கூகுள் குட்டப்பா விமர்சனம்: கூகுள் குட்டப்பா செய்யும் சேட்டைகள் குழந்தைகளை கவரும் | ரேட்டிங் – 2.5/5

0
199

கூகுள் குட்டப்பா விமர்சனம்: கூகுள் குட்டப்பா செய்யும் சேட்டைகள் குழந்தைகளை கவரும் | ரேட்டிங் – 2.5/5

ஆர்.கே.செல்லூலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா படத்தை சபரி மற்றும் சரவணன் இருவர் இயக்கியுள்ளனர்.
இதில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, மாரிமுத்து, சி.ரங்கநாதன், பிராங்ஸ்டர் ராகுல், பூவையார், சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-அர்வி, படத்தொகுப்பு-பிரவின்ஆண்டனி, கலை இயக்குனர்-சிவக்குமார், தலைமை தயாரிப்பு மேற்பார்வை-பி.செந்தில்குமார், ஒலி வடிவமைப்பு-கிருஷ்ணன் சுப்ரமணியன், பாடல்கள்-விவேகா, மதன்கார்க்கி, அறிவு, பாடகர்கள்:-ஜி.வி.பிரகாஷ்குமார், அறிவு, ஷிவாங்கி கிருஷ்ணகுமார், கோல்டு தேவராஜ், அரவிந்த் சீனிவாஸ், தீப்தி சுரேஷ், நடனம்- சேண்டி, விஜி, சண்டை-ரமேஷ், ஆடை வடிவமைப்பு -கவிதா, மூர்த்தி, மேக்கப்-கோதண்டபாணி, ரோபோ வடிவமைப்பு-பர்ஷன் பாசு, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ரோபோடிக் என்ஜினியரிங் படிப்பு முடித்த தர்ஷன் தன் தந்தை கே.எஸ்.ரவிக்குமாரின் பிடிவாதத்தால் வெளிநாடு சென்று வேலை செய்ய முடியாமல் தவிக்கிறார். வீட்டில் வேலை செய்யவும், சமைக்கவும் ஆட்களை அமர்த்தினால் ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி விடும் தந்தையை தனிமையில் விட்டு விட்டு செல்லவும் தர்ஷனால் முடியவில்லை. இறுதியாக தனது தந்தையை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து ஜெர்மனி செல்லும் தர்ஷன், அங்கே நான்கு மாத சோதனை அடிப்படையில் ரோபோ ஒன்றை தன் கம்பெனி சார்பாக தந்தைக்கு உதவியாக எடுத்து வந்து கொடுத்து விட்டு செல்கிறார். முதலில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பின்னர் படிப்படியாக ரோபோவுடன் பேசுவது, சமைப்பது, வெளியே செல்வது என்று அன்றாடம் பழகி தன் மகனைப்போல் பார்த்துக் கொள்கிறார். இதனிடையே பரிசோதனை முயற்சியில் நான்கு ரோபோக்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்க, அந்த ரோபோக்கள் இயக்கத்தில் மாறுதல் எற்பட்டால் மனிதர்களை கொல்லும் என்பதை கண்டறியும் அந்த ரோபோ கம்பெனி, தர்ஷனிடம் இந்தியாவில் இருக்கும் கூபுள் குட்டப்பா ரோபோவை திரும்ப கொண்டு வரும்படி அனுப்புகின்றனர். இந்தியா வரும் தர்ஷன், ரோபோவை எடுத்துச் செல்லப் போவதை தெரிவிக்கிறார். இதனால் கோபமடையும் கே.எஸ்.ரவிக்குமார் அந்த ரோபோவை தர மறுப்பதுடன், அதனுடன் காணாமலும் போய் விடுகிறார்.தர்ஷன் தன் தந்தையை கண்டுபிடித்தாரா? ரோபோவிடமிருந்து தந்தையை காப்பாற்றினாரா? தந்தை ரோபோவினால் ஏற்படும் ஆபத்தை புரிந்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

சுப்ரமணியாக கே.எஸ்.ரவிக்குமார் மனைவியை இழந்து தனிமையில் தன் மகனுக்காக வாழ்க்கையை வாழ நினைக்கும் தந்தையாக, கூகுள் குட்டப்பா ரோபோவிடம் தன் பாசத்தை கொட்டி மகனாக பாவிக்கும் இடங்களிலும் முதிர்ச்சியான நடிப்பையும், நெகிழச்சியான தருணங்களையும் கண் முன்னே நிறுத்துகிறார். முதுமையில் துளிர் விடும் பழைய காதல், அதற்காக எடுக்கும் முயற்சிகள் என்று படத்தில் கண்ணியமாக கையாண்டு ஸ்கோர் செய்கிறார். ரோபோவுடன் கே.எஸ்.ரவிக்குமார் வரும் காட்சிகள் குழந்தைகளை ரசிக்க வைக்கும்.

பாபுவாக யோகிபாபு என்ன முயற்சி செய்தாலும் சிரிப்பு வரவில்லை, இறைச்சல் தான் கேட்கிறது.

ஆதியாக தர்ஷனும், காதலி தாரவியாக லாஸ்லியாவும் தங்கள் பங்களை முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளனர்.

மற்றும் பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, மாரிமுத்து, சி.ரங்கநாதன், பிராங்ஸ்டர் ராகுல், பூவையார், சுஷ்மிதா ஆகியோர் வந்து போகிறார்கள்.

விவேகா, மதன்கார்க்கி, அறிவு ஆகியோரின் வரிகளில் ஜிப்ரான் இசையும், பின்னணி இசையும் கவனிக்க வைத்துள்ளது.

அர்வியின் ஒளிப்பதிவு கோவை, வெளிநாட்டு காட்சிகள், கிராமத்து வீடு, ரோபோவின் செயல் திறனை சிறப்பாக காட்சிக்கோணங்கள் மூலம் ரசிக்க வைத்துள்ளார்.

படத்தொகுப்பு-பிரவின்ஆண்டனி, கலை இயக்குனர்-சிவக்குமார் இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

கே.எஸ்.உதயகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணனை இயக்குனர்களாக அழகு பார்க்க தன் சொந்த தயாரிப்பில் இயக்க வைத்துள்ளார்.2019ல் வெளியான மலையாள படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தின் மறுஉருவாக்கம் தான்; கூகுள் குட்டப்பா. அறிவியல் சார்ந்த நகைச்சவை கலந்த படத்தில் இயந்திர மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியை முடிந்த வரைதான் பயன்படுத்தக்கொள்ளலாம், அதனுடன் உணர்ச்சிகரமான பிணைப்பை ஏற்படுத்த முடியாது என்பதை கூறியுள்ளனர். அன்றாட வாழ்க்கையில் வீட்டில் உபயோகிக்கும் சாதனங்களையும், சொந்தங்களையும் வெறுக்கும் வயதான மனிதரின் வாழ்க்கையில் அனைத்து வேலைகளை செய்யும் நவீன ரோபோ எவ்வாறு அவரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது என்பதைத் சொல்லும் கதைக்களத்ததை இயன்றவரை சிறப்பாக கொடுக்க முயற்சி செய்துள்ளனர் இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன்.

மொத்தத்தில் ஆர்.கே.செல்லூலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா செய்யும் சேட்டைகள் குழந்தைகளை கவரும்.