கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான் – நடிகர் ரவி மரியாவின் மனம் திறந்த பேச்சு

0
105

கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான் – நடிகர் ரவி மரியாவின் மனம் திறந்த பேச்சு

பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இயக்குனர் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் யுத்த சத்தம். இதுவரை தமிழ்த் திரையுலகில் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என பல சூப்பர் ஹிட் ஃபேமிலி என்டர்டெய்னிங் படங்களைக் கொடுத்த இயக்குனர் எழில் இயக்கத்தில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது யுத்த சத்தம் திரைப்படம்.

கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் MKRP புரோடக்சன்ஸ் இணைந்து வழங்கும் யுத்த சத்தம் திரைப்படத்தில், சாய்பிரியா கதாநாயகியாக நடிக்க ரோபோ ஷங்கர், மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

`யுத்த சத்தம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன், இயக்குனர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் நாயகி சாய் பிரியா பேசியதாவது…

இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம், எழில் சார் முதல் முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார், அதில் நானும் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி சார். பார்த்திபன் சாருடன் காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் ஷீட்டில் இருக்கும்போது நிறைய அறிவுரை தந்தார். இமான் சாரின் மிகப்பெரிய ஃபேன் அவர் பாடலில் நடித்தது பெருமை. படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தபின் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற திருக்குறளை கூறினார். மேலும் “விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார். அத்துடன் வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என பேச்சை முடித்தார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

தீபாவளி படத்தில் ஆரம்பித்தது, எழில் சாருடனான பயணம், இந்த போஸ்டரை பார்த்தால் தெரியும் இது அவர் படம் போலவே இல்லை, காமெடி படத்தில் கலக்குபவர், வேறொரு மாதிரி இப்படத்தை எடுத்துள்ளார், பார்த்திபன் சாருடன் நடித்தது மிக மிக சந்தோசம், சின்ன சின்ன அசைவுகளையும் படத்தில் சொல்லிக்கொடுத்தார், எல்லோரும் மிக கடின உழைப்பை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நந்தகுமார் பேசியதாவது…

பாடல்கள் எல்லாம் கேட்டேன் மிக மிக நன்றாக வந்துள்ளது, படம் அற்புதமாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

எடிட்டர் கோபிகிருஷ்ணா பேசியதாவது…

இந்தப்படத்தில் படம் முழுக்க ஒரு போதையை வைத்திருகிறார், நான் எடிட்டில் பார்த்தேன் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு இன்னும் பிடிக்கும், வழக்கமாக எழில் சார் படத்தில் எக்கச்சக்க கேரக்டர் இருக்கும், அவர்கள் பேசுவதில் எதை கட் செய்வது என்றே தெரியாது, ஆனால் இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை அதற்கெல்லாம் சேர்த்து பார்த்திபன் சார் பேசிவிட்டார் அவர் நடிப்பில் எதை எடிட் செய்வது என்பதே தெரியவில்லை. படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது… ‘யுத்த சத்தம்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது.எழில் அவரோட எல்லாப்படத்திலேயும் எல்லா காட்சியிலும் காமெடி இருக்கனும்னு நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன் அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான் செய்த சில மாற்றங்களை இயக்குனர் எழில் நேர்மையான முறையில் கையாண்டார். இன்றைய காலகட்டத்தில் பல இயக்குனர்கள் அதை செய்வதில்லை. ஒரு இயக்குனர் நான் எழுதிய காட்சிகளையே அவர் படமாக்கும்பொழுது எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது போலும், புதிதாக அவர் சொல்லி கொடுப்பது போலவும் நடந்துகொண்டுள்ளார். ஆனால், எழில் என்னை மேடையில் பாராட்டியுள்ளார். இதுவே அவரின் நேர்மையை வெளிப்படுத்துகிறது”. இமான் போதை தரும் இசையை தருபவர் இதில் போதயையே இசையாக தந்துள்ளார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெறும். நன்றி.

