குளத்தில் இருந்து மண் கடத்தல்: லாரிகளை மடக்கிப்பிடித்த செந்தில்பாலாஜி எம்எல்ஏ

0
140
தூர்வாரும் இடத்தில் செந்தில்பாலாஜி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

குளத்தில் இருந்து மண் கடத்தல்: லாரிகளை மடக்கிப்பிடித்த செந்தில்பாலாஜி எம்எல்ஏ

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டி அருகே உள்ள புதுப்பாளையத்தில் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊர் பொது குளம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது.

குளத்தை தூர்வார டெண்டர் எடுத்தவர்கள், விதிமுறைகளுக்கு மாறாக குளத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் அதிகளவு மண்ணை அள்ளி விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அவர், குளத்தை பார்வையிட்டார். அப்போது குளத்துக்குள் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண்ணை அள்ளி 2 லாரிகளில் நிரப்பி கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த வாகனங்களை செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மடக்கி, விதிமுறைகளுக்கு மாறாக அதிகளவு மண் எடுத்து எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாருவதாக கூறி லாரி, லாரியாக மண் எங்கு கடத்தி செல்லப்படுகிறது, இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதன்பேரில், செந்தில்பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.