கவனமாக இருங்க – ‘ருசியான உணவால் ரத்த அழுத்தம் எகிறி போனது’ ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!

0
195

கவனமாக இருங்க – ‘ருசியான உணவால் ரத்த அழுத்தம் எகிறி போனது’ ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் உணவில் உப்பு சேர்ப்பது பற்றி ருசிகரமாக பேசினார். அவர் பேசியதாவது:- நிறைய சரக்கு போட்டால், ஓ… உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன். நிறைய மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கும். நிறைய ‘தம்’ அடித்தால் நுரையீரல் பாதிக்கும். நிறைய துரித உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிட்டால் இதயம் பாதிக்கும்.

ஆனால் உப்பு அப்படி அல்ல. உப்பு ‘ஜாஸ்தி’ ஆச்சு என்றால், உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் பாதிக்கப்படும். உப்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. உப்பு கம்மி பண்ணினாலும் தப்பு தான். ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். ஒரு திருமணத்துக்கு எனது மனைவி லதா சென்றார்.

திருமண விருந்தில் உணவு சூப்பராக இருந்திருக்கிறது. உடனே சமையல்காரர் பற்றி விசாரித்திருக்கிறார். நாராயணன் என்பவரை அனைவரும் சொல்லியிருக்கிறார். அந்த சமயம் எனது வீட்டு சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை. உடனே அந்த நாராயணன் என்பவரிடம் சென்று, ‘எங்க வீட்டுக்கு சமையல்காரராக வரீங்களா?’ என்று லதா கேட்டிருக்கிறார். ‘கரும்பு சாப்பிட கூலியா…’, என்ற ரீதியில் அவரும் வந்துவிட்டார்.

சூப்பராக சமைத்தார். செம டேஸ்ட். அந்த மாதிரியான சுவையை நான் அனுபவித்ததே இல்லை. நாங்களும் நன்றாக சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம். அதேவேளை எனக்கும், என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் (பி.பி.) ஏறிக்கிட்டே இருந்தது. டாக்டர்களிடம் சென்றோம். சிகிச்சையும் எடுத்தோம். ஆனாலும் ரத்தம் அழுத்தம் குறைந்தபாடில்லை, எகிறிக்கொண்டே இருந்தது.

ஒருமுறை நண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார். ‘சாப்பாடு எப்படி இருக்கிறது?’ என்று சும்மா கேட்டேன். உடனே அவரும், ‘என்னடா சாப்பாட்டில் இவ்வளவோ உப்பு இருக்கு… இவ்ளோ ஆயில் இருக்கு… எப்படிடா சாப்பிடுறீங்க…’ என்று கோபத்தை கொட்டிவிட்டார்.

‘அய்யோ, வருடம் முழுவதும் இதைத்தானே சாப்பிடுகிறோம்’, என்று அதிர்ந்து, உடனே அனைத்தையும் மாற்றினேன். அதன்பிறகே பி.பி. குறைந்தது. அதுமாதிரி நீங்களும் கவனமாக இருங்க. உப்பு அதிகம் சாப்பிட, அதுவே பழகிவிடும். புதிதாக யாராவது சொன்னால்தான் தெரியவரும்.