ரேசர் திரைவிமர்சனம் : ரேசர் – பைக் ரேசராக வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு இளைஞர்களை கவரும் | ரேட்டிங்: 2.5/5

0
371

ரேசர் திரைவிமர்சனம் : ரேசர் – பைக் ரேசராக வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு இளைஞர்களை கவரும் | ரேட்டிங்: 2.5/5

ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கார்த்திக் ஜெயஸ் தயாரித்துள்ள ரேசர் படத்தில் அகில் சந்தோஷ், லாவண்யா, ஆறு பாலா, சுப்பிரமணியன் மாதவன், பார்வதி, சரத், நிர்மல், சதீஷ், அனீஸ், அரவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம் : சாட்ஸ் ரெக்ஸ்
தயாரிப்பு : கார்த்திக் ஜெயஸ்
இசை  : பரத்
சவுண்ட் டிசைனர் : கோகுல் தேவ்
ஒளிப்பதிவு : பிரபாகர்
எடிட்டிங் : அஜித் என்எம்
கலை :  கனி அமுதன்
ஸ்டண்ட் : சாட்ஸ் ரெக்ஸ், சீனு ரெக்ஸ்
மக்கள் தொடர்பு : வேல
ரேசர் என்பது தொழில்முறை பைக் ரேசராக வேண்டும் என்று கனவு காணும் அஸ்வின் (அகில் சந்தோஷ்) என்ற இளைஞனைப் பற்றியது. கதாநாயகன் அகிலுக்கு பைக் மீதுள்ள மோகத்தை காட்டுவதாக கதை தொடங்குகிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வின், சிறுவயதிலிருந்தே பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், மேலும் தனக்கு விருப்பமான ஒரு பைக்கை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கனவு எப்போதும் உண்டு. தொழில்முறை பைக் ரேசராக ஆசைப்படும் அஸ்வின், ஆனால் தந்தையிடமிருந்து நிராகரிப்பை எதிர்கொள்கிறார். அவர் மறுத்ததால், அஸ்வின் தனது லட்சியத்தில் பின்வாங்காமல், பந்தயத்தில் பங்கேற்க தனது தந்தைக்குத் தெரியாமல் ஒரு பைக்கை வாங்க கடுமையாக முயற்சிக்கிறார். அவருக்கு கார் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. கடன் பெற்று ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குகிறார். மேலும் பல தடைகளை எதிர்கொள்கிறார். தெருப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட தன் ஆர்வத்தை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து தனது ஆர்வத்தை தொடர முயல்கிறார். அவருக்கு தொழில்முறை பந்தயப் பயிற்சி இல்லாததால் முதல் முயற்சியிலேயே தோல்வியடைகிறார். கடன்கள் குவிந்து வருவதால், தெருவில் நடக்கும் சாதாரண மோட்டார் பந்தய போட்டியில் பங்கேற்று பரிசு பெறுகிறார். சில வீரர்கள் பொறாமையால் அகில் சந்தோஷுக்கு பகையாளிகளாக மாறுகிறார்கள்.  அடுத்து பெரிய போட்டியில் பங்கேற்க தேர்வாகிறார். சுதந்திர புரோ ஸ்ட்ரீட் சாம்பியன்ஷிப் பிற்காக பந்தயத்தில் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப்பை வெல்ல முடிவு செய்கிறார். அஸ்வின் தன் பெற்றோரை சமாதானப்படுத்தி தனது கனவுகளை அடைந்தாரா? அல்லது குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்தாரா? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
அகில் சந்தோஷ் (அஸ்வின் கதாபாத்திரத்தில்) எதிர்கொள்ளும் மோதல்கள், தனது லட்சிய கனவை மனதுக்குள்ளேயே புதைத்து அப்பாவின் அன்பு கலந்த கண்டிப்பு மௌனம் காக்கும் மகனாகவும், பைக் ரேசில் அவமானங்களை எதிர்கொள்வது என உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
ஸ்டார் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் லாவண்யாவுக்கு திரையில் காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அகிலின் பாசக்கார தந்தையாக சுப்ரமணியன் மாதவன், பைக் மெக்கானிக் வேடத்தில் ஆறு பாலா, இருவரும் அதற்கு நியாயம் செய்து மனதில் நிற்கிறார்கள்.
அகில் சந்தோஷின் அம்மாவாக வரும் பார்வதி, நண்பர்களாக வரும் சரத், நிர்மல், சதீஷ், பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லன் அரவிந்த் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
பிரபாகரின் ஒளிப்பதிவு, பரத்தின் இசை, அஜித் என்எம்மின் எடிட்டிங், கனி அமுதனின் கலை, சாட்ஸ் ரெக்ஸ் மற்றும் சீனு ரெக்ஸின் சண்டை பயிற்சி என தொழில்நுட்ப அம்சங்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் கதாநாயகனை மையப்படுத்திய கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
சிறுவயதிலிருந்தே ஒரு தொழில்முறை பைக் ரேசராக ஆசைப்படும் இளைஞனின் கனவு மற்றும் தந்தை மகன் உறவு மையப்படுத்தி திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விறுவிறுப்பு வாய்ந்ததாக இல்லை என்றாலும் நேர்த்தியான படத்தை வழங்கியுள்ளார் இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ்.
மொத்தத்தில் ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கார்த்திக் ஜெயஸ் தயாரித்துள்ள ரேசர் – பைக் ரேசராக வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு இளைஞர்களை கவரும்.