பிளான் பண்ணி பண்ணனும் விமர்சனம் : ரசிகர்கள் இரண்டு மணி நேரம் ஜாலியா இருக்க இன்னமும் பிளான் பண்ணி பண்ணியிருக்கலாம்

0
173

பிளான் பண்ணி பண்ணனும் விமர்சனம் : ரசிகர்கள் இரண்டு மணி நேரம் ஜாலியா இருக்க இன்னமும் பிளான் பண்ணி பண்ணியிருக்கலாம்

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

ஐடி ஊழியர்களான ரியோவும் பால சரவணனும் நண்பர்கள். தங்களின் குடும்பத்துடன் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை அவர்கள் ஏற்பாடு செய்ய, அதில் சினிமா நடிகை ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர்.  அந்த நடிகைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணமும், பால சரவணனின் தங்கை ஆனந்தி’ (பூர்ணிமா ரவி) யும் காணாமல் போகின்றனர். ரியோவும் பால சரவணனும் பூர்ணிமா ரவியை தேடி செல்கின்றனர். இதையடுத்து பூர்ணிமா ரவி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக வீட்டிலிருந்து நாயகி ரம்யா நம்பீசனின் உதவியோடு ஓடிவிட்ட உண்மையை இவர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரம்யா நம்பீசனை அழைத்துக்கொண்டு ரியோ, பாலசரவணன் இருவரும் ஆனந்தி திருமணத்தை நிறுத்த ரம்யா நம்பீசன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். போன இடத்தில் பூர்ணிமா ரவி திருமணம் நடந்ததா, இல்லையா? இறுதியில் தொலைந்த பணத்தை ரியோ, பால சரவணன் இருவரும் கண்டுபிடித்தார்களா? பால சரவணனின் தங்கைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

நாயகன் செம்பியனாக ரியோ ராஜ், நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் ரியோ கதை தேர்வில் நிறைய கவனம் செலுத்த வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிப்பில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பால சரவணன், மிகப்பெரும் பலமான கதாப்பாத்திரத்தின் முக்கியத்தை நன்றாக உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்கையாக வரும் பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக நடித்து இறுதியில் மூச்சு விடாமல் ஒரே டேக்கில் லென்த்தானதொரு வசனத்தைப் பேசி அசத்தி தூள்கிளப்புகிறார்.

முனீஸ்காந்த், தங்கதுரை, எம்.எஸ்.பாஸ்கர், அப்பாவி பணக்கார மாப்பிள்ளையாக சித்தார்த் விபின், நாயகியின் அப்பாவாக ஆடுகளம் நரேன், அம்மாவாக ரேகா, நாயகனின் அம்மாவாக விஜி சந்திரசேகர், அப்பாவாக சந்தானபாரதி, வில்லனாக மாரிமுத்து அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். பல இடங்களில் முனீஸ்காந்த், தங்கதுரை, சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ரோபோ சங்கர் வழக்கம் போல் மொக்கை காமெடியை தான் கொடுத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா மியூசிக் படத்தில் மிஸ்ஸிங்! ஆனால் சிறப்பாக அமைந்துள்ளது ராஜசேகரின் ஒளிப்பதிவு.

தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்க்கு சென்று கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பழைய டிரெண்ட்டில் ரொம்ப வீக்கான காமெடி கலந்த கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.

மொத்தத்தில் பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் காசு தந்து வரும் ரசிகர்கள் இரண்டு மணி நேரம் ஜாலியா இருக்க இன்னமும் பிளான் பண்ணி பண்ணியிருக்கலாம்!