தக்ஸ் விமர்சனம் : தக்ஸ் ஒரு டைம் பாஸ் ஆக்ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
377

தக்ஸ் விமர்சனம் : தக்ஸ் ஒரு டைம் பாஸ் ஆக்ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

HR Pictures சார்பில் ரியா ஷிபு,  Jio Studios   உடன் இணைந்து வழங்கும், தக்ஸ். நடன இயக்குனர் பிருந்தா இயக்கி, நாயகனாக ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், அப்பனி சரத், முனிஷ்காந்த், அனஸ்வரா ராஜன், பி.எல்.தேனப்பன், அருண் மற்றும் அரவிந்த் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு: ரியா ஷிபு, மும்தாஸ் எம்
பேனர் : ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து HR பிக்சர்ஸ்
இயக்கம்: பிருந்தா
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி
இசை : சாம். சி. எஸ்
எடிட்டிங் : பிரவீன் ஆண்டனி
நடன இயக்குனர் – பிருந்தா
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜோசப் நெல்லிக்கல்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார், சிவா (AIM)

சேது (ஹிருது ஹாரூன்) ஒரு பட்டதாரி அனாதை. தன் தந்தை வேலை பார்த்த பிரபல ரவுடி அண்ணாச்சியிடம் (தேனப்பன்) வேலை செய்கிறான். அனாதை இல்லத்தில் தங்கியிருக்கும் ஊமைப் பெண்ணான அனஸ்வர ராஜனை முதல் பார்வையிலேயே காதலிக்கிறான். அவளை திருமணம் செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ நினைக்கும் போது பணத்தை திருடியதாக சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. அந்த சமயத்தில், சரியானதொரு தருணத்திற்காக காத்திருக்கும் சிறைவாசிகள் சிலர் காவல்துறையை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயலும் போது, குறுக்கே சேது நுழைந்து அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறான். சிறையில் துரை (பாபி சிம்ஹா) மருது (முனிஷ் காந்த்) மற்றும் பல்வேறு நபர்களும் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்படுகிறார்கள். ஒருபுறம் ஜெயிலர் ஆரோக்கிய தாஸ்ஸின் (ஆர்.கே.சுரேஷ்) நன்மதிப்பும், மறுபுறம் சிறைவாசிகளின் கோபமும் பரிசாக கிடைக்க, சிறைவாசத்தில் நாட்கள் கழிகின்றன. இதனிடையே  சிறை ஊழியர்கள் சேதுவை கொல்ல நினைக்கிறார்கள்? சிறையிலுள்ள தனது அறை நண்பர் துரை (பாபி சிம்ஹா)வின் பிரச்சினையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், தன் மீது காவல் துறையினரின் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்தை பயன்படுத்திக்கொண்டு, மருது (முனிஷ்காந்த்) மற்றும் பலர் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டுகிறான் சேது. சிறை அறையில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பித்தார்களா? சிறை ஊழியர்கள் சேதுவை ஏன் கொல்ல நினைக்கிறார்கள்? இறுதியில் அவர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

ஒரு செல்வாக்கு மிக்க நபரால் சிறைக்கு அனுப்ப பட்ட தவறான நபராக ஹிருது ஹாரூன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடல் மொழி மற்றும் நடனம், ஆக்ஷன் காட்சிகளில் முதல் பட கதாநாயகன் போல் இல்லாமல் தேர்ச்சி பெற்ற நடிகரை போல் சிறப்பாக நடித்துள்ளார். தன் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் காதலனாக நேர்த்தியான நடிப்பு கொடுத்தியிருக்கிறார். அவரது கதாபாத்திரமும் யதார்த்தமான நடிப்பு படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
பாபி சிம்ஹா முதன்மை கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து திரையில் காட்சிகளை உயர்த்தியுள்ளார். ஒரு மூத்த கைதியாக, அதிக வசனங்கள் இல்லாவிட்டாலும் அவரது கண்களில் உள்ள தீவிரத்தால் பாபியின் பாத்திரம் படத்திற்கு பெரிய ப்ளஸ்.
ஜெயிலராக ஆர்.கே.சுரேஷ் வழக்கமான தனது முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் பலவீனமாக தெரிகிறது. கதாபாத்திரத்திற்கான கம்பீரம் மிஸ்ஸிங்!
நாயகி அனஸ்வர ராஜன் அழகாக இருக்கிறார், ஊமை கேரக்டரில் நடித்ததால், வசனம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
முனிஷ்காந்த் காமெடி டைமிங் படத்திற்கு பெரிய ரிலீஃப். மற்ற நடிகர்கள் சரத் அப்பானி, அனஸ்வர ராஜன், அருண் மற்றும் அரவிந்த் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆக்ஷன் காட்சிகள் அவற்றின் நடன அமைப்பு மிகவும் யதார்த்தமாக உள்ளன. ஒளிப்பதிவு இயக்குனர் பிரியேஷ் குருசாமியின் கேமரா கோணங்கள், இயல்பாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது. ஜெயில் காட்சிகளை தத்ரூபமாகவும், இரவு காட்சிகள் வசீகரிக்கும் விதமாகவும் காட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம். சி. எஸ்ஸின் பின்னணி இசையும் காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக்கிறது.  பிரவீன் ஆண்டனி எடிட்டிங் கச்சிதம்.
மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’  (Swathanthryam Ardharathriyil)  படத்தின் தழுவலாக படம் இருந்தாலும் சில மாற்றங்களை செய்து சுவாரஸ்யமாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிருந்தா. பிருந்தா மெதுவாக கதையை ஆரம்பித்து, பார்வையாளர்கள் குழப்பமடையாத வகையில் விவரித்துள்ளார்.இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் தப்பிக்கும் திட்டம் சுவாரஸ்யமான முறையில் காட்டியுள்ளார். திரைக்கதை சில கதாபாத்திரங்களை மெருகேற்றி  இருக்கலாம்.
மொத்தத்தில், HR Pictures சார்பில் ரியா ஷிபு,  Jio Studios   உடன் இணைந்து வழங்கும்,  தக்ஸ் ஒரு டைம் பாஸ் ஆக்ஷன் த்ரில்லர்.