‘தமிழ்த்திரையுலகிற்கு பேரிழப்பு.. மனோபாலா பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது’ : முதலமைச்சர் இரங்கல்!

0
182

‘தமிழ்த்திரையுலகிற்கு பேரிழப்பு.. மனோபாலா பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது’ : முதலமைச்சர் இரங்கல்!

சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

மனோபாலா 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார்.

நடிகர் மனோபாலாவின் உடல் சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. அங்கே மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விரைவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்கப்படும் எனத் தமிழ் சினிமாவின் மூத்த டைரக்டர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதே படத்தில் சில காட்சியில் நடிக்கவும் செய்தார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களிலும் சிறுசிறுவேடங்களில் தோன்றி பின்னர் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்தார்.

1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் டைரக்டராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கி உள்ளார்.

1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தார்கள். மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது. விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள்.

1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் மல்லுவேட்டி மைனர் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படம் வெளிவந்தது. முற்றுகை 1993 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது.

இந்த நிலையில், மனோ பாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. திரு. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.