நூடுல்ஸ் விமர்சனம் : ‘நூடுல்ஸ்’ குடும்பத்துடன் காண வேண்டிய கலகலப்பான காமெடி கலந்த திரில்லர் சரவெடி | ரேட்டிங்: 3.5/5

0
223

நூடுல்ஸ் விமர்சனம் : ‘நூடுல்ஸ்’ குடும்பத்துடன் காண வேண்டிய கலகலப்பான காமெடி கலந்த திரில்லர் சரவெடி | ரேட்டிங்: 3.5/5

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன்.
 
 இப்படத்தை ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். 
 
நடிகர் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,ரவுடி பேபி புகழ் ஆஸியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா, மஹினா, சுபா, பிரகாஷ் மற்றும் இவர்களுடன் இயக்குனர்‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 இந்தப் படத்தின் ஒளிப்பதிவு வினோத் கவனிக்க, படத் தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார். பிஆர்ஒ-ஜான்.

அழகான மிடில் கிளாஸ் காதல் திருமணம் செய்த குடும்பம், அப்பா சரவணன் (ஹரீஷ் உத்தமன்), மனைவி சக்தி (ஷீலா ராஜ்குமார்) மற்றும் மகள் பிரியா (ஆழியா). சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருப்பில் சந்தோஷமான வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு மொட்டை மாடியில்; ஒன்று கூடி பாடல்களைப் பாடி மகிழ்ந்து அந்தாக்ஷரி விளையாடுகிறார்கள். அவர்களின் கூச்சலால் அருகில் வசிக்கும் ஒருவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தர, காவலர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதும் காவல் ஆய்வாளர் இளங்கோ (அருவி மதன்) கான்ஸ்டபிளுடன் அந்த இடத்திற்கு வந்து அவர்களை எச்சரித்து, கூட்டத்தை அகற்ற ஒரு கான்ஸ்டபிளை அனுப்புகிறார். ஆனால், கான்ஸ்டபிள் அதிகாரம் தொனியிலும், பெண்களை அவமரியாதை செய்யும் வகையில் பேச குடியிருப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க, ஆய்வாளர் இளங்கோ, சம்பவ இடத்திற்கு வந்து தனது அதிகார தொனியில் தரம் தாழ்த்தி பேச சரவணன் மற்றும் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட பெரிய சண்டையாக மாறி விடுகிறது. கோபத்தில் ஆய்வாளர் இளங்கோ அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். 3 நிமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சரவணன் (ஹரீஷ் உத்தமன்), மனைவி சக்தி (ஷீலா ராஜ்குமார்) மற்றும் மகள் பிரியா (ஆழியா) அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே நூடுல்ஸ்.
 
கதையின் நாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ், ஒரு நடுத்தர குடும்ப தலைவர் தன் குடும்பத்தை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி அதே நேரத்தில், பதற்றமான சூழ்நிழலையை சந்திக்கும் போது அவருடைய பதற்றமான மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய காதல் மனைவி சக்தியாக ஷீலா ராஜ்குமார் தனது அசத்தலான நடிப்பு வழங்கி கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

எப்போதும் வில்லத்தனமான பல கேரக்டர்களில் நடித்துள்ள அருவி மதன் இந்தப் படத்தில் ஆய்வாளர் இளங்கோ என்ற பாத்திரத்தை கச்சிதமாக ஏற்று முற்றிலும் மாற்றப்பட்ட நடிப்பால் தன்னிடம் இருக்கும் திறமையை அழுத்தமாக காட்டுகிறார்.

ஹரியின் குடியிருப்பு வாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர், குழந்தை நட்சத்திரம் ஆழியா மற்றும் அனைத்து சிறுவர்கள் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளனர். குறிப்பாக வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, திரையரங்கமே அதிரும் வகையில் தனது சிறப்பான மற்றும் கலகலப்பான நடிப்பு படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறார்.

படத்தொகுப்பு சரத்குமார், இசை ராபர்ட் சற்குணம், கலை இயக்குனர் கென்னடி ராபர்ட், மற்றும் வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
“சாதாரண நடுத்தர மக்கள் காவல்துறையை எதிர் கொண்டால் என்ன நடக்கும்.. காவல்துறை எப்படி அவர்களை பழிவாங்குகிறது.. என்பதை கதையின் கருவாக கொண்டு, சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் இருக்கும் ஒரு அழகான மிடில் கிளாஸ் குடும்பத்தில் போலீஸ் உடன் 3 நிமிடத்தில் நடக்கும் சம்பவத்தால் இந்த குடும்பத்திற்கு என்ன என்ன பிரச்சனை ஏற்படுகிறது, அவர்களை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பரபரப்பாகவும் வைத்து, விறுவிறுப்பாகவும் மற்றும் கலகலப்பாக கதையை ஒரு வீட்டுக்குள் அதில் சிறு அறைகளுக்குள் காட்சி படுத்தி எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்ச்சிப்பூர்வமான உற்சாகத்தை அளிக்கும் ஒரு சுவாரஸ்யமாக இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு வசீகரமான கதையை படைத்துள்ளார் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘அருவி’ மதன்.

மொத்தத்தில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் ‘நூடுல்ஸ்’ குடும்பத்துடன் காண வேண்டிய கலகலப்பான காமெடி கலந்த திரில்லர் சரவெடி.