‘பொன்னியின் செல்வன்’ அனுபவங்கள் : நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர்!

0
210

‘பொன்னியின் செல்வன்’ அனுபவங்கள் : நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர்!

தமிழ் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பரிச்சயமான முகம் ஓ.ஏ.கே.சுந்தர்.சுமார் நூறு படங்களில் பெரும்பாலும் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரங்களிலும் சிறுபான்மையாக நேர்நிலைப் பாத்திரங்களிலும் நடித்திருப்பவர்.

எல்லா வகைமையிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இவர் இருப்பவர்.

வணிகரீதியில் வெற்றி பெற்ற பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
அண்மையில் வந்த ‘யானை’, ‘விருமன்’ போன்று தொடர்ந்து வெற்றிப் படங்களில் தோன்றி வருகிறார்.

கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘ரோமாபுரிப் பாண்டியன்’ தொலைக்காட்சித் தொடரிலும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘மகாபாரதம்’ தொடரிலும் நடித்து தொலைக்காட்சி வழியே ஒவ்வொரு இல்லத்தையும் தேடிச் சென்றடைந்திருப்பவர்.

‘பொன்னியின் செல்வன்’ அண்மைக்காலத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வந்திருக்கும் படம். அந்தப் படத்தில் ஓஏகே சுந்தர் நடிக்கவில்லை என்றாலும், ‘பொன்னியின் செல்வன்’ இவர் வாழ்க்கையோடு கலந்து தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

இவரைப் பொறுத்தவரை, ‘பொன்னின் செல்வன்’ கதையில் ஏற்கெனவே நடித்தவர். அந்த அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது,

“2002-ல் களில் சிதம்பரத்தில் இருந்து வந்த ஒரு நண்பர் பொன்னியின் செல்வன் கதையைப் படமாக எடுக்க இறங்கினார். நானும் அதில் பார்த்திபன் என்ற பல்லவன் பாத்திரத்தில் நடிக்க, படப்பிடிப்புகள் சுமார் ஒரு மாதம் போல சில நாட்கள் நடந்தன. ஆனால் படத்தைத் தொடர முடியவில்லை. அது மட்டுமல்ல தொலைக்காட்சி மூலம் பிரபலமான இயக்குநர் நாகா 2008-ல் .பொன்னியின் செல்வன்’ கதையைத் தொடராக்க, களத்தில் இறங்கினார். சினி விஸ்டாஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.குடைவரைக் கோயில் செட் எல்லாம் போட்டார்கள். தமிழ் கன்னட மொழிகளில் உருவாவதாக இருந்தது. தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ என்றும் கன்னடத்தில் ‘காவேரி மைந்தன்’ என்றும் பெயர் எல்லாம் தேர்வு செய்து சூட்டப்பட்டது.ஆனால் அந்தக் கனவு நிறைவேறாமல் போய் விட்டது.

அதில் நான் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடித்தேன்.அந்தப் பாத்திரத்தில் நடித்து சுமார் 30 நாட்கள் படபிடிப்பு நடந்தது.ஆனால் அந்தத் தொடர் முயற்சியும் தொடரவில்லை.

இப்படி இரண்டு பொன்னியின் செல்வன் முயற்சிகளிலும் நான் நடித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் அவை வளராமல் நின்று விட்டன.

அதே சமயம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் தோற்றத்தைப் பார்த்து நான் வியந்து போனேன் .அவருக்கு எனது பாராட்டுக்கள்.அவர் தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருந்தார்.

கல்கியின் ‘பொன்னின் செல்வன்’ கதையை நான் படித்திருக்கிறேன். அதில் உள்ள அனைத்து பாத்திரங்களும் எனக்கு அத்துப்படி. நான் ஒவ்வொரு பாத்திரமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வேன். இந்தப் பாத்திரத்தில் நாம் நடிப்பதாக இருந்தால் எப்படி நமதுதோற்றமும் உடல் மொழியும் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் கற்பனை செய்து கொள்வேன். அந்த அளவிற்கு அந்தக் கதை எனக்குள் ஆழமாக இறங்கிவிட்டது.

மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் என்னை எப்படித் தவற விட்டார்கள் என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. ஏன் எனக்கு இப்படித் தோன்ற வேண்டும்? ஏதோ நாம் நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நான் நினைத்தேன். ஆனால் பலரும் இது பற்றி விசாரித்த போது தான் அவர்கள் என்னையும் தங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதனால்தான் அந்தப் படத்தைப் பார்த்த பலரும் என்னிடம் கேட்ட கேள்வி நீ எப்படி மிஸ் ஆனாய் என்பது தான்.
இப்படிக் கேட்டவர்களில் நடிகர் எம் .எஸ். பாஸ்கர் முக்கியமானவர்.அவர், உங்களை எப்படி மிஸ் செய்தார்கள்? என்று கேட்டார்.

நான் சரித்திரக் கதைக்கு புதியவன் அல்ல. கலைஞர் எழுதிய ‘ரோமாபுரிப் பாண்டியன்’ தொடரில் நான் கரிகாலனாக நடித்திருக்கிறேன்.அதை இயக்குநர் தனுஷ் இயக்கி இருந்தார்.பெரும்பகுதி ஜெய்ப்பூர் அரண்மனைகளில் படப்பிடிப்பு நடந்தது.
எங்கள் படப்பிடிப்பைப் பார்க்க அவர் திடீரென்று ஒரு நாள் கோல்டன் பீச் வந்தது, அவர் முதல்வராக இருந்தபோது இன்ப அதிர்ச்சியாக அவர் என்னை அழைத்ததும் நாங்கள் குடும்பத்துடன் போய் அவரைச் சந்தித்துப் பேசியது எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.கலைஞர் தொலைக்காட்சியில் வந்த ரோமாபுரிப் பாண்டியன் தொடரை தினசரி அவர் பார்த்து ரசித்தது பற்றி எல்லாம் கூறினார். அதன் 502வது எபிசோடு வந்த போது அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் நடந்த கேடயம் வழங்கும் விழாவில்,திடீரென என்னை அழைத்துப் பேச வைத்த போது, கலைஞர் முன்னிலையில் நான் பேசியது மறக்க முடியாத தருணம்.

வரலாற்றுக் கற்பனையான ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ படத்திலும் நான் நடித்துள்ளேன்.சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘மகாபாரதம்’ தொடரில் மிக முக்கியமான பீஷ்மர் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன்.அந்த அனுபவம் மறக்க முடியாதது.

படங்கள், தொடர்கள் மட்டுமா?

‘வேலுநாச்சியார்’ நாடகத்தில் நான் பெரிய மருது பாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த நாடகம் சென்னை, மதுரை என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவின அட்லாண்டா, நியூயார்க் போன்ற பல வெளிநாட்டுப் பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டுப் பாராட்டப்பட்டது” என்கிறார்.

நாகா இயக்கத்தில் தொடங்கப்பட்ட தொடரான ‘பொன்னியின் செல்வன்’ கதையில் இவரது பாத்திரப்படைப்பு எப்படி இருந்திருக்கும்?அதற்கான ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்.

“நான் பி.வாசு அவர்கள் இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் ரஜினி சாருடன் நடித்துக் கொண்டிருந்தேன் .அப்போது கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கும் நேரம்.அப்போது ரஜினி சார் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.அந்தச் சூழலில் என்னிடம் நாகா இயக்கத்தில் நான் நடித்ததை கேள்விப்பட்டு அதன் போட்டோ இருக்கா ?என அவர் கேட்டிருந்தார்.

நான் எடுத்து வந்து காட்டிய போது அவர் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினார். பிரமாதமாக மிரட்டலாக வந்திருப்பதாகக் கூறினார் அது மட்டுமல்ல அந்தப் பாத்திரம் தனக்குப் பிடிக்கும் என்றும் கூறினார். அப்போது தான் நான் சொன்னேன். அப்போது நான் ஹரி இயக்கிய வேல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் பகலெல்லாம் ‘வேல்’ படத்தின் படப்பிடிப்பு, இரவில் நாகாவின் இயக்கத்தில் படப்பிடிப்பு என்று நடக்கும்.

