கடலூர் ஊராட்சி பள்ளிகளில் சமையல் கூடம், உணவு அருந்தும் அறை கட்டும் பணி: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் ஆய்வு

0
131

கடலூர் ஊராட்சி பள்ளிகளில் சமையல் கூடம், உணவு அருந்தும் அறை கட்டும் பணி: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் ஆய்வு

கடலூர், செப். 21–

கடலூர் மாவட்டம் தொண்டங்குறிச்சி, கம்மாபுரம் பள்ளிகளில் ரூ.22.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உணவருந்தும் அறை மற்றும் சமையல் கூடத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் மங்களர் ஊராட்சி ஒன்றியம் தொண்டங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் உணவருந்தும் அறை கட்டும் பணி நடைபெற்று 80 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. இப்பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த உணவருந்தும் அறையில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்வுத்தளம், படிக்கட்டுகள் அமைக்க உத்தரவிட்டார்.

இதே போல் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் கம்மாபுரம் அரசு மேல்நிலையில் ரூ.4.47 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணி நடைபெற்று 90 சதவிதம் முடிவுற்றுள்ளது. இப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சங்கர், ஆறுமுகம், இந்திராதேவி மற்றும் பலர் உடனிருந்தனர்