குலசாமி திரைவிமர்சனம்: குலசாமி ஈர்ப்பு இல்லை | ரேட்டிங்: 2/5

0
307

குலசாமி திரைவிமர்சனம்: குலசாமி ஈர்ப்பு இல்லை | ரேட்டிங்: 2/5

விஜய் சேதுபதியின் வசனத்தில் விமல் நடிப்பில் வெளியாகியுள்ள படம் குலசாமி. இப்படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார். இந்த படத்தை எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (MIK Productions Private Limited) தயாரித்துள்ளது. விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தி அவர்களின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும், ஜீ  தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு தியாகு.

மதுரையின் புறநகரில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான கல்லூரி மாணவியின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. அடுத்த காட்சியில், விசாரணை போலீஸ் அதிகாரி கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடிக்கிறார். இருப்பினும், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், ஒரு மர்ம மனிதர் நாய் உதவியுடன் சந்தேக நபரைக் கொள்கிறார். அதே நேரத்தில், சூர சங்கு (விமல்), தனது தங்கை மாநிலத்தின் முதல் மாணவியாக பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு ஆகிறாள். அண்ணனின்  ஆசை மருத்துவர் ஆகவேண்டும் ஆனால் தங்கை அண்ணனை விட்டு பிரிய மனமில்லாமல் படிப்பை தொடர மாட்டேன் என்று கூறுகிறாள். அதனால் அந்த கிராம மக்கள் உதவியுடன் கல்லூரி இருக்கும் பகுதியில் ஆட்டோ ஓட்டி கொண்டு தங்கை மருத்துவ படிப்பை  தொடர அவளை கவனித்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில், மருத்துவராக ஆசைப்பட்ட அவரது சகோதரி மர்மான முறையில் இறக்கிறாள். அதே சமயத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் பண வசதி இல்லாத சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுகிற அரசன் தலைமையில் ஒரு மோசமான கும்பலும் அறிமுகமாகிறார்கள். இறுதியில் கல்லூரியில் தங்கையை எதற்காக கொன்றார்கள்? அப்பகுதியில் நிகழும் தொடர் கொலைகளுக்கு யார் காரணம்? யார் குலசாமி? என்பதுதான் கதையின் மையக்கரு.

ஒரு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநராக சூர சங்கு கதாபாத்திரத்தில் விமல் நடிப்பை வழங்கியுள்ளார். இப்போது தான் நல்ல கதை களத்தில் நடித்து வரும் விமல் இனி இது போன்ற கதையை தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது.

கதாநாயகி தன்யா ஹோப். அவ்வளவு தான், அவரது பங்களிப்பு பெரிய அளவில் எடுபட வில்லை. தன்யாவை விட விமல் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவுக்கு பேசப்படும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி பேராசிரியராக வினோதினி, பாதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் லாவண்யா மாணிக்கம், வில்லனாக ஜனனி பாலு, காவல்துறை உயர் அதிகாரியாக வந்து போகும் போஸ் வெங்கட்,  போலீசாக நடித்துள்ள முத்துப்பாண்டி, கதாநாயகனின் மாமாவாக வரும் இயக்குநர் ஷரவணஷக்தி, கொடூர வில்லனாக நடித்திருக்கும் இயக்குநரின் மகன் சூர்யா ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

‘வைட் ஆங்கிள்’  ரவிசங்கரன் ஒளிப்பதிவும், கோபி கிருஷ்ணனின் படத்தொகுப்பும், வி.எம்.மகாலிங்கத்தின் பின்னணி இசையும், கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளும், நடிகர் விஜய் சேதுபதியின் வசனம் குலசாமியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல படத்திற்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை என்பது தான் நிஜம்.

பேராசிரியை நிர்மலா தேவி, இரண்டாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக வற்புறுத்தி தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இணைத்து அனைவரும் அறிந்த நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி அழுத்தமில்லாத திரைக்கதை அமைத்து யூகிக்கக்கூடிய காட்சிகளுடன் அனைவரையும் சோதித்திருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி.

மொத்தத்தில் எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள குலசாமி ஈர்ப்பு இல்லை.