்களையும் ஏற்படுத்தும், அதை சமாளிக்கும் மனப்பக்குவம் இருப்பவர்கள் மட்டுமே அதிலிருந்து மீள முடியும் என்பதை கனகச்சிதமாக இடித்துரைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் விருமாண்டி. முதல் பாதி காதல், வாழ்க்கை என்று சலசலப்பாக செல்ல, இரண்டாம் பாதி கணவனை இழந்த மனைவி எதிர்கொள்ளும் போராட்டங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக பவர்புல்லாக இருந்திருக்கும்.
கே.ஜெ.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோடபாடி ராஜேஷ் தயாரித்திருக்கும் கபெ.ரணசிங்கத்தின் கர்ஜனை அனைவரையும் கவரும்.