விநோதய சித்தம் விமர்சனம்

0
30

விநோதய சித்தம் விமர்சனம்

ஒரு நிறுவனத்தில் தம்பி ராமையா உயர் அதிகாரியாக இருந்தாலும் ஜெனரல் மேனேஜர் பதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சகல வசதிகளுடன் ஆர்ப்பாட்டமாக வாழும் இவர் வெளியூரிலிருந்து சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்;டு இறக்க நேரிடுகிறது. தம்பி ராமையாவிற்கு உயிர் வாழ வேண்டும், குடும்பத்தை வழி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலம் என்ற நேரத்தை குறிக்கும் சமுத்திரகனியிடம் மன்றாடி 90 நாட்களுக்கு உயிர் வாழ காலக்கெடு கேட்கிறார். இதை ஏற்கும் சமுத்திரகனி தம்பி ராமைய்யாவை பின் தொடர்ந்து சென்று என்ன உதவி செய்கிறார்? தம்பி ராமையாவின் ஆசைகளை நிறைவேற்றினாரா? நிலை தடுமாறச் செய்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

தம்பி ராமைய்யா முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடை, உடை, பாவனை மற்றும் அதிரடியான நீண்ட வசனங்களோடு களமிறங்கி இறுதியில் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதன் இயல்போடு பயணிக்க கற்றுக் கொள்ளும் திறனை அடைந்து மனநிம்மதி பெற்று விடை பெறும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

சமுத்திரகனி அளவான பேச்சு, மிகையில்லா நடிப்பு, ஒற்றை வரியில் புரிய வைக்கும் திறன் என்று அடக்கி வாசித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அசத்தி விடுவதோடு, சிந்திக்கவும் வைத்து விடுவது கூடுதல் பலம்.

சிவரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், தீபக், இயக்குனர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கிய மையப்புள்ளியாக திகழ்கின்றனர்.
என்றுமே காட்சிக்கோண்ங்களை திறம்பட கையாண்டு திக்குமுக்காட வைப்பதில் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்திற்கு பெரும் பங்கு உண்டு.

பாடல்களே இல்லாத படத்தில் பின்னணி இசையில் வித்தியாசமான ஒலிக்கலவையில் அதிர வைத்திருக்கும் சி.சத்யாவிற்கு பாராட்டுக்கள்.

ரமேஷ் படத்தொகுப்பு,  ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி வசனம் என்று படத்தின் வெற்றிக்கு பங்களிப்பை வாரி வழங்கியுள்ளனர்.

நாடகத்தின் மையக்கருவை வைத்து திரைப்படமாக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.  திரைக்கதையை தெளிவான நீரோடைபோல் கொடுத்து, எந்த ஒரு தடை ஏற்பட்டாலும் சுற்றும் பூமி சுற்றிக் கொண்டே தான் இருக்கும், மற்றவரின் திறமையை தட்டி பறிப்பவருக்கும், ஏமாற்றுபவர்களுக்கும் தக்க தண்டனை பிற்பகுதியில் நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்தி வாழ்க்கையை புரிந்து, இருக்கும் வரை கவலையில்லாமல் வாழ வேண்டும் நடப்பது நடந்தே தான் தீரும் யாராலும் மாற்ற முடியாது என்று ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி. ஹாட்ஸ் ஆஃப்.

மொத்தத்தில் அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் மற்றும் நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில்  ஜீ 5 ஒரிஜினல் படமான விநோதய சித்தம் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டு பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெறும்.