வசந்த முல்லை விமர்சனம் : வசந்த முல்லை த்ரில்லரில் ஒரு புது முயற்சி | ரேட்டிங்: 3/5

0
538

வசந்த முல்லை விமர்சனம் : வசந்த முல்லை த்ரில்லரில் ஒரு புது முயற்சி | ரேட்டிங்: 3/5

அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமாவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’.

இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா  சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, விவேக் ஹர்சன் எடிட்டிங் கவனிக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு : யுவராஜ்

ருத்ரன் (பாபி சிம்ஹா) ஒரு ஐடி ஊழியர், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டத்தை முடிக்க நிறைய அழுத்தங்களை சந்திக்கிறார். ஒரு நாள், அவர் தன் மனைவியுடன் திரையரங்கில் இருக்கும் போது மயக்கமடைகிறார், பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் அவருக்கு தூக்கமின்மையின் விளைவாக இருட்டடிப்பு கோளாறு அதாவது ‘பிளாக்அவுட்’ கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வெடுக்கச் சொல்கிறார். ருத்ரனின் உடல் நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். மலைப்பகுதிக்கு சென்று சுற்றுலா முடித்து வரும் வழியில் வசந்த முல்லை என்ற பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அப்போது நிலாவுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ருத்ரன்  இன்ஹேலரை தேட பிறகு நிலாவுக்கு இன்ஹேலரை வாங்கி வர ருத்ரன் காரை எடுத்து செல்கிறான். ருத்ரன் மீண்டும் மோட்டல் அறைக்கு வரும் போது நிலா அங்கு இல்லாமல் சில விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த விசித்திரமான விஷயங்கள் என்ன? காணாமல் போகும் நிலா என்ன ஆனாள்? என்பதே படத்தின் மீதி கதை.

பெரும்பாலும், எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. ஆனால் இங்கே வசந்த முல்லையில், அவர் நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தது பாராட்டுக்குரியது. அவர் தனது சிறப்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக பொருந்தி பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்துள்ளார்.

காஷ்மீரா பரதேசி அழகாக இருக்கிறார் மற்றும் அவர் கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்குகியுள்ளார். பாபி சிம்ஹா உடனான அவரது காதல் காட்சிகள்  நன்றாகவே வேலை செய்கின்றன.

நடிகர் ஆர்யா ஈர்க்கக்கூடிய கேமியோ ரோலில் முதிர்ச்சியான நடிப்பைத் கொடுத்திருக்கிறார்.

விடுதியின் வரவேற்பரை ஊழியராக நடித்துள்ள கொச்சு பிரேமன், மருத்துவராக வரும் சரத் பாபு மற்றும் மற்ற துணை நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நியாயப்படுத்தி கவனிக்க வைக்கிறார்கள்.

பாடல்களும் ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும், கோபி அமர்நாத் ஒளிப்பதிவும்,  நேர்த்தியாகவும் வசீகரமாகவும் உள்ளன.

தற்போதைய தலைமுறையை மனதில் வைத்து இந்தப் படத்தைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரமணன் புருஷோத்தமா. உறக்கமின்றி வாழும் ஹீரோவுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் தான் ‘வசந்த முல்லை’ படத்தின் கரு. டைம்-லூப் மாதிரியான கான்செப்ட்டை இணைக்க வேண்டும் என்று முகமூடி அணிந்த மனிதனைக் கொண்ட சில காட்சிகள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு இருந்தாலும், திரைக்கதை சில நேரங்களில் குழப்பமாக இருக்கிறது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் வருமானத்தை துரத்தி, தூக்கத்தை துறந்து விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை இழக்காமல், இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் இயக்குனர் ரமணன் புருஷோத்தமாவை பாராட்டலாம்.

மொத்தத்தில் முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் வசந்த முல்லை த்ரில்லரில் ஒரு புது முயற்சி.