அந்தப் பாத்திரத்திற்காக மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மேக்கப் போடுவோம். அதிலிருந்து படப்பிடிப்பு தொடங்கி அதிகாலை ஐந்து மணி வரை தொடரும் என்று அந்த அனுபவத்தைக் கூறியதும் ரஜினி சார் வியந்து கேட்டுக் கொண்டிருந்தார்”

ஓஏகே சுந்தரை பொறுத்தவரை ஒரு முறை நடிப்பு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதன் ரகசியம் என்ன என்று கேட்டோம்.

“நான் ஒரு இயக்குநரின் நடிகனாகவே என்றும் என்னை நினைத்துக் கொள்வேன் அப்படியே எப்போதும் உணர்வேன்.

அவர்களுக்கு எந்த அளவுக்கு சௌகர்யமாக என் பங்களிப்பு வழங்க முடியுமோ அந்தளவுக்கு கொடுக்கவே முயற்சி செய்வேன்.
அவர்களுக்குத் திருப்தி வரும் வரை எத்தனை முறை கேட்டாலும் நடித்துக் கொடுப்பேன். அந்தப் பாத்திரம் நன்றாக வருவதற்காக என்னால் முடிந்தளவு ஹோம் ஒர்க் செய்வேன் .இதனால் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் அழைக்கிறார்கள்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறேன். அவரது ‘ஐயா’, ‘வேல்’, ‘வேங்கை’, ‘பூஜை’, ‘சாமி 2’ , ‘யானை’ என்று ஆறு படங்களில் நடித்திருக்கிறேன்.இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் ஆறு படங்கள், இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் ஆறு படங்கள் என்று நான் தொடர்ந்து நடித்துள்ளேன்.

நடிகர்,இயக்குநர் அர்ஜுன் தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார். அது மட்டுமல்ல அவர் இயக்கிய கன்னடப் படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அந்த அளவிற்கு எங்கள் நட்புறவு தொடர்கிறது.

நடிகர் ஜெயம் ரவியுடன் நான் மூன்று படங்களில் நடித்துள்ளேன். மூன்றும் வெற்றிப் படங்கள் தான். அவர் கேட்டார் நீங்கள் என்னுடன் நடித்த மூன்று படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.நம் காம்பினேஷன் நன்றாக இருக்கிறது என்றார்.அது அவரது பெரிய மனதைக் காட்டுகிறது என்றாலும் அவை அதிர்ஷ்டமான வாய்ப்புகள் என்றுதான் கூற வேண்டும்.
இயக்குநர் சிறுத்தை சிவாவும் எனக்குக் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார் .அவரது ‘விஸ்வாசம்’ என்னை பட்டி தொட்டி எங்கும் அஜித் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

சசிகுமாரின் ‘கிடாரி’ படத்தில் எனக்கு நல்ல பாத்திரம்.அவருடன் தொடர்ந்து பயணம் செய்கிறேன்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறேன் அண்மையில் கன்னடத்தில் நான் நடித்த ‘தத்தா’ என்ற படம் வெளியானது.
இந்தியில் கே .சி. பொக்காடியாவின் ‘ராக்கி’ படத்தில் நடித்தேன். அப்போது அவர் சொன்னார்,”இந்தி கற்றுக் கொண்டு இங்கேயே வந்து விடுங்கள் ”என்றார்.

எப்படித் தொடர்ந்து ஒரே இயக்குநர் படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
ஒரு முறை அவர்கள் படத்தில் நடித்து விட்டால் நான் அவர்களுடன் நண்பராகி விடுவேன். படத்தில் வில்லனாக நான் தோன்றினாலும் எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எளிமையாக நடந்து கொள்கிறேன். அதனால் எங்களுக்குள் ஒரு நல்ல நட்புறவு வளர்ந்து விடும். அதனால் தான் இந்த இயக்குநர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்”

சினிமாவில் இதுவரையிலான அனுபவங்களில் உணர்வது என்ன?

