இரவின் நிழல் திரை விமர்சனம் : டெக்னிக்கல் விஷயங்கள் மற்றும் இரவின் நிழல் படம் எடுக்கப்பட்ட விதத்திற்காக சென்று பார்க்கலாம் |மதிப்பீடு: 3.5/5

0
478

இரவின் நிழல் திரை விமர்சனம் : டெக்னிக்கல் விஷயங்கள் மற்றும் இரவின் நிழல் படம் எடுக்கப்பட்ட விதத்திற்காக சென்று பார்க்கலாம் |மதிப்பீடு: 3.5/5

பார்த்திபனின் புதிய முயற்சியில் முழுப்படத்தையும் சிங்கிள் டேக்கில் எடுத்துள்ள இரவின் நிழல் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.  இப்படம் லீனியர் திரைக்கதை முறையில் முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது.
நடிகர்கள்: பார்த்திபன், ஜோசுவா பரிசுத்தம், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்தகிருஷ்ணன், சாய் பிரியங்கா ரூத். ஆர்தர்.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் – அகிரா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இயக்கம்: பார்த்திபன். மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

உலகின் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள நான் லீனியர் சிங்கிள் ஷாட் ஃபிலிம் இரவின் நிழல். ‘மெயின்” படம் தொடங்குவதற்கு முன்பு இப்படம் ஆரம்பித்த முதல் அரை மணி நேரம் இப்படத்தை எப்படி  உருவாக்கினார்கள் என்பதற்கான மேக்கிங் வீடியோ போடப்படுகிறது. படத்தை உருவாக்க பட்ட கஷ்டம் மற்றும் படம் எப்படி உருவானது என அனைத்தையும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். பிறகு இடைவேளை அடுத்து 100 நிமிடம் ஓடக்கூடிய சிங்கிள் ஷாட் திரைப்படம் என புதிய திரை அனுபவத்தை கொடுத்துள்ளார்.

1971-ல் கதை தொடங்குகிறது கணவனால் கொலையுண்டு நிர்வாணமாக ரத்தச் சகதியாகக் கிடக்கும் தன்னுடைய தாயின் மார்பில் பால் குடித்தவன் நந்து (பார்த்திபன்). சிறுவனான பின், ஒரு போலீஸ்காரரால் வன்புணர்வு செய்யப்பட்டவன். கஞ்சா தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறான். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணக்காரனாகி சினிமா ஃபைனான்சியராகிறான். ஐம்பது வயது நந்துவிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைதுசெய்ய போலீஸ் துரத்துகிறது.தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள் அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது கைபேசியில் ‘ஆடியோ”வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார். ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருந்தால் ஒழுக்கமான வாழ்க்கை அமையும். இல்லையென்றால், ‘நந்து”வுக்கு நிகழும் வேதனைகள் மிகுந்த சோதனையான வாழ்க்கையே அமையும் என்பதே கதையின் கரு.

ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்க, அவன் கண்முன் அவன் மொத்த வாழ்க்கையும் ரீவைண்டாக அதுவும் முன்னுக்குப் பின் மாறி மாறி நான் லீனியரில் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்து ஆறு மாதக் குழந்தையாக நமக்கு அறிமுகமாகும் நந்துவின் 10 வயது, 18 வயது, 30 வயது, 50வயது பருவங்களின் ரோலர் கோஸ்டர் வாழ்க்கையில், முதல் நொடியில் தொடங்கி, கதை முடியும் கடைசி நொடி வரை வியப்பூட்டக்கூடிய திரைக்கதையை வடிவமைத்து, கரடுமுரடான (நந்து) கதாபாத்திரத்தில் பன்முகம் காட்டி பாடல்களையும்  அதற்கு நடனம் என அதே சிங்கிள் டேக்கில் காட்சிபடுத்தி இயக்கியிருக்கிறார் பார்த்திபன்.

வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரிகிடா சகா, புதுமுகங்கள் சினேகா குமார், சாய் பிரியங்கா ரூத், 18 வயது நந்துவாக சந்துரு, 30 வயது நந்துவாக ஆனந்த கிருஷ்ணன் என நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு திரைக்கதை, வசனம், பாடல், எடிட்டிங் என அனைத்தையும் பார்த்திபன் பார்த்து பார்த்து செதுக்கி அற்புத படைப்பாக கொடுத்து இருக்கிறார்.

முழுப்படத்தையும் சிங்கிள் டேக்கில் அவர் கேமிராவுடன் செல்ல வேண்டும், ஏதேனும் சிறு பிழை ஏற்ப்பட்டால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 64 ஏக்கர் நிலப்பரப்பில் 50 செட் அமைத்து பல முறை ஒத்திகை பார்த்த போது எதாவது ஒரு ஷாட்டில் டேக் ஓகே ஆகாமல் போக அனைவருக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வும் வேதனையும் ஏற்பட்ட நிலையில், வந்தது அந்த தருணம் 90-வது நாளில் அந்த 96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில் உருவாக்கி தனது முத்திரையை பதிவு செய்து இருக்கிறார் பார்த்திபன். ‘மேக்கிங்’ படத்தில் அவருடைய கடும் உழைப்பும், 365 தொழில் நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஏ.ஆர்.ரகுமான் கதையுடன் ஒன்றி ஒவ்வொரு ப்ரேமை ரசித்து இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் நாயகனின்  பின்னணி இசை கூடுதல் பலத்தையும், பெருமையும் இரவின் நிழல் படத்திற்க்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் காட்சிக்கு காட்சி மாறுதல்களுடன் கச்சிதமாக செய்த இப்படத்தின் கலை இயக்குனர் விஜய் முருகனின் செட் வொர்க் பெரிய பலமாக அமைந்துள்ளது.

படத்தில் இடம்பெற்ற சில வல்காரிட்டி நிறைந்த காட்சிகள், பச்சை பச்சையாக பேசும் வசனங்கள் ஆகியவை கதை நடக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்றால்போல் அமைந்தாலும் ஒருசில இடங்களில் நெருடல்கள் ஏற்படுவதால் குழந்தைகளும், குடும்பத்தினர்களும் ஒன்றுசேர்ந்து பார்க்க முடியாத சூழலை இந்த காட்சிகள் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வளவு பெரிய முயற்சிக்கு இந்த கதை தேவையற்றது, இருப்பினும் பார்த்திபனின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பெரிய பாராட்டுக்கள். இந்த காட்சிகள் OTT தளத்திற்காக திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.

மொத்தத்தில் டெக்னிக்கல் விஷயங்கள் மற்றும் இரவின் நிழல் படம் எடுக்கப்பட்ட விதத்திற்காக சென்று பார்க்கலாம்.