இளைய திலகம் பிரபு 40…

0
132

இளைய திலகம் பிரபு 40…

தமிழ் சினிமாவை தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது வரவினால் சினிமாவில் புதிய சகாப்தம் தொடங்கியது.

இவரது புதல்வர் இளைய திலகம் பிரபு திரைத்துறைக்கு வந்த இன்று ‘ஶ்ரீ பிலவ’ தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதுடன் இவரது திரை வாழ்க்கையின் வயது 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் திரையுலக வாழ்க்கை சுவையான தொடர்கதையாக வளர்ந்து வருகிறது.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடித்திருக்கிற தேசிய விருது பெற்ற மரைக்காயர் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சாந்தனுவுடன் ராவணக் கூட்டம், பிக்பாஸ் முகெனுடன் வேலன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படத்திலும், தெலுங்கில் 3 படங்களிலும் மற்றும் மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபு தனது முதல் படமான சங்கிலி படத்திலேயே தந்தை சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார்.. இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்தரன் இயக்க, தேவராஜ் தயாரித்திருந்தார். அப்பா சிவாஜியுடன் பிரபு மொத்தம் 19 படங்களில் நடித்திருக்கிறார்.

சங்கிலி படத்தின் தொடக்கவிழா அன்றைய அருணாசலம் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த விழாவுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆளுயரமாலைகளை தனது சார்பில் அனுப்பி வைத்திருந்தார் என்பது சிறப்பு செய்தியாகும் . இன்னொரு குறிப்பிடத்தகுந்த செய்தி சங்கிலி படம்தான் ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனுக்கு முதல் படம் பின்னாளில் பெப்சி விஜயன் என அழைக்கப்பட்டவர். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக திரு.பாபு மற்றும் திரு. விநாயகம் பணிபுரிய, ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார்.

கே.பி ஃபிலிம்ஸ் கே.பாலு தயாரிப்பில், பி.வாசுவின் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெள்ளி விழா கொண்டாடிய சின்னத்தம்பிக்கு நேற்றுடன் 30 ஆண்டுகள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், குசேலன், சந்திரமுகி படத்திலும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் வெற்றி விழா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திலும், பிரபு நடித்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

பிரபுவுடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிற நடிகைகள் ராதா, குஷ்பு.

கலைஞர் கருணாநிதியிடம் கலைமாமணி விருதும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவிடம் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றிருக்கிறார்.

நடிகர் திலகம் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இயக்குனர் பி.வாசு. இளைய திலகம் பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இயக்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சிவாஜி பட நிறுவனம் தயாரிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 824 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது. தென்னக திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய இப்படத்தை தயாரித்த பெருமைக்குரியவர் பிரபு ஆவார்.

இவை தவிர சிறந்த விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.