கருமேகங்கள் கலைகின்றன திரைப்பட விமர்சனம் : கருமேகங்கள் கலைகின்றன ஒவ்வொருவரின் உணர்வுகளை தூண்டும் ஒரு கண்ணியமான படம். பல்வேறு விருதுகளை வெல்லும் | ரேட்டிங்: 3/5

0
541

கருமேகங்கள் கலைகின்றன திரைப்பட விமர்சனம் : கருமேகங்கள் கலைகின்றன ஒவ்வொருவரின் உணர்வுகளை தூண்டும் ஒரு கண்ணியமான படம். பல்வேறு விருதுகளை வெல்லும் | ரேட்டிங்: 3/5

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகானா, எஸ்.ஏ.சந்திரசேகர், டெல்லி கணேஷ், விபின், ஆர்.வி.உதயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு ஏகாம்பரம், படத்தொகுப்பு பி.லெனின், நடனம் ராதிகா, தயாரிப்பு வடிவமைப்பு டி.முத்துராஜ். தயாரிப்பு வீரசக்தி துரைக்கண்ணு. தயாரிப்பு நிறுவனம் ரியோட்டா மீடியா. மக்கள் தொடர்பு ஜான்சன்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் (பாரதிராஜா), மற்றும் மகன் கோமகன் (கௌதம் வாசுதேவ் மேனன்), இருவரும் வழக்கறிஞர்கள், நீதி, ஒழுக்கம் மற்றும் பணம் பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்கள் கொண்டுள்ளனர், மேலும் அவர்களது உறவு ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் வீட்டில் மனஉலைச்சலில் இருக்கும் ராமநாதன் திடீரென காணாமல் போகிறார். தந்தை பல வருடங்களாக தொடர்பில் இல்லாத தனது மகளை வீட்டிற்கு வெளியே தேடுகிறார், மகன் தொலைந்து போன தனது தந்தையை தேடுகிறான். இதற்கிடையில் பரோட்டா மாஸ்டர் வீரமணி (யோகி பாபு), ஒரு வளர்ப்பு தந்தை. தனது மகளைப் பிரிந்து, அவளுடன் மீண்டும் இணைய முயற்சிக்கிறார். ஒரு பேருந்துப் பயணத்தில் ராமநாதனும், வீரமணியும் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு திசைகளில், 
வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இரண்டு கதாபாத்திரங்களுடன் கதை நம்மை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கிறது. அவர்கள் இருவரும் தாங்கள் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, சந்தோஷத்தை தேடி செல்லும் பயணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். யதார்த்தமான வாழ்க்கையை கூறும் கதைக்களம் என்பதால், காட்சிகள் மிகவும் உண்மையானதாக இருக்க வேண்டும் ஒரு காட்சியில் தன் மகளின் காலடியில் விழும் காட்சியில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கி தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். அந்த காட்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்த நியாயத்தை வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பது மட்டுமல்ல, உணர்ச்சிகரமான தருணங்களில் பல விதமான முகபாவனைகளை வெளிப்படுத்தி தான் ஒரு மிகச் சிறந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நிச்சயம் தேசிய விருது மற்றும் பல்வேறு விருதுகள் காத்திருக்கின்றது.

இன்றைய சினிமாவில் நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யோகி பாபு, இந்தப்படத்தில் நகைச்சுவை இல்லாத வீரமணி கதாபாத்திரத்தில் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் மகனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கண்கள் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்,  கண்களால் பேசி அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதிதி பாலன் தந்தையின் மீது காட்டும் வெறுப்பை சிறப்பான நடிப்பின்  மூலம் வெளிப்படுத்தி கதை களத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர், டெல்லி கணேஷ், ஆர்.வி.உதயகுமார், மகானா, விபின், குழந்தை நட்சத்திரமாக சாரல் மற்றும் அனைத்து நடிகர்களும் கண்ணியமான நடிப்பை வழங்கி உள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் மனம் வருடும் பாடல் வரிகளும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசை மற்றும் பின்ணனி இசை ஒரு வாழ்வியல் கதைகளத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர்.

அனைத்து குடும்ப உறவுகளையும் அழகியலாய் காட்சிப்படுத்தி கதையோடு ஒன்றிப்போக வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம்.

காட்சிகள் மிகவும் உண்மையானதாகவும், உணர்ச்சிகள் அழுத்தமானதாக இருப்பதற்கு பி.லெனின் அவர்களின் படத்தொகுப்பு தான் காரணம்.

யதார்த்தமான வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில், வாழ்க்கையின் வளர்ச்சி, வீழ்ச்சி, தேடல், அன்பு பரிமாறுதல், விட்டுக் கொடுத்தல் என்று அனைத்தையும் திரைக்கதையில் வடிவமைத்து குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.
மொத்தத்தில் ரியோட்டா மீடியா சார்பில் வீரசக்தி துரைக்கண்ணு தயாரித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன ஒவ்வொருவரின் உணர்வுகளை தூண்டும் ஒரு கண்ணியமான படம். பல்வேறு விருதுகளை வெல்லும்.