“நான் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அதனால்தான் மேடை நாடக அனுபவம் முதல் தொலைக்காட்சித் தொடர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் வரை நான் நடித்து வருகிறேன். அண்மையில் ‘குயின் ‘வெப் சீரிஸில் திருநாவுக்கரசு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன்.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நல்ல வாய்ப்பு பறிபோய்விடும். அப்படி சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் அனிமேஷன் படத்திற்கு வந்த எனக்கான வாய்ப்பு தவறிப்போய் விட்டது.இப்படி நிறைய உண்டு. அப்போது வருத்தமாக இருக்கும். அதே சமயம் இப்படி நினைத்துக் கொள்வேன், ‘நமக்குக் கடவுள் என்ன கொடுக்க நினைக்கிறாரோ அதுதான் அமையும்’ என்று.
முயற்சிகள் தொடர வேண்டும்.விடா முயற்சி வெற்றி தரும் என்பதே சினிமாவில் நான் கற்று இருக்கும் எளிய பாடம்.

அண்மையில் சந்தித்த மகிழ்ச்சியான அனுபவம் என்ன?

“‘யானை’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ‘விருமன்’ படத்திலும் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. என் கதாபாத்திரங்களை இனம் கண்டு விசாரிக்கிறார்கள். ‘கிடாரி’ படத்தின் என் நடிப்பைக் குறிப்பிட்டு ஆனந்த விகடன் பாராட்டி எழுதியிருந்தது மறக்க முடியாது.

நான் இயக்குநர்களில் மூத்தவர்கள் இளையவர்கள் என்று பார்ப்பதில்லை. எல்லா இயக்குநர்களையும் திறமைசாலிகளாகவே நினைக்கிறேன். அனைத்து விதமான இயக்குநர்கள் இயக்கும் படங்களிலும் நடிக்க வேண்டும். இப்பொழுது ட்ரண்டில் உள்ள இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி, கார்த்திக் சுப்பராஜ் போன்ற இளைஞர்களின் படங்களிலும் நடிக்க ஆசை.

நான் ஒரு நடிகன் எனக்குள் பாத்திரங்களில் நடிப்பதற்கு எந்த பேதங்களும் கிடையாது. நடிப்புக்காக எதையும் செய்வேன். நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற பாகுபாடு எதுவும் நான் பார்ப்பதில்லை. ஆனால் பெரும்பாலும் நெகடிவ் பாத்திரங்களே கொடுக்கிறார்கள். ஆனால் பலரும் நம்ப முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஹியூமர் நன்றாக வரும். பல வில்லன்கள் இன்று காமெடியன்களாக மாறி இருக்கிறார்கள். எனக்கு நகைச்சுவை வாய்ப்புகள் கொடுத்தால் நன்றாக நடிப்பேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.ஒரு காலத்தில் வில்லத்தனமான நடிப்பில் புகழ் பெற்ற சத்யராஜ் , ஆனந்தராஜ் போன்றவர்கள் எல்லாம் இப்போது நகைச்சுவையில் கலக்குகிறார்கள் அல்லவா?”

இப்போது நடித்து வருபவை?

“அண்மையில் வெளிவந்த ‘ரத்தசாட்சி ‘படத்தின் நான் முதலமைச்சர் எம்ஜிஆராக நடித்திருந்தேன். வடிவுடையான் இயக்கத்தில் ‘நாகபைரவி’ என்கிற படத்தில் நடித்துள்ளேன்.இது தமிழ். தெலுங்கு ,ஹிந்தி என்று உருவாகிறது.

சிவ ராகவேந்தர் இயக்கும் ‘கொலைத் தொழில்’ படத்தில் நடித்துள்ளேன். அதில் ஒரு காவல்துறை அதிகாரியாக வருகிறேன்.
இந்தக் கதை கோயம்புத்தூரில் இருந்து கேரளா செல்லும் வித்தியாசமான கதை.

ஜெயம் ரவியுடன் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ படத்தில் நடிக்கிறேன். சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் சிவஞானம் இயக்கும் ‘ஒன் டு ஒன்’ படத்தில் நடிக்கிறேன்.மேலும் சில புதிய படங்கள் வந்துள்ளன” என்கிற அவரது கண்களில் நம்பிக்கை மின்னுகிறது.