நிலைமறந்தவன் விமர்சனம்: ஒரு சமூக aஅவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு மக்களுக்கு பாடமாக அமைந்துள்ளது நிலை மறந்தவன் |மதிப்பீடு: 3/5

0
372

நிலைமறந்தவன் விமர்சனம்: 

ஒரு சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு மக்களுக்கு பாடமாக அமைந்துள்ளது நிலை மறந்தவன் |மதிப்பீடு: 3/5

மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற பெயரில் 2020-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம். 2 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் சார்பில் தமிழில் டப் செய்து வெளியாகி இருக்கும் படம் நிலை மறந்தவன். அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க திமிரு படத்தில் நடித்த விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-
இசை – ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்
ஒளிப்பதிவு – அமல் நீரத்
படத்தொகுப்பு – பிரவீன் பிரபாகர்
வசனம் – சிவமணி
தயாரிப்பு – தர்மா வி{வல் கிரியேஷன்ஸ்
இயக்கம் – அன்வர் ரஷீத்
மக்கள் தொடர்பு – KSK செல்வா

கன்னியாகுமரியில் வறுமையில் இருக்கும் ஹீரோ விஜி பிரசாத் (பஹத் பாசில்) தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்காமல் தடுமாறுகிறான். சிறுவயதிலேயே அவனது தாய் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான தம்பியும் பருவ வயதில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறான். தன்னம்பிக்கை தரும் பேச்சாளராக இருக்கும் வாழ்க்கை வண்டியை ஓட்டும் விஜி பிரசாத் (பஹத் பாசில்), தன் தம்பியின் மரணத்திற்கு பிறகு கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறான். எனவே, பழைய நினைவுகளை மறக்க மும்பைக்குச் செல்கிறான். இங்குதான் மதம் மாற்றும் மாஃபியா கும்பலிடம் சிக்குகிறான். ஒருவர் கௌதம் மேனன் மற்றும் செம்பான் வினோத். இவர்கள் இருவரும் ஹீரோவின் ப்ளாஷ் பேக்கை பற்றி தெரிந்து கொண்டு, அவனை இன்டர்வியூவுக்கு அழைக்கிறார்கள். விஜி பிரசாத்தும் போகிறான். அங்குதான் அவனுக்கு மக்களை மதம் மாற்றி பணம் சம்பாதிக்கும் பிளான் சொல்லப்படுகிறது. பயந்துபோன ஹீரோ, தயங்க, அவனை இருவரும் மறைமுகமாக மிரட்டி பஹத் பாசிலை மேடை பிரசங்கம் செய்யும் ஒரு பாதிரியாராக மாற்றுகின்றனர். இவருக்கு பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர் திலீஷ் போத்தன். மதத்தின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதிப்பது தான் கௌதம் மேனனின் திட்டம். ஆறு மாத பயிற்சி முடிந்ததும் ஜீவ பிரசாத் என்கிற ஹிந்து ஏழை, ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் என பெயர் மாற்றம் பெறுகிறான். பின்பு மேடை பிரசங்கங்களில் வெளுத்து வாங்குகிறார் பஹத் பாசில். இயேசுவின் அருளால் அற்புதம் நிகழ்கிறது என மேடையிலேயே பலர் முன்னிலையில் சிலரின் நோய்களை குணமாக்கும் நாடகம் கட்சிதமாக நடந்தேறுகிறது. ஒரு கட்டத்தில் பஹத் பாசிலின் புகழ் அதிகமாக, கௌதம் மேனனின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட நினைக்கும் பஹத் பாசில் தனது பப்ளிசிட்டிக்காக டிவி பேட்டி ஒன்றில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி திடீரென லைவ் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் ஏதாவது ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் பஹத் பாசில். ஆனால் சமயோசிதமாக அந்த சவாலை பஹத் பாசில் எதிர்கொண்டாலும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் கௌதம் மேனனின் கோபத்திற்கு ஆளாகி அவரால் தாக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறார். அதன்பிறகு வரும் நாட்களில் பஹத் பாசிலை ஒதுக்கி விட்டு அந்த இடத்தில் இன்னொரு நபரை ஒரு பாதிரியாராக உருவாக்கும் வேலையை ஆரம்பிக்கின்றனர் கௌதம் மேனனும் செம்பான் வினோத்தும். இதையடுத்து தான் போட்டிருந்த பாதிரியார் வேஷத்திலிருந்து பஹத் பாஸில் ஒதுங்கிக்கொண்டாரா..? அல்லது கௌதம் மேனன் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தாரா.? இல்லை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

தன்னம்பிக்கை தரும் பேச்சாளராகவும், பின் ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் கதாபாத்திரத்தலும், கெத்தான லுக் மற்றும் பாடிலேங்வேஜில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் நடிப்பு ராட்சசன் பஹத் பாசில்.

வில்லனாக நம்ம கௌதம் மேனன் வழக்கம்போல இங்லீஸ்லதான் வசனம் பேசி இயல்பாய் நடித்துள்ளார். மற்றும் விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் போத்தன் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இசை, ஒலி வடிவமைப்பு மற்றும் கேமரா வேலை திரைக்கதையின் வெற்றிக்கு பலம் சேர்க்கிறது.

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் விலைக்கு வாங்கி மதப்பிரச்சாரம் என்கிற பெயரில் உண்மையிலேயே நடக்க முடிந்த ஒருவரை வீல் சேரில் அழைத்து வந்து, அவரை ஊனமுற்றவர் போல சித்தரித்து, பிறகு அவர் ஜெபத்தின் மூலம் நடப்பதுபோல எப்படி எல்லாம் செட்டப் செய்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். கையை வயிற்றில் வைத்து ஜெபித்தால் கர்ப்பம் தரிக்கும். ஊமையை பேச வைப்பது, குருடரை பார்க்கவைப்பது அவர்களுக்கு நல்லது செய்வதுபோல நடித்து விட்டு, பின்னர் அவர்களிடமிருந்தே பணம் வசூலித்து தாங்கள் எப்படி கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்தி  இருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.

மொத்தத்தில் தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள நிலை மறந்தவன் ஒரு சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு மக்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.