“நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர்.. எல்லாத்துறையிலும் கோலோச்சியவர் தலைவர் கலைஞர்” : முதலமைச்சர் புகழாரம்!

0
240

“நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர்.. எல்லாத்துறையிலும் கோலோச்சியவர் தலைவர் கலைஞர்”: முதலமைச்சர் புகழாரம்!

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின்  சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். ₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை வடிவமைப்பு.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சிறப்பித்துப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்வரவேற்று பேசினார்.

பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் மார்பளவு சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். அதற்கு அடுத்து, கருணாநிதி பற்றிய 12 நிமிடங்கள் ஓடும் சிறப்பு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கிய தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் நிலை உயர்த்தப்பாடுபட்டவர் என்பதால் தான் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது.

இன்று எழுப்பப்பட்டு இருக்கும் சிலைக்கு இருக்கும் ஒரு சிறப்பு என்ன என்றால் தந்தை பெரியாருக்கும் – பேரறிஞர் அண்ணாவுக்கும் – இடையில் நம்முடைய தலைவர் சிலை அமைந்துள்ளது. இதைவிடப் பொருத்தமானது இருக்க முடியாது. பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியில் படித்தவன் – பேரறிஞரின் காஞ்சிக் கல்லூரியில் பயின்றவன் – என்று அவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்பவே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில் தலைவரின் சிலை அமைந்துள்ளது.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் அந்த மாபெரும் கட்டடம் ஆகும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக கட்டப்பட்ட இடம் அது. இன்றைய தினம் மருத்துவமனையாகச் செயல்பட்டாலும் – அது கம்பீரமாகக் கலைஞர் அவர்களின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அங்கு தான் அவரது சிலை எழுந்துள்ளது. சிலையைத் திறந்து வைத்த பிறகு விழா நடக்கும் இந்த கலைவாணர் அரங்கமானது – ஒரு காலத்தில் பாலர் அரங்கம் என்று இருந்தது. அதனை மிகப்பிரமாண்டமாக கட்டி எழுப்பி கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியவர் நம்முடைய தலைவர் அவர்கள்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட விழாவுக்கு மகுடம் வைப்பதைப் போல இந்தியக் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வருகை தந்து – தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்துள்ளார்கள். நம்முடைய நட்புக்குரிய – இனிய நண்பராகத்தான் துணை குடியரசுத் தலைவர் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள். இந்திய நாட்டின் துணைக்குடியரசுத் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியில் இருக்கும் போது தலைவர் சிலையை திறந்து வைத்திருப்பது பெருமைக்குரியது ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைத்துள்ளார்கள். தலைவர் சிலையை துணைக்குடியரசுத் தலைவராகிய நீங்கள் திறந்து வைத்துள்ளீர்கள். இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர் கலைஞர். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர். இந்திய அளவில் நிலையான ஆட்சியை உருவாக்க பலமுறை முயன்று வெற்றி பெற்றவர் கலைஞர்.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து – இந்த நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர். அத்தகைய மாமனிதருக்குத் தான் இன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக 1967 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தபோது – ”ஏழைக்குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டிலில்!இனி ஏழைக்கு வாழ்வு வந்தது” – என்று தலைப்புச் செய்தியாக ‘முரசொலியில்’ தலைவர் கலைஞர் எழுதினார்கள்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் கோலோச்சியவர் கலைஞர் அவர்கள். இலக்கியமா? குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர் சங்கரும் காலத்தால் அழிக்க முடியாத காப்பியங்கள் ஆகும். திரையுலகமா? இன்றும் பராசக்தி – மனோகரா – பூம்புகார் வசனங்கள் நாட்டில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

எனது அருமை நண்பர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்கள். அவர் நன்கு அறிவார். திரையுலகத்துக்குள் வருபவர்கள் கலைஞரின் வசனத்தைப் பேசி – அதில் தங்களது திறமையை நிரூபித்து உள்ளே நுழைந்தார்கள் என்பது வரலாறு. தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற மாபெரும் கனவு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அதற்கான தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது.

அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அத்தகைய மக்களின் உயர்வுக்காக எழுதினார். அவர்களுக்காகப் பேசினார். அவர்களுக்காகப் போராட்டம் நடத்தினார். அவர்களுக்காகச் சிறையில் இருந்தார். ஆட்சி – அதிகாரம் கிடைத்ததும் அவர்களுக்காகத் திட்டங்கள் தீட்டினார். அந்த திட்டங்களால் உருவானது தான் இந்தத் தமிழ்நாடு.

* அவர் உருவாக்கிய கல்லூரிகளில் படித்தவர்கள் –

* அவரால் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் –

* அவர் காப்பாற்றிக் கொடுத்த சமூகநீதியால் உயர்வைப் பெற்றவர்கள் –

* இலவச மின்சாரம் திட்டத்தால் பூமியைச் செழிக்க வைத்த விவசாயிகள் –

* சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்களால் வேலை வாய்ப்பைப் பெற்றோர்-

* குடிமை மாற்றுவாரியத்தால் வீடுகள் பெற்றவர்கள் –

* நிலங்களைப் பெற்றவர்கள் –

*மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் நல்வாழ்வு பெற்றவர்கள் –

* மகளிருக்கு சொத்துரிமை தரப்பட்டதால் சொத்துக்கள் பெற்ற மகளிர் – * சுய உதவிக்குழுக்களால் வாழ்க்கைத் தரம் உயர்ந்த மகளிர் –

*பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் –

* இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் – தாய்த்திருநாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்கு பயனளித்த வான்போற்றும் வள்ளல் தான் தலைவர் கலைஞர் இதே அண்ணா சாலையில் தந்தை பெரியாரின் விருப்பப்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது.

ஆனால் அது சிலரால் இடிக்கவும் பட்டது. கடப்பாரையைக் கொண்டு இடித்து நொறுக்கப்பட்டது. அப்போதும் கலைஞர் அவர்களுக்கு கோபம் வரவில்லை, கவிதை தான் வந்தது.

“உடன்பிறப்பே!

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை –

நெஞ்சிலே தான் குத்துகிறான்,

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க வாழ்க

அன்புள்ள மு.க. – என்று தான் எழுதினார்கள்.” எனத் தெரிவித்தார்.

முடிவில் தலைமைச்செயலாளர் இறையன்பு நன்றி கூறினார். அதன் பின்னர் சென்னை போலீசாரின் பேண்டு வாத்திய குழு தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைந்தது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, சென்னை மேயர் பிரியா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மகன் மு.க.தமிழரசு, மருமகன் முரசொலி செல்வம், மகள்கள் செல்வி, கவிஞர் கனிமொழி எம்.பி., பேரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்!

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி! – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.