மாஸ்டர் கனல்கண்ணன் பேசியதாவது…

எழிலுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பணிபுரிகிறேன். இந்தப்படத்தில் நான் தான் வேணும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு என்னை வைத்தார். எழில் படங்கள் எப்போதும் ஈஸியாக இருக்கும், இப்படம் முதல் முறையாக திரில்லர், கதையை பல முறை சொல்லி விளக்கி காட்சி அமைக்க சொன்னார்கள். அதை கேட்ட பிறகு கதை என்ன கேட்கிறது என தெளிவாக புரிந்தது. க்ளைமாக்ஸ் மட்டும் 7 நாட்கள் எடுத்தேன், இந்தப்படத்திற்கு அது அதிகம், மிக நீண்ட உழைப்பை இந்த படம் வாங்கியது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…

தீபாவளி படத்திலிருந்து எடிட்டர் ரோபோ முதல் நான் வரை எல்லோரும் எழில் சாருடன் இருக்கிறோம். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும், என்று கற்றுக்கொண்டது எழில் சாரிடம் தான். எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்க தெரிந்தவர் எழில் சார், சூரி ரோபோ சங்கர் திறமையை கணித்ததால் தான் தீபாவளி படத்தில் நடிக்க வைத்தார். நான் பார்த்திபன் சாருடன் மாவீரன் கிட்டு படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும் பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள் எப்படி ஒன்றாக படம் செய்யப்போகிறார்கள் என ஆர்வமாக இருந்தது. இந்தபடத்தில் கலக்கியுள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ரவி மரியா பேசியதாவது….

எனக்கு நன்றி சொல்ல வேண்டிய மேடை, கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான். இன்று என்னால் குணசித்திரமும் செய்ய முடியும் காமெடியும் செய்ய முடியும் என அனைவரும் எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர் தான் காரணம், அவருக்கு வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனதை கலக்கும் படங்கள் செய்தவர் மனம் கொத்தி பறவையில் காமெடியில் தன்னை நிரூபித்தார். அதே போல் இந்தப்படத்திலும் அவர் ஜெயிப்பார்.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…

எழில் யுத்த சத்தம் படம் செய்கிறார் என நான் கேள்விப்பட்ட போது நான் மிகவும் ஆச்சர்யபட்டேன், பின் பார்த்திபன் நடிக்கிறார் என கேள்விபட்டபோது புரிந்தது. எப்போதும் புதுமையை நேசிப்பவரோடு பணிபாற்றும்போது, புதுமையாக தான் இருக்கும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி,

“திரையுலகில் 32 வருடமாக இருக்கிறேன். 1000 திரைப்பட விழாக்களில் பங்கேற்று உள்ளேன். ஆனால், அந்த விழாக்களில் நடக்காதது ஒரு நிகழ்வு இந்த விழாவில் நடந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் நாயகி விழா மேடையில் திருக்குறள் கூறியுள்ளார். இதை நான் எந்த மேடையிலும் பார்த்ததில்லை. இதே போல ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் நாயகி லாஸ்லியாவின் நன்றாக தமிழ் பேசுகிறார். இதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் திரையுலகில் தமிழ் பேசும் நாயகிகளின் காலம் தலைதூக்கும் என நம்புகிறேன்” என மகிழ்ச்சியுடன் பேசினார். யுத்த சத்தம் படத்தில் நடித்துள்ள சாய் பிரியா, முருகன் திரையரங்க உரிமையாளரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் எல்லாமே ஃபெர்பக்டாக இருக்கிறது. எழில் மிக டிசிப்ளினாக இருப்பவர். எந்த விசயத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். படத்தில் அனைவருக்கும் முழு சுதந்திரம் தந்ததாக சொன்னார்கள் ஆனால் அவர் எதாவது ஒரு விசயம் தவறினால் அதை சரி செய்து விடுவார். பார்த்திபன் ஒரு ஜீனியஸ். அவர் சொல்லும் ஒவ்வொரு சிறு வார்த்தையிலும் பெரிய அர்த்தம் இருக்கும்.

இயக்குநர் எழில் பேசியதாவது….

நாம் எடுத்துகொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் நாவல் குறித்து தெரியவந்தது, நவீன் அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார். இந்தப்படம் எடுக்கலாம் என முடிவு செய்த போது,, இமான் தான் ஒரு ஹாலிவுட் படமான இர்ரிவர்ஸிபள் பட சவுண்ட் ஒன்றை காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது. படத்தின் கடைசி 20 நிமிடத்தை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபன் சார் உடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களை தருவார்கள். படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள் எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை , முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.