ஹர்கரா திரைப்பட விமர்சனம் : ஹர்கரா அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல் காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் | ரேட்டிங்: 3/5

0
137

ஹர்கரா திரைப்பட விமர்சனம் : ஹர்கரா அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல் காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் | ரேட்டிங்: 3/5

வி1 மர்டர் கேஸ்’ என்ற படத்தை தொடர்ந்து கலர்ஸ் ஃபுல் பீட்டா மூவ்மென்ட் தயாரித்துள்ள படம், ‘ஹர்காரா’. இதற்கு முன்பு ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ, இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரே இந்தியாவின் முதல் தபால்காரர் வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக காளி வெங்கட் நடித்துள்ளார். தவிர, கன்னட நடிகை கவுதமி சவுத்ரி, இயக்குனர்கள் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளனர். என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ், அரவிந்த் தர்மராஜ், தீனா தயாரித்துள்ளனர். பிலிப் ஆர்.சுந்தர், லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராம் சங்கர் இசை அமைத்துள்ளார்.

‘தற்காலத்தில் கூட டிஜிட்டல் வசதிகள் இல்லாத ஒரு மலை கிராமத்திற்கு செல்லும் ஒரு போஸ்ட்மேன் சந்திக்கும் பிரச்சினைகளையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில், 1880களில் ஒரு பகுதி கதை, 2023ல் இன்னொரு பகுதி கதை நடக்கிறது. தேனி மாவட்டத்தில் மலை கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு சுயநல தபால்காரரைச் சுற்றி கதைக்களம் சுழல்கிறது. புதிய போஸ்ட் மேன் வேலைக்கு சேருகிறார் காளி. (காளி வெங்கட்) மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய அவருக்கு விருப்பமில்லை. சிறு சேமிப்பு பணத்தை அடிக்கடி கடன் கேட்கும் ஊர் மக்கள், துணி எடுக்கக் கூட டவுனுக்கு செல்ல வேண்டிய சிரமம், இதைவிட முக்கியமாக மலை காட்டில் வசிப்பதால், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்ற கோபமும் காளிக்கு ஏற்படுகிறது. இவை அனைத்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை உணர்ந்த உடன், அவர் வெளியேற முடிவு செய்கிறார். எப்படியாவது இந்த ஊரில் இருக்கும் தபால் நிலையத்தை மூட வைத்து, பணி மாற்றல் வாங்கிச் செல்ல திட்டமிடுகிறார். அதற்காக மனு ஒன்றை தயார் செய்து, அந்த மனுவில் படிப்பறிவு இல்லாத கிராமவாசிகளின் கட்டைவிரல் பதிவை பொய் சொல்லி வாங்குகிறார். தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார். அதே சமயம் மலை உச்சியில் வசிக்கும் மாரியம்மாளுக்கு (விஜயலக்ஷ்மி) ஒரு கடிதத்தைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வந்து சேர்கிறது. அதை நிறைவேற்றும் கரடுமுரடான மலை பாதை பயணத்தில், ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலை கிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஸ்வரன் என்ற ஹர்காராவை (தபால் காரர்) பற்றி தெரிந்து கொள்கிறார். இந்த முதல் ஹர்காரா செய்த விஷயம் என்ன என்பது பற்றி படம் சொல்கிறது. அவரின் கதை என்ன? அந்தக் கதை கேட்ட பின் காளிக்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் முக்கிய அம்சம்.

சமீப காலத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும்  காளி வெங்கட், மீண்டும் ஒரு யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் ஒரு தபால்காரராக பாத்திரத்தை தன் தோளில் சுமந்து நெகிழ்ச்சியான காட்சிகளிலும், குற்றவுணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சிறப்பாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் கம்பீரமான தோற்றத்தில் ஹர்கராவாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ வெகுவாக ஈர்க்கிறார். சிலம்பம் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

கவுதமி சவுத்ரி, இயக்குனர்கள் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பு கூடுதல் சிறப்பு.

அற்புதமான இயற்கை அழகுக்கு மத்தியில் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக அமைந்துள்ள பாதை, சிறிய கிராமங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள், வியத்தகு நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அருவி நீர் படத்திற்கு ஏற்ற காட்சிகளை ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர் சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஆகியோரின் ஒளிப்பதிவு மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ராம் ஷங்கரின் இசை, மற்றும் பின்னணி ஸ்கோர் கதையுடன் ஒன்றிணைக்க வைத்துள்ளது.

தபால்காரர்களின் தன்னலமற்ற சேவை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் விதத்தில் குறிப்பாக மலைப்பகுதிகளில் அவர்களின் தன்னலமற்ற சேவை பற்றி அனைவரும் அறிந்திடும் வகையில், முதல் தபால்காரர் பற்றிய புதிய விஷயங்கள் கையாளப்பட்டு, அஞ்சல் துறையின் அவசியம் மற்றும் மேன்மை குறித்து சொல்ல ஹர்கரா கதையில் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு இந்தியன், தேசத்திற்கு நடக்க இருந்த சதியை எப்படி தடுக்கிறான் அதனால் அனைத்து தபால்காரர்கள் எப்படி அந்தந்த கிராம மக்களுக்கு குலசாமியாக இருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ.

மொத்தத்தில் என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ், அரவிந்த் தர்மராஜ், தீனா தயாரித்துள்ள ஹர்கரா அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல் காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.