விக்ரம் விமர்சனம் : விக்ரம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் செம்ம மாஸ் | ரேட்டிங் – 4/5

0
85

விக்ரம் விமர்சனம் : விக்ரம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் செம்ம மாஸ்

ரேட்டிங் – 4/5

கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ள தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இதில் சூர்யா கெஸ்ட் ரோலில் ஜொலிக்கிறார். ஏற்கனவே வெளியான டிரைலர், போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் படத்தின் மீது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ட்ரைலரில் அனிருத் ரவிச்சந்திரனின் இசை ஹைலைட்டாக இருந்தது. இத்தனை யூகங்களுக்கு மத்தியில் விக்ரம் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு பிடித்திருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், மாஸ்க் மேன் என்ற கும்பல் தொடர் கொலைகளை செய்கிறது. இதில் பிரபஞ்சன் (காளிதாஸ் ஜெயராம்) கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கர்ணனும் (கமல்ஹாசன்) கொல்லப்படுகிறார். பொதுவெளிக்கு தெரியாமல், அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்பை ஏஜென்ட் அமர் (பகத் பாசில்) தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவரான ஜோஸ் (செம்பொன் வினோத்). மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளை செய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார்? யார் அந்த மாஸ்க் மனிதர்கள்? இந்த கதைக்குள் சூர்யா எப்படி நுழைந்தார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். முதல் பாதியில் கமல்ஹாசனுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் அவரின் இண்டர்வல் சீன் வெறித்தனமாக இருக்கிறது. குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை, பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் உலகநாயகன் நடிப்பு வேற லெவல். நடனம், மற்றும் க்ளைமாக்ஸில் கமல்ஹாசன் செய்த ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

பகத் பாசில் மாஸ் காட்டியிருக்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி தனக்கே உரித்தான பாணியில் நடித்திருக்கிறார். முதல் பாதியில் விஜய் சேதுபதி பயங்கர மாஸாக இருக்கிறார். அவருடைய கெட்அப், நடிப்பு  வித்தியாசமாக இருக்கிறது.

திரையில் சில தருணங்கள்தான் என்றாலும், தன் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் சூர்யா.

நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி சங்கர் (பகத் காதலியாக), செம்பொன், மாரிமுத்து, ரமேஷ் திலக் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்துள்ளனர்.

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகிய மூவரும் ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார்கள். அதற்கு முக்கிய காராணம் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் எடிட்டிங், ஆகியோரின் கூட்டுழைப்பு படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அனிருத் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

விக்ரமின் கதை போதை மருந்து மாஃபியாவைச் சுற்றி வருகிறது. நேர்த்தியான திரைக்கதை அமைத்து திரில்லர் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மொத்தத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் செம்ம மாஸ்.