கிளாப் விமர்சனம்: விளையாட்டு சார்ந்த திரைப்படங்களை ஊக்கமூட்ட விரும்புபவர்களும், ஸ்போர்ட்ஸ் திரைப்பட பிரியர்களும் விரும்புவார்கள் – மதிப்பீடு: 3 / 5

0
102

கிளாப் விமர்சனம்: விளையாட்டு சார்ந்த திரைப்படங்களை ஊக்கமூட்ட விரும்புபவர்களும், ஸ்போர்ட்ஸ் திரைப்பட பிரியர்களும் விரும்புவார்கள்

மதிப்பீடு: 3 / 5

நடிகர் : ஆதி, பிரகாஷ் ராஜ், நாசர், பிரம்மா ஜி, மைம் கோபி, முனிஷ்காந்த்,
நடிகை : ஆகான்ஷா சிங், கிரிஷா க்ரூப்
இயக்குனர் : பிரித்வி ஆதித்யா
இசை : இளையராஜா
ஓளிப்பதிவு : பிரவீன் குமார்
எடிட்டர்: ரகுல்
தயாரிப்பு : பிக் பிரிண்ட் கார்த்தி
வெளியீடு: சோனி லைவ்.

கதிர் (ஆதி ) சிறுவயதிலிருந்தே விளையாட்டு வீரராக வேண்டும் என்று விரும்புகிறார். ஓட்டப் பந்தயத்தில் பல கனவுகளோடு பயணிக்கும் அசைக்க முடியாத சாம்பியனாக விளங்கி இந்தியாவின் சார்பாக நேஷனல்களுக்கு செல்ல விரும்புகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சாலை விபத்தில் தனது காலையும், தனது தந்தையையும் (பிரகாஷ் ராஜ்) இழக்கிறார். இதனால் தன்னுடைய கனவான தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. அதன் மூலம் கதிரின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. இருப்பினும், கதிரை ஆரம்பத்திலிருந்தே காதலித்து வரும் மற்றொரு விளையாட்டு வீராங்கனையான மித்ரா (அகன்ஷா சிங்) அவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் ஒரே வீட்டில் ஆறு வருடங்கள் வாழ்ந்தாலும், இருவரும் இணைந்து வாழ முடியாததற்கு காரணம் கதிர் கால் இல்லையே என்ற மன வேதனையில் இருந்து மீளாதது தான். தன்னால் அடைய முடியாத ஆசையை நிறைவேற்ற, தடகள வீரர்களை தேடுகிறார் கதிர். இதனிடையே மதுரையில் உள்ள விளையாட்டு வீராங்கனை பாக்யலட்சுமி (கிரிஷா குருப்) பற்றி அறிந்து கொண்டு தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதித்து தேசிய சாம்பியனாக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன் கதிர் நாசரை விளையாட்டு திடலில் அவமானப்படுத்த அதை மனதில் வைத்துக் கொண்டு கதிரை பழி வாங்க பல சூழச்சிகளை செய்கிறார். கதிர் பாக்யலட்சுமிக்கு உதவுவதால் நாசர் மீண்டும் அவர்களது கனவை அழிக்க முயற்சிகளைத் மேற்கொள்கிறார். அவர் எப்படி நாசரின் தந்திரங்களில் இருந்து காப்பாற்றினார்? அவர் எப்படி பாக்யலட்சுமியை தேசிய விளையாட்டு வீராங்கனையாக ஆக்கினார் என்பதை அறிய இந்த படத்தை சோனி லைவில் பார்க்க வேண்டும்.

இதுவரை நாம் பார்த்த பல விளையாட்டு கதைகளைப் போலவே இந்தப் படமும் சில சுவாரசியமான கதைக்களம் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டுள்ளது. அதற்கேற்ப ஆதி தனக்கு வந்த கிடைத்த இந்த புதிய வேடத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் தடகள விளையாட்டு வீரராக தடம் பதித்திருக்கிறார்.ஒரு இளைஞனாக தொடங்கும் வாழ்க்கை பின்னர் ஒரு விளையாட்டு வீரராக காலை இழந்த ஆதி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

கதாநாயகியாக ஆகான்ஷா சிங் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.

மேலும் தடகள பெண் பாக்யலட்சுமியாக வரும் கிரிஷா குருப் அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பங்களிப்பை இருவரும் கொடுத்துள்ளனர்.

பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன், பிரம்மா ஜி, மைம் கோபி, முனிஷ்காந்த், மற்றும் பலர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

படத்தில் நல்ல காட்சியமைப்புகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவின் குமார். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இவரின் பணி கூடுதலாக கவனிக்கும்படி அமைந்துள்ளது.

எடிட்டர் ரகுல் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் விறுவிறுபபாக இருந்திருக்கும்.

இளையராஜா இசை படத்தின் ஹைலைட்.

இயக்குனர் ப்ரித்வி ஆதித்யாவைப் பொறுத்தவரை, வழக்கமாக வரும் தமிழ் சினிமாவின் கதையாக இருந்தாலும் தடகளம் எனப்படும் அத்லெட்டிக் கதையில் முக்கியமான விஷயத்தை அதாவது விடாமுயற்சி இருந்தால், அடித்தட்டுப் பெண்ணால் கூட விளையாட்டுக் களத்தில் வெற்றிக் கொடி பறக்க முடியும் என்பதை எங்கும் ஹேங்கொவர் ஆகாமல் ஒவ்வொரு காட்சியையும் முடிந்தவரை இயல்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் பிக் பிரிண்ட் கார்த்தி தயாரித்துள்ள கிளாப் படத்தை விளையாட்டு சார்ந்த திரைப்படங்களை ஊக்கமூட்ட விரும்புபவர்களும், ஸ்போர்ட்ஸ் திரைப்பட பிரியர்களும் விரும்புவார்கள்.