தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

0
8

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதல்கட்டமாக ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நாடு முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நேற்று, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று மட்டும் நாடு முழுவதும் 4.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 25 லட்சம் பேர் கோவின் ஆப்பில் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.